செவ்வாய், 28 ஜூலை, 2020


புலவனை ஆதிசேடனுக்கு இணையானவன் என்று உலகத்தவர் கூறுவர்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்


      
         புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு   

 105 கல்வியாற் பெறும் பயன்கள் இவையே என எண்ணி முயல்பவன் வெய்யில் தாங்காமல் நெளியும் பாம்புக் குட்டியைப் போன்றவன்.

நூற்பா: 110                     

புலமையின் ஆண்மையும் புகழ்ச்சியும் கருதிப்
பெறலே பயன்எனப் பெரிதுநெஞ்சு அயர்வோன்
பரிதிமுன் ஆடு பாம்புக் குருளை
அனையவன் தான்என்று அறிவார் சிலரே,

தான் கற்ற கல்விக்குக் கல்வி, செல்வம் இவற்றால் உண்டாகும் பெருமிதமும், பலராலும் பாராட்டப்படும் சிறப்புமே பயன்கள் எனவும், அதனால் அவற்றை எப்படியாவது பாடு பட்டுப் பெறவேண்டும் எனவும் கருதி வருந்தி உழைப்பவன் சூரியனுக்கு முன்னால் நெளிந்து ஆடுகின்ற பாம்புக்குட்டி போன்றனே ஆவான், ஆனால் இந்த உண்மையை அறிந்தவர் மிகச்சிலரே ஆவர் என்றவாறு,.

கல்வியாற் பெறும் பயன்கள் இவையே என எண்ணி முயல்பவன் வெய்யில் தாங்காமல் நெளியும் பாம்புக் குட்டியைப் போன்றவன் என்கிறார். பாம்பு எத்தகையதாயிருப்பினும் காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும். அவ்வாறு இப்புலவனும் பிறர் உள்ளத்தில் மதிப்பை உண்டாக்குவான், ஆனால் அந்த அச்சம் ஏதாவது ஒரு வகையில் நீங்குவது போலவே இவன் பெறும் மதிப்பும் நீங்கிவிட வாய்ப்புண்டு, எனவே இப்பயன்கள் போதா என்கிறார்.

முன் நூற்பாவில் செயற்கரிய செயல்களைத் தம் வாக்கு வன்மையால் செய்து காட்டுகிறவர்கள் ஆயிரம் நாவுடையவனும், இவ்வுலகத்தையே தாங்குபவனும், பெரும் பேரறிவு வாய்ந்தவனுமாகிய ஆதிசேடனுக்கு இணை என்றுகூறி இந்நூற்பாவில் அவ்வாற்றல் இல்லாதவன் ஒரு சாதாரணப் பாம்பு போன்றவன் என்கிறார், இலக்கண இலக்கிய நூலாசிரியர்களில் பலர் இக்கருத்தைக் கூறாததாலும், கற்றவர்கள் அனைவரும் அருஞ்செயல்களை நிகழ்த்திக் காட்டவேண்டுமென எதிர் பார்க்க முடியாததாலும் அறிவார் சிலரே என்றார். இதன் அருமை இவர் கொண்ட உவமையாலும் விளங்குகிறது. ஆதிசேடன் ஒருவன்தான், பாம்புகள் பலவாகும், பல அரவுகள் இருந்தால்தான் ஒருவன் அரவரசனாகத் திகழமுடியும் பாம்புவமை அடுத்த நூற்பாவிலும் தொடர்கிறது.



 நன்றி: 
பதிவு தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,  கௌமார மடாலயம், கோவை.

1 கருத்து: