புதன், 13 செப்டம்பர், 2017

கவுமாரம் பொருந்தினோரே!

                          
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கவுமார மடம், திருவாமத்தூர், விழுப்புரம்
பாடல்:
மெய்யடியார் பதத்துகளைச் சிரசில் தாங்கி
  மேனிஎங்கும் உத்தூளமா நீறு பூசிச்
செய்யநிறக் கல்லாடை ஒன்றும் தண்டும்
  திருக்கரத்தில் கொண்டு கண்டி திகழப் பூண்டு
துய்ய நிறக் கோவணமும் கீளும் சாத்திச்
  சொந்தம்எனக்கொருவன் அவன் சுதன் நான் என்று
பொய்யன்ஒரு கூத்தில் வந்து தோன்றினாலும்
  புகழுமவர் கவுமாரம் பொருந்தினோரே
                                   -கவுமார நூல்
வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் கவுமார நூலில் உள்ள ஒரு பாடல் இது. ஆறுமுகம் என்று ஆறுதரமோதி திருநீறு பூசி உன் பாத மலர் சூடுகின்ற அடியார்கள் பதமே துணை என்று திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். உண்மையாக இறைவனை வழிபடும் அடியார்கள் பாதமே நமக்கு தஞ்சமாகும். குரு பாதமே கதி என்பதும் குருவே துணை என்பதும், குருவே சரணம் என்பதும் குரு பிரணவ மந்திரம் ஆகும். அவர்களின் பாத தூசு நம் மீது பட்டால்கூட போதும் நாம் இறைவனை உணார்ந்து கொள்ள முடியும். எனவேதான் சித்தர்களை நோக்கியும் உண்மையான அடியார்களை நோக்கியும் இன்று தேடல் அதிகரித்துள்ளது. மெய் அடியார்களை இனம் காண்பது அரிது என்றாலும் நமது பக்குவ நிலைக்கேட்ப ஒரு மெய்யடியாரோடு தொடர்பை இறைவன் நமக்கு ஏற்படுத்தி தருவார். மெய்யடியார்களது திருப்பாதத்தை நமது சிரசில் தாங்குவதும், நீரில் குழைக்காமல் உத்தூளமாய் மேனி எங்கும் நீறு பூசுவதும், மேன்மை பொருந்திய காவிக்கல் சாயம் கட்டப்பட்ட தூய சற்று செந்நிறமான காவி உடையாகிய கல்லாடை புணைவதும் சந்நியாசத்தைக் குறிப்பதாகும். அப்படி முருகப்பெருமானே அணிந்து கோவணத்துடன் பழனியில் இருப்பது ஞான நிலையைக் குறிப்பதாகும். அப்படி கோவணம் பூண்டு தண்டம் எனும் யோகதண்டத்தைக் கையில் ஏந்தியும், ருத்திராக்கம் அணிந்து கொண்டும், இறைவன் முருகனே எனக்குச் சொந்தம் என்று சொல்லி வேடம் போட்டு ஒரு பொய்யன் கூத்துக்காக நடிக்கத் தோன்றினாலும் அவர் புகழப்படுகின்ற கௌமார சமயத்தைச் சேர்ந்தவர் என்பது இந்தப்பாடலின் பொருளாகும்.அதாவது அப்படி ஒரு தோற்றத்தின் பெருமையைக் குறிக்கவே சுவாமிகள் இப்படிப் பாடியுள்ளார்கள். போலி வேடம் இட்டு என்ன பயன்? கூத்துக்காக வேடமிடுவதற்கே கௌமாரம் என்றால் உண்மையாக இருந்தால் நினத்துப்பார்க்கவே மெய் சிலிர்க்கின்றதே!
கௌமார நெறியில் அடியார்கள் வழிபாடு அதிலும் குறிப்பாக குரு வழிபாடு, உத்தூளமாய் திருநீறு பூசிக்கொள்தல், ருத்திராக்கம் அணிதல், யோக தண்டத்தைக் கையில் கொள்தல், காவி ஆடையும் கோவணமும் அணிதல், முருகனே பரம்பொருள் எனும் கொள்கையைக் கடைபிடித்தல் இலக்கணமாம். இந்த அமைப்புகள் சந்நியாசத்தைக் குறித்தாலும் இப்படி பொய்யாக அணிந்து கொண்டிருப்பவனைக் கூட அந்த வேடத்திற்காக அவன் கௌமாரனே என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கூற்று. பொய்யாக கூத்துக்காக வேடம் அணிந்து இருப்பவரே கௌமாரர் எனும் போது உண்மையாய் மெய்யாய் இப்படி கௌமார சின்னத்தில் இருப்பவர்களையும் கௌமார நெறியைக் கடைபிடித்து இருப்பவர்களையும் நாம் என்ன சொல்வது? சிரமேல் வைத்துக் கொண்டாட வேண்டுமே. அப்படியே மெய்யாக கௌமார மடாலயம் திகழ்வதும் நாம் செய்த தவப்பயனாக கொங்கு நாட்டில் கோயம்புத்தூரில் இருப்பதும் கௌமாரச் செல்வமாகிய முருகனைக் கொண்டாடி அறுசமய வழிபாட்டைக் கடைபிடித்து கௌமார இலக்கணத்தை 100 ஆண்டுகள் கடந்தும் நெறி பிறழாமல் திகழ்ந்து வருகின்றது கௌமார மடாலயம். மெய்யடியார்களை எங்கு சென்று தேடுவேன் என்பவர்கள் கோவை கௌமார மாடாலயம் வந்து தரிசனம் செய்யலாம். கோவையைச் சுற்றிலும் இருக்கும் மடாலயங்களுக்கு சந்நிதானங்களை வழங்கிய பெருமை கௌமார மடாலயத்தையே சாரும். மெய்யடியார்கள் தேடி வந்து தரிசிக்கும் இடம் கௌமார மடாலயமாகும். நூறு ஆண்டுகள் கடந்தும் காலத்திற்கேட்ப கல்விசேவை, மருத்துவச்சேவை, சமயப்பணிகள் என உலக நன்மைக்காக தற்காலம் கௌமார மடாலயத்தைத் திறப்படச் செயல்படுத்தி வருபவர் நம் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். எனவே மெய்யடியார்களின் பாத தரிசனம் நமக்கு அளவிலா நன்மைகள் தரும் என்பதை அருணகிரிநாதர் மற்றும் அருணகிரி நாதரின் அம்சமாய்த் தோன்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் சொல்வதிலேயே அதன் மகத்துவம் தெரியும்.
கவிதை:
உத்தூளமாய் நீறுபூசி கண்டி பூண்டு
சித்தர்கள் தலைவன் குமரன் தன்னை
சித்தத்திலே வைத்து தெய்வமெனப் போற்றும்
பத்தர்கள் கவுமார நெறியினரே !

குருவை வணங்கி போற்றி செய்தல்
குருவே சரணம் என்று இருத்தல்
குருவே சிவமெனக் கருதி நிற்றல்
உருவே கௌமார நெறியினரே !

கூத்திலே நடிக்க போடும் வேடம்கூட
சித்தத்தில் கவுமார நெறியென்று எண்ணி
மொத்தமாய்க் கண்ட தண்டபாணி சாமிதன்னின்
சித்தமே கௌமார நெறியதாமே !

தண்டத்தை ஏந்தியதால் அவர் தண்டபாணி
கண்டத்தில் அக்கமணியும் அழகாய்ப் பூண்டார்
அருணகிரியின் அம்சமாய் அவதாரம் செய்து
குருவாய் இராமானந்தருக்கு வந்து சேர்ந்தார்

கவுமார தோற்றமும் கவுமாரநெறியும் கொண்டு
கவுமார மடத்தை சிரவணமாபுரியில் தொடங்கி
கவுமாரர் பலரையும் உருவதாக்கி உண்மை
கவுமாரம் இராமானந்தர் கண்டார்

(திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள் அவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களிடம் உபதேசம் பெற்று கவுமார தோற்றமும் நெறியும் தாங்கி கவுமார சபையை கோவை சரவணம்பட்டி அருகே இருக்கும் சின்னவேடம்பட்டியில் தொடங்கி தம்மை நாடி வந்த பலரை உண்மையான கவுமாரர்களாக ஆக்கினார்கள்)

குருஉருவே திருஉரு என்ற நெறியில்
உருவாக குருஉருவைப் பூசை செய்து
குருபெயரே தெய்வத்திற்கும் தண்டபாணி என்று
உருவழிபாடு செய்தவரே இராமானந்தர்

(திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் அவர்கள் தமது குருவாகிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் திரு உருவத்தையே தியானப் பொருளாகக் கொண்டு பூசித்து அவர் பூசிக்கும் முருகன் உருவத்திற்கும் தண்டபாணி சுவாமிகள் என்றே பெயர் வைத்து வணங்கினார். பின் நாளில் தண்டபாணிக் கடவுள் எனும் நாமம் ஏற்பட்டது)

மெய்யடியார் பலரும் மடம் தேடிவந்து
மெய்யான உபதேசம் மகிமை பெற்று
மெய்யாக பல்வேறு மடாலயம் தன்னில்
மெய்யாக சந்நிதானம் ஆனாரே

(கோவை பேரூர் ஆதீனம், தென்சேரிமலை ஆதீனம் ஆகியோர்கள் கவுமார மடத்தில்  இருந்து சென்றவர்கள் என்பது வரலாற்றுண்மை)
                                                                                               
                             தவத்திரு.சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பேரூர் ஆதீனம்


         தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார்,  தென்சேரிமலை ஆதீனம்

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                        
படம்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குரு பூஜையில் சிரவையாதீனம்
           இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                  சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக