புதன், 15 ஜூலை, 2020

கந்தசாமிப் புலவருக்காக முருகன் சேரன் கனவில் தோன்றல்   


90  வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்    




            புலமை இலக்கணம் - மரபியல்பு  

90 கந்தசாமிப் புலவருக்காக முருகன் சேரன் கனவில் தோன்றல்   

நூற்பா: 95     

சூரன்ஊர் நடுங்கும் தூதுஉடை ஒருவனை
சேரன்ஊர்க்கு அனுப்பிச் செம்பொன் பெற்றுக்
களிகூர்ந் தனன்ஒரு கவிப்புல வோனே

சூரபதுமனின் தலைநகரமாகிய வீரமயேந்திரப் பட்டினத்தையே அச்சமுறச் செய்யும் தூதுவராம் வீரவாகு தேவரைத் தன் இளையவனாகப் பெற்றுள்ள முருகப் பெருமானைக் கந்தசாமிப் புலவர் என்னும் ஒரு பாண்டிநாட்டுக் கவிஞர் சேர மன்னனின் கனவில் பொருள் வேண்டித் தூது விடுத்துப் பயன்பெற்று மகிழ்ந்தார் என்றவாறு.

இவ்வரலாறு தமிழலங்காரத்தில் “ஈரம் பொருந்தத் தமிழாற் றுதிக்கும் எழிற்புலமைக் காரன் கலிறயச் செய்வது நாடிக்கதிர்அயிற்கை வீரன் தனது பெருமைஎல்லாம்விட்டு விட்டொருக்கால் சேரன் கனவி னிடைதூதன் ஆம்எனச் சென்றனனே” எனச் சுருக்கமாகவும் புலவர்புராணம் கந்தசாமிப்புலவர் சருக்கத்தில் ஓரளவு விரிவாகவும் கூறப்பட்டுள்ளது.



நன்றி: பதிவு தொல்காப்பியர் தொண்டன் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


1 கருத்து: