செவ்வாய், 28 ஜூலை, 2020


புலவனை ஆதிசேடனுக்கு இணையானவன் என்று உலகத்தவர் கூறுவர்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்


      
         புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு   

 105 கல்வியாற் பெறும் பயன்கள் இவையே என எண்ணி முயல்பவன் வெய்யில் தாங்காமல் நெளியும் பாம்புக் குட்டியைப் போன்றவன்.

நூற்பா: 110                     

புலமையின் ஆண்மையும் புகழ்ச்சியும் கருதிப்
பெறலே பயன்எனப் பெரிதுநெஞ்சு அயர்வோன்
பரிதிமுன் ஆடு பாம்புக் குருளை
அனையவன் தான்என்று அறிவார் சிலரே,

தான் கற்ற கல்விக்குக் கல்வி, செல்வம் இவற்றால் உண்டாகும் பெருமிதமும், பலராலும் பாராட்டப்படும் சிறப்புமே பயன்கள் எனவும், அதனால் அவற்றை எப்படியாவது பாடு பட்டுப் பெறவேண்டும் எனவும் கருதி வருந்தி உழைப்பவன் சூரியனுக்கு முன்னால் நெளிந்து ஆடுகின்ற பாம்புக்குட்டி போன்றனே ஆவான், ஆனால் இந்த உண்மையை அறிந்தவர் மிகச்சிலரே ஆவர் என்றவாறு,.

கல்வியாற் பெறும் பயன்கள் இவையே என எண்ணி முயல்பவன் வெய்யில் தாங்காமல் நெளியும் பாம்புக் குட்டியைப் போன்றவன் என்கிறார். பாம்பு எத்தகையதாயிருப்பினும் காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும். அவ்வாறு இப்புலவனும் பிறர் உள்ளத்தில் மதிப்பை உண்டாக்குவான், ஆனால் அந்த அச்சம் ஏதாவது ஒரு வகையில் நீங்குவது போலவே இவன் பெறும் மதிப்பும் நீங்கிவிட வாய்ப்புண்டு, எனவே இப்பயன்கள் போதா என்கிறார்.

முன் நூற்பாவில் செயற்கரிய செயல்களைத் தம் வாக்கு வன்மையால் செய்து காட்டுகிறவர்கள் ஆயிரம் நாவுடையவனும், இவ்வுலகத்தையே தாங்குபவனும், பெரும் பேரறிவு வாய்ந்தவனுமாகிய ஆதிசேடனுக்கு இணை என்றுகூறி இந்நூற்பாவில் அவ்வாற்றல் இல்லாதவன் ஒரு சாதாரணப் பாம்பு போன்றவன் என்கிறார், இலக்கண இலக்கிய நூலாசிரியர்களில் பலர் இக்கருத்தைக் கூறாததாலும், கற்றவர்கள் அனைவரும் அருஞ்செயல்களை நிகழ்த்திக் காட்டவேண்டுமென எதிர் பார்க்க முடியாததாலும் அறிவார் சிலரே என்றார். இதன் அருமை இவர் கொண்ட உவமையாலும் விளங்குகிறது. ஆதிசேடன் ஒருவன்தான், பாம்புகள் பலவாகும், பல அரவுகள் இருந்தால்தான் ஒருவன் அரவரசனாகத் திகழமுடியும் பாம்புவமை அடுத்த நூற்பாவிலும் தொடர்கிறது.



 நன்றி: 
பதிவு தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,  கௌமார மடாலயம், கோவை.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

அம்பிகை நேரில் வருவாள்


அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்
அழகரின் தங்கை வருவாள் அழகிய தேரில் அன்னை மீனாட்சி எழுந்தருள்வாள்

கோல விழியும் குரு நகையும் பிறை நிலவும்
சிவவடிவில் விளங்கிடும்
எழிலரசி அனுதினமும் அடியவர் காண
அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்

முப்பெருந்தேவி என்று உயர்மறைகள் போற்றுமே
ஐம்பூத கோள்கள் உனைப் பணிந்து பணியாற்றுமே
தமிழ் போற்றும் தேவாரம் திருவாசகம் இவையாவும் தாயே உன் பதம் போற்றுமே

செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் தாயே
தரணியை காத்தருளும் நாயகி நீயே

தீமை விலக நன்மை பெருக ஞானம் விளைய நலம் பல பெருக
ஆதவன் தொழும்  பேரொளியை தினம் துதித்து உடன் அழைக்க

அம்பிகை நேரில் வருவாள் அழகிய சுந்தரேஸருடன் அம்பிகை நேரில் வருவாள்
அழகரின் தங்கை வருவாள்
அழகிய தேரில் அன்னை மீனாட்சி எழுந்தருள்வாள்.

சிவாயநம!

நன்றி
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்,
தருமபுரி.

புதன், 22 ஜூலை, 2020

அங்கயற்கண்ணியே! அன்னை மீனாட்சியே!


பாண்டியன் வம்சத்தில் பார்வதி அம்சத்தில் அவதரித்தாய் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே.. (பாண்டியன்)

நவரத்ன பீடம் நின்று பூங்கிளி கையில் கொண்டு ராஜமாதங்கியாய் காட்சி தருவாள் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே..(பாண்டியன்)

குருபரரை பேசவைத்தாய்
பிள்ளைத் தமிழ் ஏற்றுவித்தாய்
பத்திரருக்கு பாசுரம் தந்தாய்
நக்கீரருக்கு அருள்புரிந்தாய் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே..

நரிகளை பரியாக்கினாய்
வாதவூராரை மணிவாசகனாக்கினாய் திருவிளையாடல் தினம் புரிந்தாய் தாயே மீனாட்சி
மாமதுரை வாழ் அங்கயற்கண் நாயகியே.. (பாண்டியன்).

சிவாயநம!

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஆடும் கூத்தனே!



ஆடும் கூத்தனை காண வேண்டும் - அவன்
ஆடும் கூத்தினை காண வேண்டும்  - அம்பலத்தே
ஆடும் கூத்தனை காண வேண்டும் - அவன்
ஆடும் கூத்தினை காண வேண்டும்

அவனருளால் அதைப் பாட வேண்டும் - அவன்
அழகினைப் பாடி ஆடிட வேண்டும் - அவன்
அடியார்கள் ஒன்றாய்க் கூடிட வேண்டும் - கனக
சபையில் நின்றாடும் கூத்தனை காண வேண்டும்
அவன் ஆடும் கூத்தினை காணவேண்டும்

இமயவெளியில் ஆடும் பரம்பொருளை
இதய வெளியில் காணும் வரம் அருள வேண்டும்
திங்கள்முடி கொண்டு அதில் கங்கைநதி உண்டு
நன்மங்கை இடங்கொண்டு ஆடும் கூத்தனை காண வேண்டும் அவன் ஆடும் கூத்தினை காணவேண்டும்

அண்டத்தில் உள்ளதெல்லாம் அகத்தினில் காட்டியவன்
ஆர் உயிர்க்கெல்லாம் அமுதினை ஊட்டியவன்
அன்பே சிவம் என்று அவனியில் நாட்டியவன்
அஞ்செழுத்து அம்பலத்தில் ஆடும் கூத்தனை காண வேண்டும் அவன்
ஆடும் கூத்தினை காணவேண்டும் ..

சிவாயநம!

நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா @ ஈஸ்வர்,
தருமபுரி.

வெள்ளி, 17 ஜூலை, 2020

திரைச்சீலையின் கயிறுஅற்று விழச்செய்ததும் தமிழே


92  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   
   
   புலமை இலக்கணம் - மரபியல்பு
  
   92  திரைச்சீலையின் கயிறுஅற்று விழச்செய்ததும்தமிழே

நூற்பா: 97                         

மணிநா வொடுதிரை மறைவுஅற ஒருவன்  கவிதை பாடிக்
களித்திருந் தனனே
திருமந்திரத்தூர் எனப்படும் தூத்துக்குடிக் கோயிலின் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த மணியின் நாக்கும், திருச்செந்தூர்ச் சந்நிதானத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் கயிறும் அற்று விழும்படி வீரபாண்டியப் புலவர் செந்தமிழ் பாடி மகிழ்ந்திருந்தார் என்றவாறு,
இந்நிகழ்ச்சிகள் புலவர் புராணம் வீரபாண்டியப்புலவர் சருக்கத்தில் உள்ளன.

நன்றி:
பதிவு: தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வியாழன், 16 ஜூலை, 2020

அன்னை மீனாட்சியே!



பிறை மதி சூடி நின்று
பூங்கிளி கையில் கொண்டு
மரகதப்பாவை ஆட்சிபுரிவாள்
அந்த அழகிய மதுரையில் காட்சி தருவாள் (பிறை)

முத்தமிழ் கோவில் சென்று
மூன்று கோடி சிற்பம் கண்டு
வைரமுடி தரித்து ஆட்சிபுரிவாள் - அந்த அழகிய மதுரையில்
காட்சி தருவாள்(பிறை)

சொற்பதம் மாலை சாற்ற
பொற்பதம் பணிந்து போற்ற
இருசுடர் விழியால்
ஆட்சி புரிவாள் அந்த
அழகிய மதுரையில் காட்சி தருவாள்(பிறை)

கொடுநோய்களை தீர்க்க
மாமருந்தாகி உலகினை காக்க
சொக்கனை தன்னில் கொண்டு ஆட்சிபுரிவாள்
அழகிய மதுரையில் காட்சி தருவாள்(பிறை).

சிவாயநம!

ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்,
தருமபுரி.

புதன், 15 ஜூலை, 2020

கந்தசாமிப் புலவருக்காக முருகன் சேரன் கனவில் தோன்றல்   


90  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்    




            புலமை இலக்கணம் - மரபியல்பு  

90 கந்தசாமிப் புலவருக்காக முருகன் சேரன் கனவில் தோன்றல்   

நூற்பா: 95     

சூரன்ஊர் நடுங்கும் தூதுஉடை ஒருவனை
சேரன்ஊர்க்கு அனுப்பிச் செம்பொன் பெற்றுக்
களிகூர்ந் தனன்ஒரு கவிப்புல வோனே

சூரபதுமனின் தலைநகரமாகிய வீரமயேந்திரப் பட்டினத்தையே அச்சமுறச் செய்யும் தூதுவராம் வீரவாகு தேவரைத் தன் இளையவனாகப் பெற்றுள்ள முருகப் பெருமானைக் கந்தசாமிப் புலவர் என்னும் ஒரு பாண்டிநாட்டுக் கவிஞர் சேர மன்னனின் கனவில் பொருள் வேண்டித் தூது விடுத்துப் பயன்பெற்று மகிழ்ந்தார் என்றவாறு.

இவ்வரலாறு தமிழலங்காரத்தில் “ஈரம் பொருந்தத் தமிழாற் றுதிக்கும் எழிற்புலமைக் காரன் கலிறயச் செய்வது நாடிக்கதிர்அயிற்கை வீரன் தனது பெருமைஎல்லாம்விட்டு விட்டொருக்கால் சேரன் கனவி னிடைதூதன் ஆம்எனச் சென்றனனே” எனச் சுருக்கமாகவும் புலவர்புராணம் கந்தசாமிப்புலவர் சருக்கத்தில் ஓரளவு விரிவாகவும் கூறப்பட்டுள்ளது.



நன்றி: பதிவு தொல்காப்பியர் தொண்டன் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


செவ்வாய், 14 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 6


கற்பகத்தருவே கருணையங்கடலே கந்தனே உனை மறவேன்

அறுமறை போற்றும் திருமுறை நீயே
அமரர்கள் போற்றும் ஈசனின் சேயே

காண்பதெல்லாம் உன் திருமுகமே
கற்பதெல்லாம் உன் திருப்புகழே

அறுப்பெரும் சுடரே அற்புதமே
சிரம் தாழ்ந்து (நான்) வணங்கும் பொற்பதமே!

நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
 நா. ராஜா,
(தகடூர்) தருமபுரி.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

சிவப்பிரகாசர் இட்ட சாபம்


89 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

புலமை இலக்கணம்-மரபியல்பு 

 89  கை விலங்கு ஒடித்தது

நூற்பா: 94     
                     
வெள்ளியால் சமைத்த விலங்கு முறிபடத்   தெள்ளிய                          பனுவல் செப்பினன் ஒருவனே.

இதன்பொருள்:

வடமலையப்ப மன்னனால் இடப்பெற்ற வெள்ளிக் கைவிலங்கு தறித்துப்போகுமாறு சிறைவிடந்தாதி என்னும் திருச்செந்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதியைத் தென்குருகையூரைச் சேர்ந்த ஒரு வைணவர் பாடினார் என்றவாறு. இவ்வரலாறு புலவர் புராணம் இருவயிணவர் சருக்கத்தில் முதல் 29 கவிகளில் கூறப்பட்டுள்ளது. இச்சிறைவிடந்தாதி அண்மையில் அச்சாகியுள்ளது.


நன்றி: பதிவு
தொல்காப்பியர் தொண்டன் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், உலகத்தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர  சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

சனி, 11 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 5


சிவசக்தி பாலா சரணம் சரணம்
சிங்காரவேலா சரணம் சரணம்
வனவள்ளி தேவா சரணம் சரணம்
வண்ணமயில் வாகனா சரணம் சரணம்
சின்னஞ்சிறு பாலா சரணம்
சரணம்
சிங்காரரூபா சரணம் சரணம்
சிவகுரு நாதா சரணம் சரணம்
சிவகாமி மைந்தா சரணம்
சரணம்
கஜமுகசோதரா சரணம் சரணம்
கஜவள்ளி நாதா சரணம் சரணம்
ஷண்முகநாதா சரணம் சரணம்
சற்குருநாதா சரணம் சரணம்..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..

நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா @ ஈஸ்வர்,
தருமபுரி.

வெள்ளி, 10 ஜூலை, 2020


தமிழின் ஆற்றல் 



85 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

புலமை இலக்கணம்-மரபியல்பு
             
85   தமிழின் ஆற்றல் 

நூற்பா: 90                             

செழியன் மனையொடு சிவிகை தாங்கவும்
கழகப் பலகை கண்டு மறையவும்
சிலைத்தலை அசையவும் செப்பும் புலமை
பொய்யா மொழியினது என்னும் புவியே,

பொய்யாமொழிப் புலவரின் கவிதையாற்றல் தன்னைப் பல்லக்கிலேற்றிப் பாண்டியன் அவன் மனைவியோடு சுமக்கச் செய்தல், பொற்றாமரைக் குளத்திலே தோன்றாதிருந்த பழைய சங்கப்பலகை  வெளிப்பட்டு மீண்டும் மறைதல், மண்டபத்திருந்த சங்கப் புலவரின் கற்சிலைகள் தம்மோடு இவர் ஒத்தவர் என்று ஒப்பித் தலையசைத்தல் போன்ற அதிசயங்களைச் செய்யவல்லது என்று மக்கள் மொழிவர் என்றவாறு.
இவ் வரலாறுகளும் புலவர் புராணத்திலும் தனிப்பாடல்களிலும் உள்ளன.


நன்றி: பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 8 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 4


தீராத வினையெல்லாம் தீரும்
தீராத வினையெல்லாம் தீரும்
வாகை சூடி தோகையாடி வரும் - வெற்றி வாகை சூடி தோகையாடி வரும்  வேலனை வணங்கிட தீராத வினையெல்லாம் தீரும்..

விளையாத விளைவெல்லாம் விளையும்(2)
புரியாத பொருளெல்லாம் புரியும்
காணாத காட்சியெல்லாம் காணும்

சூரர் வதம் கொண்டு சேவற்இடங்கொண்டு
வாகை சூடி தோகை நின்றாடும் வேலனை வணங்கிட தீராத வினையெல்லாம் தீரும்..(2)

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

சிவாயநம!




நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

செவ்வாய், 7 ஜூலை, 2020


ஆறு  வழிமாறவும் கல்உரு
மகிழவும் செய்த தமிழ்.

82 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

 

புலமை இலக்கணம் -மரபியல்பு

82 ஆறுவழிமாறவும் கல்உரு மகிழவும் செய்த தமிழ்.

நூற்பா: 87                                

வேறுஇடத்து ஆறு விலகி ஓடவும்
கல்உரு மகிழவும் கவிதை பாடினர்
இருபுல வோர்என்று இயம்புநர் பலரே.

தாம் பாடிய திருவாமாத்தூர்க் கலம்பகக் கவிக்கேற்ப அவ்வூரில் பம்பையாறு வழிமாறிச் செல்லும்படியும், ஒரு குளக் கரையில் இருந்த விநாயகரின் கற்சிலை தம் பாடலால் மகிழும் படியும் இரட்டைப் புலவர்கள் பாடினர் என்றவாறு

இவ் வரலாற்றைப் புலவர் புராணம் இரட்டைப் புலவர் சருக்கத்தில் காணலாம். கல்லுரு மகிழப் பாடியது “தம்பியோ பெண்திருடி” எனத் தொடங்கும் தனிப்பாடல் .

நன்றி: 
பதிவு புலவர் ஆ.காளியப்பன்அவர்கள், தலைவர், தொல்காப்பியர்
தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


திங்கள், 6 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 3


மாதவம் செய்திடல் வேண்டும்
மால் மருகனை ஷண்முகனை வணங்கிட மாதவம்
செய்திடல் வேண்டும்

சின்ன சங்கரா சிங்கார வேலவா 
சின்ன சங்கரா சிங்காரவேலவா 
அறுமுக ஈஸ்வரா உமையவள் பாலகா 
ஆதி தெய்வமான முருகனை வணங்கிட மாதவம்
செய்திடல் வேண்டும்

கந்தன் அவன் பெயரை சொல்ல சொல்ல கர்மவினை தீரும் 
மெல்ல மெல்ல 
விதி என்றும் வினை என்றும் ஏன் செல்ல வேண்டும்
கதி என்று சரண் அடைய அவன் அருள் ஒன்றே போதும்

சிங்கார மயிலேறி செவ்வேல் கொண்டு வந்தருள வேண்டும் 
வேண்டும் வரம் யாவையும் தந்தருள வேண்டும்.

சிவாயநம




நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

நக்கீரர் 999 புலவர்களை விடுவித்தல்


81வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்    
  
புலமை இலக்கணம் - மரபியல்பு
         
81 நக்கீரர் 999 புலவர்களை விடுவித்தல்.

நூற்பா: 86                             

தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்பது
மாதவர் தன்னொடு மாளா வண்ணம்
ஒருதமிழ்ப் புலவன் உரைபயின் றானே. 86

திருப்பரங்குன்றக் குகையில் கற்கிமுகி எனப் பெயருடைய பூதம் தான் உண்பதற்காக அடைத்து வைத்திருத்த 999 பேர்களுடன் தாமும் இறந்துவிடாதவாறு நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடினார் என்றவாறு.


நன்றி:பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர்,தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

சனி, 4 ஜூலை, 2020

குரு பூர்ணிமா

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!


உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதி குருவாக விளங்கக் கூடிய முருகப் பெருமானை வணங்கி அந்தியூர், புதுக்காடு, மலைக்காரன் தோட்டம் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டும், அங்கு வருகின்ற பக்தர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப ஜீவநாடியில் தோன்றி வாக்கு உரைக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்திக்கு அபிடேகம், ஆராதனைகள் செய்து அங்கு வருகின்ற பக்தர்களுக்கு ஜீவநாடி மூலம், பல்வேறு அதிசயங்களை உரைத்துக் கொண்டு இருக்கும் எங்கள் குருநாதராகிய ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளை குரு பூர்ணிமா நன்னாளில் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.🙏🙏🙏


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்கள்.

வெள்ளி, 3 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 2


துள்ளி விளையாடி வரும் தோகைமயில் மேலே
வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருக்கும் கந்தவேலே

குறுநகை தவழ்ந்திடும் குருகுகப் பெருமானே
குறைகளை நீக்கிடும் குருபர பெருமானே

இன்பம் துன்பம் எதிலும் நீ துணை வர வேண்டும் வெள்ளிமலைநாதன் எங்கள் பெருமானே

கண்ணிமை போல் காத்தருள வேண்டும் பன்னிரு கைகளால் சேர்த்தருள வேண்டும்
வெள்ளிமலை நாதன் எங்கள் பெருமானே

பிறவிப்பிணி தீர்க்கும் பேரின்ப நெறி சேர்க்கும் கந்தனே கலியுகக் கடவுளே கண்கண்ட தெய்வமே
வெள்ளிமலை நாதனே எங்கள் பெருமானே..

சிவாயநம!


நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

வியாழன், 2 ஜூலை, 2020


ஔவைப்பிராட்டியின்  சிறப்பு

79 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

புலமை இலக்கண- மரபியல்பு 

  79 ஔவைப்பிராட்டின்  சிறப்பு

நூற்பா: 84                                
படுபலா உருள்பனை பழம்தரப் பைந்தமிழ்
பாடிய கிழவியும் பழுதுஇலா தவளே
வெட்டப்பட்ட பலா மரமும், துண்டிக்கப்பட்டு உருளும்  84

இதன்பொருள்:
பனங்கட்டையும் தளிர்த்துக் கனி தருமாறு தமிழிசைத்த ஒளவையாரும் குற்றமற்ற புலமைச் சிறப்புடையவள் ஆவாள் என்றவாறு.

விளக்கம்:
இந்நூற்பா ஒளவையார் பாடல்களாக வழங்கப்படும், “கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா”, “கூழைப் பலாத் தழைக்க”, “திங்கட்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்” என்னும் தனிப்பாடல்களைப் பற்றிய வரலாறுகளை ஒட்டி எழுந்தது.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.




நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.