சனி, 16 செப்டம்பர், 2017

சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்காமல் காக்கும் அதிகாரன்

                
பழனிமலை வடிவேலர் பதிகத்தில் இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்.
பாடல்:
”சாகினி கறுப்பனிரு ளன்கூளி வேதாளி
 தாடகைமூ லாடவீரன்
  சந்திரவீரன்குறளி யந்திரவீரன்சண்டி
   தடிவீரன் வல்லரக்கி
மோகினிகள்லாகினிகளிருடி குட்டிச்சாத்தி
 முன்னடி யன்வடுகன் சடா
  முனிவன் வெட்டுணிகுத் தூணிகாட்டேறி சா
   முண்டிபா வாடையப்பன்
சோகிபூ தப்பிரம்ம ராட்சசிகூஷ் மாண்டாதி
 துர்க்கைவைப் பேவல்பில்லி
  சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்காது
   தொலைத்துனது திருவடி மலர்ப்
பாகமதில் வைத்தவன் பருக்கெலாம் மேலான
 பதவிதரு மதிகாரனே”

இந்தப் பாடலில் பழனிமலை முருகனை வணங்கினால் தீயவை செய்யும் தேவதைகளான சாகினி டாகினி காட்டேறி இருளன் போன்றவையும், தீயோர்களால் ஏவப்படும் ஏவல் வைப்பு வஞ்சனை பில்லி சூன்யங்கள் போன்ற தீவினைகளெல்லாம் நிற்காது நம்மைப் பாதிக்காது காப்பாற்றி அந்த தீயவைகளையெல்லாம் தொலைத்து தனது மலர் போன்ற திருவடியில் வைத்து நமக்கு மேலான பதவி தரும் அதிகாரன் முருகப்பெருமான் என்று சொல்லப்படுகின்றது. எனவே தீய எண்ணங்களோ, துர் தேவதைகளோ, சூன்யம் செய்வினைகளோ முருகனது அடியார்களை ஒன்றும் செய்யாது. முருகனது அருள் இருப்பின் நிச்சயம் எந்தவித பாதிப்புகளும் நம்மை அண்டாது. சங்க காலத்தில் கூட வேலன் வெறியாட்டு எனும் நிகழ்ச்சிகள் நடந்ததாக தமிழ் நூல்கள் கூறுகின்றன. யாராவது ஒருவருக்கு துர்தேவதையின் தாக்கம் இருப்பின் வேனலாகிய பூசாரி கையில் வேல் வைத்துக் கொண்டு ஆவேசமாக பாடிக்கொண்டே ஆடி அந்த மன நோயை நீக்கியதாக வரலாறு. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வெறியாட்டு பெருவழக்காகவிருந்தது.
‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
    வெறியாட் டயர்ந்த காந்தளும்’’ (தொல். பொருள்., நூற்பா, 60)
‘‘வேலன் புனைந்த வெறிஅயர் களம் தொறும்
    செந்நெல் வான்பொரி சிதறி அன்ன’’ (குறுந்தொகை, பா.., 58)
அப்படி மனதிலே வரும் எண்ணங்கள் அடுத்தவர்களை செய்வினை வைத்து பாதிப்படையச் செய்ய வேண்டும் என்று சிலர் தவறாக பாவங்களைச் சம்பாதித்துக் கொள்கின்றனர். ஆனால் முருகனை வணங்கி அந்த செய்வினை நீக்கப்படும்போது வைத்தவர்களுக்கே அந்த வினை 100 மடங்கு வலிமையாக திருப்பித் தாக்கிவிடுகின்றது. இந்தப் பிறவி எடுத்ததே துன்பப்படவே எனும் போது நமது வினைகளைக் குறைத்து குருவை நாடி சேவை செய்து இறைவனது மந்திரங்களை உச்சரித்து ஆலய வழிபாடுகள் செய்து மக்களுக்கு நன்மைகள் செய்து நல்லபடியாக அடுத்த பிறவியாவது அமையவேண்டும் என்று எண்ண வேண்டும். முருகனை வணங்குபவர்களுக்கு முக்தி தேடி வருகின்றது. அப்படி நாம் நன்மை செய்ய முடியாவிட்டாலும் கூட அடுத்தவர்களுக்கு கனவிலும் தீமையை நினைக்கக் கூடாது. கனவிலேயே நினைக்கக்கூடாது எனும் போது அடுத்தவர்களுக்கு செய்வினை வைத்தால் நிலமை என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். செய்வினை உண்மையா? பொய்யா? என்பது ஆராய்ச்சிக்குறியது என்றாலும் இந்தப்பாடலின்படி செய்வினை என்ற ஒன்று இருந்தாலும் முருகன் ஒரு நொடிப்பொழுதில் அதை நீக்கி நம்மைக் காத்து உயர் பதவியும் தருவார் என்பது நிரூபணமாகின்றது. இப்படி ஒரு நொடியில் நம்மைக் காத்தருளும் முருகப்பெருமானை குன்றுதோறும் வைத்துக் கொண்டாடினால் போதாது. வீடுகள் தோறும் முருகனது படம் வைத்து தினசரி தீபம் ஏற்றி மலர் சூடி பூசிப்பது குறிப்பாக தமிழர்களின் கடமையாகும். பேசுகின்ற மொழியே முருகன். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிநாத சுவாமிகள். தமிழை தாய் மொழி என்கிறோம் அந்த தமிழ்த்தாயை நமக்களித்த முருகனை நாம் மறக்கலாமா? அப்படி மறந்தவர்களுக்குத்தான் துர் தேவதைகளும், சூன்யங்களும் பயம் கொடுக்கும். எப்போதும் நன்றி மறவாமல் முருகனை வணங்கி வந்தால் சூனியமும், துர் தேவதைகளும் நம்மை என்ன செய்யும். அப்படியே விதி வசத்தால் துர் தேவதையாலும் செய்வினையாலும் பாதிக்கப்பட்டால் சூன்யமுதல் வினையெலாம் எள்ளளவும் நிற்காது தொலைத்து மேலான பதவிதரும் அதிகாரனாகிய முருகப்பெருமான் நம்மைக் காக்காமல் விடுவாரா என்ன? காக்க காக்க கனக வேல் காக்க ! நோக்க நோக்க நொடியினில் நோக்க! தாக்க தாக்க தடையறத் தாக்க ! பார்க்க பார்க்க பாவம் பொடிபட ! பில்லி சூன்யம் பெரும் பகை அகல என்பது பாலதேவராய சுவாமிகள் அருளிய சஷ்டிக்கவசம்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 படம்: காவிரி மஹா புஷ்கரம் விழாவில் சிரவையாதீனம்  அவர்கள்
 இணையதளம்:  www.kaumaramutt.com
            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக