முருகப்பெருமானை உள்ளன்போடு
பக்தியாய் வழிபாடு செய்து வருபவர்களுக்கு கிரக தோஷங்கள் பாதிப்பதில்லை என பல்வேறு ஞானிகளின்
பாடலால் அறிய முடிகின்றது. நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் என்பார் அருணகிரிநாத
சுவாமிகள். திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே என்று கூறுகின்றது. நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்பது சஷ்டிக்கவசம். கோளும் குறுகப் பயப்படும், கூற்றமும் கும்பிடுவான், வேளும்
மகிழ்ந்து அருள் செய்வான், நமது வினை அனைத்தும் மாளும் என்பார் திருக்கோவலூர் ஞானியார்
சுவாமிகள். திருக்கோவலூர் ஞானியார் சுவாமிகள் அவர்கள் சனியின் தோசத்தை தவிர்த்த தண்ணளியே
என்று முருகன் மீது பாடியுள்ள படலை இன்று படித்துப் பாடி இன்புறுவொம்.
பாடல்:
இனியேது எனக்கு உன்னருள்
வருமோ? என்று
இன்று ஏங்கி நின்றேன்
முனியேல் என உவந்து ஆட்கொள்ளும்
முக்கண்ணி மோந்து எடுக்கும்
கனியே! இனிய கற்கண்டே! இங்கு
என்னைக் கருதிவரும்
சனியே தவிர்த்த நின் தண்ணளி
ஏது என்று சாற்றுவதே
-ஞானயார் சுவாமிகள்
கிரகங்களின் பெயர்ச்சிகள்
நடக்கும் போது எல்லோருக்குமே ஒருவித பயம் ஏற்படுகின்றது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி,
ராகு-கேது பெயர்ச்சி என எந்த பெயர்ச்சி வந்தாலும் உடனே என்ன பரிகாரம் என்று மக்கள்
தேட ஆரம்பித்து விடுகின்றார்கள். நவ கிரகங்களை வணங்குவது, நவ கிரகங்கள் வழிபட்ட தலங்களைத்
தரிசனம் செய்வது என வழிபாடுகள் தமக்கு ஏதேனும் கெடுதல் வந்துவிடுமோ என்ற பயத்தில் நடந்து
வருகின்றது. இறைவனை மறந்து நமது உடலே உண்மை என்று கருதி ஆன்மாவைப் பற்றியும் ஆன்மா
அழியாது உடல் அழியும் என்பது பற்றியும், நாம் இறைவனை மறந்ததால்தால்தான் துன்பப்படுகின்றோம்
என்பதை அறியாது மன திருப்திக்காக பரிகாரம் செய்து நிம்மதி அடைகின்றோம். ஆனால் கிரகங்கள்
நமது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேட்பவே பலன் தருவதாலும் ஆன்மாவையும் இறவனையும்
அறிந்து கொள்ளும் பொருட்டுமே கிரகங்கள் சோதனை செய்து நம்மை புடமிடும் தங்கம்போல் உருவாக்குகின்றன.
ஆனால் அடியவர்கள் கிரகங்களையும் கூற்றுவனையும் கண்டு அஞ்சுவதே இல்லை. கார்மா மிசைக்
காலன் வரிற் கலபத் தேர்மா மிசை வந்து எதிரப்படுவாய் என்பது கந்தரனுபூதி. மேகத்தின்
மீது காலன் வரும்போது மயில்மீது வந்து எதிர்கொண்டு முருகா நீ வருவாய் என்கிறார் அருணகிரிநாத
சுவாமிகள். கண்டாயடா அந்தகா வந்து பார் சற்று என் கைக்கு எட்டவே என்பதும் அருணகிரி
நாதரின் வாக்கு. அந்த நிலையை உணர வைக்கவே கிரகங்கள் வேலை செய்கின்றன. ஒரு குருவைச்
சரணடைந்து முருகனது ஆறெழுத்தை விடாமல் ஓதி, தியான நிலை கைவரப்பெற்றால் தவத்திரு ஞானியார்
சுவாமிகள் பாடியது போல் அடியார்களை சனி பிடிக்க வரும்போது அதைத் தவிர்த்து கிரக தோஷங்களில்
இருந்து முருகப்பெருமான் நம்மைக் காப்பார்
என்பது திண்ணம். எனவே முருக வழிபாட்டை ஞானியர்கள் காட்டிய நெறியில் கடைபிடிக்க நிச்சயம்
முருகன் நம்மை எல்லாவற்றிலும் இருந்து காத்து அனுகூலம் புரிவார்.
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
அவர்கள்
படம்: காவிரி புஷ்கரத்தில் சிரவையாதீனம் அவர்கள்
நன்றி: தினமலர் நாளிதழ்
இணையதளம்:
www.kaumaramutt.com
ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக