வெள்ளி, 22 செப்டம்பர், 2017

காகபுசுண்டர் நாடியில் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம்

 காகபுசுண்டர் நாடியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரம் சிரவையாதீனம் இரண்டாம் குரு மகா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களால் இயற்றப்பட்டுள்ள வண்ணக்கவி எனும் நூலில் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளது பூர்வ அவதார சரித்திரச் சுருக்கம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ளது. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் கவி பாடுவதில் வல்லவராகி கொங்கு நாட்டு கச்சியப்பர் என அனைவரும் மெச்சும்படி வாழ்ந்தவர். வைணவ அடியார்களின் பெருமைகளை விளக்கும் பக்த மான்மியம் எனும் நூல் சுவாமிகள் எழுதிய பாடல்களில் மணிமகுடம். சுவாமிகள் பாடிய இன்னுமொரு நூலான மருதமலை அலங்காரம் முருகனது அடியார்கள் அனைவரும் ஓத வேண்டிய பதிகமாகும். இப்படி 15000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உள்ளார்கள். தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களின் பாடல்களையெல்லாம் ஆய்வு செய்து சிரவை நான்காம் சந்நிதானம் எமது ஞானதேசிகர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் முனைவர் பட்டம் பெற்று பெருமை சேர்த்துள்ளது இப்போது நினைத்து போற்றப்பட வேண்டிய ஒன்றாம். இவ்வளவு பெருமை மிக்க தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் தமது பரம குருவாகிய தாத்தா சுவாமிகள் என்று நமது சுவாமிகளால் அழைக்கப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரத்தை காகபுசுண்டர் நாடி மூலம் ஆதாரம் எடுத்து கூறி உள்ளது நமக்கெல்லாம் கிடைத்த பொக்கிஷமாகும். இதில் இருந்து உண்மையான நாடிகள் சித்தர்கள் மூலம் கிடைத்து அதன் மூலம் பல ரகசியங்கள் வெளிவந்துள்ளது நிரூபணமாகின்றது. இப்போது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம் எழுதப்பட்டுள்ள புசுண்டர் நாடிக்கவியைப் பார்ப்போம்.
புசுண்டர் நாடிக்கவி
இவனுடைய பெருமைசொல்லற் கெளிதோவில்லை
 என்னிலிருந் திவன்முதலா மவதாரந்தான்
உவகைநர னாகியிலக் குவனாகிப்பின்
 உலவும்பற் குனனாகித் திண்ணனாகித்
தவஞ்செறிகீ ரன்மெய்சொல் புலவனாகித்
 தானருனை யாய்க்கிளியாய்ச் சார்ந்துவந்த
இவனாகும் சங்கரலிங் கப்பேராதி
 யிலங்கியபின் னேமுருக தாசனாகி
பொருள்:
காகபுசுண்டரின் முதலவதாரமாக நரன், பின்பு இலக்குவன், பின்பு பற்குணன் எனும் அருச்சுணன், அடுத்து திண்ணனாகிய கண்ணப்ப நாயனார், பின்பு நக்கீரன், அடுத்து மெய்சொல் புலவனாகிய பொய்யா மொழிப்புலவர், அருணையில் அவதரித்த அருணகிரிநாதராய் பின்பு கிளியாய் அவதரித்து வந்த இவனாகும் சங்கரலிங்கம் எனும் பெயர் முதலில் பெற்று பின் முருகதாசன் எனும் பெயர் பெற்றார்.
விளக்கம்:
வண்ணாச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பூர்வ அவதாரம்:
  1. காக புசுண்டர் முதல் அவதாரமாக நர நாரயணர் அவதரித்தபோது நரனாக அவதரித்தார்.
  2. பின் ராம லட்சுமண அவதாரத்தில் லட்சுமணனாக அவதரித்தார்.
  3. பின் கிருஷ்ண அவதாரத்தில் அர்ச்சுணனாக விளங்கினார்.
  4. பின் கண்ணப்ப நாயனாராக அவதரித்தார்.
  5. பின் நக்கீரராக அவதரித்தார்
  6. பின் பொய்யாமொழிப் புலவராக வந்தார்.
  7. பின் அருணகிரிநாதராக அவதரித்தார். கிளியாக வந்தார்.
  8. பின் சங்கரலிங்கம் எனும் பெயருடன் விளங்கி அதன் பின் முருகதாசனாகி விளங்கினார். (நாளடைவில் சுவாமிகள் பாடும் கவிகளைப் பார்த்தும் சுவாமிகள் முருகனைப் போல் எப்போதும் தண்டம் ஏந்தி இருந்ததைப் பார்த்தும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என அனைவராலும் அன்புடன் அழைத்து புகழ் விளங்கப்பெற்றார்.)
பூர்வ ஜென்மத்தில் அருணகிரி நாதராக இருந்ததன் சான்றாக சுவாமிகள் பாடிய சந்தக்கவிகளைக் கூறலாம். தமிழ்ப்புலமையின் அதீதமாக சுவாமிகள் அறுவகை இலக்கணம் எனும் புதிய தமிழ் இலக்கண நூலை இயற்றி தமிழ்க்கடவுள் முருகனது வம்சம் என நிரூபணம் செய்துள்ளார்கள்.
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
 நன்றி: சிரவையாதீனம் இரண்டாம் சந்நிதானம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அவர்கள்
                         
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                  
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக