திங்கள், 18 செப்டம்பர், 2017

ஆறெழுத்தலங்காரம் பகுதி-2

பாடல்:
ஓங்காரம்பெற்ற வெழுகோடிமந்திரத் துள்ளுயர்ந்த
பாங்காருமாறெழுத் தேவடிவாகிய பண்ணவனை
ஏங்காதுவாழவைக் குங்குருநாதெனென் றெண்ணினார்க்கே
நீங்காச்சுகந்தரும் மாதவப்பேறு நிலைநிற்குமே

ஓம் எனும் பிரணவம் பெற்ற எழு கோடி மந்திரத்துள் உயர்ந்த பாங்குடைய ஆறெழுத்தே வடிவாகிய முருகப்பெருமானை நம்மை எதிலும் ஏங்கித் தவிக்காது வாழ வைக்கும் குரு நாதன் என்று எண்ணியவர்க்கு நீங்காத சுகம் தரும் மாதவப்பேறு நிலை நிற்கும் என்று ஆறெழுத்தின் பயனைப் பாடுகின்றார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். முருகனது திருப்பெயர் வேறு முருகன் வேறு அல்ல என்பதை  முருகனின் ஆறேழுத்து மந்திர வடிவாகிய பண்ணவன் என்று சுவாமிகள் பாடுகின்றார். முருகனது ஆறெழுத்தை எப்போதும் உச்சரித்து வருபவர்கள் முருகனது அருள் வடிவைத் தாங்கி மந்திரத்திருமேனி உடையவர்களாக இருப்பார்கள் எனெலாம். முறையாக குரு உபதேசம் பெற்று மந்திர ஜபம் செய்வதே சாலச்சிறந்தது என்பர். அதிலும் முருகனது வம்சத்திலே வந்த குருவிடம் உபதேசம் பெறுவது முருகனிடமே உபதேசம் பெறுவது போன்றாம். ஆறெழுத்து மந்திரத்தை ஓத ஓத முருகன் அருள் கூடி முருகனது திருக்காட்சியும் கிட்டும் என்பது மெய்.

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
படம்: சென்னை சைவாகமத்திருமுறை கருத்தரங்க விழா
 இணையதளம்:  www.kaumaramutt.com

கவிதை:
உருவிலே மின்னும் பொன்னாய் நிற்கும்
குருநாதர் வந்ததோர் கவுமார வம்சம்
திருவேஎனப் பலர் போற்றி மாலையிடும்
குருவிற்கு கூப்பினேன் கரம்

ஆறெழுத்து அருமறையை அன்பாய் ஓத
பேறுதந்த குருநாதர் குமர குருபரரின்
வீறு கொண்ட செயல்கள் வெற்றிபெற்று
நூறாண்டுவாழ கூப்பினேன் கரம்

சிரவை நான்காம் சந்நிதானம் தன்னின்
வரவை நாடி நாளும் நின்றேன்
கறவைப் பசுவின் கன்றுபோல் நின்று
உறவாய்க் கூப்பினேன் கரம்

பொன்போல் மின்னும் திருமேனி கண்டேன்
இன்முகம் காட்டும் இனிமையும் கண்டேன்
பொன்னாடை மாலை பொலிவும் கண்டேன்
இன்னும் கூப்பினேன் கரம்


                           -ஸ்ரீஸ்கந்த உபாசகர்

            ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக