செவ்வாய், 30 ஜூன், 2020

கந்தன் மீது கவியமுது - 1


ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே

ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே

வண்ண மயில் வாகனனே
பக்தஜன காவலனே

சரணம் சரணம் வேல் முருகா சரணம்
சரணம் சரணம் வேல் முருகா சரணம்

ஜோதி வடிவானவனே
சுடர் ஒளி வேலவனே

கண் கண்ட தெய்வமே கலியுக கந்தனே.. சரணம் சரணம் வேல் முருகா சரணம் வேல்முருகா

அவனியில் அவனின்றி எதுவுமில்லை
அவனின்றி எதுவுமே நடப்பதில்லை

திருப்புகழ் கூறிடுமே அவன் புகழை அவனை தொழுதிட எய்திடலாம் பெரும் புகழை

பன்னிரு கைகளும் காத்தருள வேணுமய்யா
பதிணென் கண்களும் பார்த்தருள வேணுமய்யா

வேல்முருகா சரணம் வேல்முருகா
வேல் முருகா சரணம் வேல்முருகா.

சிவாயநம!


நன்றி: 
ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

திங்கள், 29 ஜூன், 2020

சங்கம் அமைத்து   தமிழ் வளர்த்த புலவர்கள்   

74 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்     

 புலமை இலக்கணம் -மரபியல்பு

சங்கம் அமைத்து   தமிழ் வளர்த்த புலவர்கள்.

நூற்பா: 82     
                        
மூவகைக் கழகத்து ஐயா யிரத்து
நானூற்று முப்பத் தொன்பது புலவோர்
வாழ்ந்தனர் எனப்பகர் மாந்தர் பலரே.

பொருள்:
தலைச்சங்கத்தில் 4900 புலவர்களும் இடைச்சங்கத்தில் 490 புலவர்களும் கடைச்சங்கத்தில் 49 புலவர்களும் ஆக மொத்தம் 5439 சங்கப் புலவர்கள் முன்னாளில் தமிழாய்ந்தனர் என்று பலர் கூறுவார்கள் என்றவாறு.

விளக்கம்:
சங்கப் புலவர்களின் தொகை “நாற்பத் தொன்பது நான்கு நூறு அணைந்த தொண்ணூறு மேற்பத் தோடிவை பெருக்கிய தொகையராய் விளங்கி சூற்பட் டார்த்தெழு முகில்உறழ் சொற்றொனிப் புலவோர் ஏற்பட் டார்கண்முச் சங்கமூ டென்னுமிவ் வுலகே”1 என்னும் இவர் கருத்தேபற்றி உரைக்கப்பட்டது. இறையனார் அகப்பொருள் உரையின்படி இத்தொகை முறையே 549,59,49 ஆக மொத்தம் 657 ஆகும்.

இந்நூலாசிரியர் தாம் இதைக் கூறும் இரு இடங்களிலும் “எனப்பகர் மாந்தர் பலர்” எனவும், “என்னும் இவ்வுலகே” எனவும் பிறர் கூற்றாகவே கூறுகிறார். களவியல் உரையாசிரியரும் இச்செய்திகளைக் கூறுமிடத்து ‘என்ப’ ‘என்ப’ என்றே கூறிச் செல்கிறார். இதனால் தொல்லாசிரியர்களுக்கே முச் சங்க வரலாற்றைப்பற்றிய உறுதியானதொரு கொள்கை-தன் கூற்றாகவே ஆணித்தரமாகச் கூறுமளவில்-இல்லை என்பதை உய்த்துணரலாம். பெருந்தொகையின் 1384, 1385, 1386 ஆகிய மூன்று தனிப்பாடல்களையும் காண்க.

பதிவு: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி. சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


வெள்ளி, 26 ஜூன், 2020

  மாணிக்க வாசகர் எழுதும்படி திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் 
    அருளியவர் சிவபெருமானே

73 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


 
புலமை இலக்கணம் -மரபியல்பு     
மாணிக்க வாசகர் எழுதும்படி திருவாசகத்தையும் திருக்கோவையாரையும்
அருளியவர் சிவபெருமானே.

நூற்பா: 79     

பல்நாடு உடையவன் பாண்டி நாடே
உடையேன் என்னவந்து உரிமையோடு எழுதவும்
வாதபூர்ப் புலவன் வழங்கினன் தமிழே.

திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவராகிய சிவபெருமானே தென்னாடுடையவராக வந்து தாமே உரிமையோடு ஓலையில் எழுதும்படித் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார் என்றவாறு.


நன்றி: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம், நெறியாளர், உலகத்தொல்காப்பிய மன்றம்.


நன்றி சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வியாழன், 25 ஜூன், 2020


உயிர்ப்பதும் மடிய வைப்பதும் தமிழே

72வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   
  

புலமை இலக்கணம் - மரபியல்பு

 உயிர்ப்பதும் மடிய வைப்பதும் தமிழே

நூற்பா: 78   
                         
என்பு பெண்ணாகவும், ஈனச் சமணர்
வன்கழு ஏறவும், மறைக்கதவு அடைக்கவும்
காழியூர்ப் புலவன் கழறினன் தமிழே.

இதன்பொருள்:

சீகாழியில் தோன்றிய திருஞான சம்பந்தப் பெருமான் மயிலப்பூரில் பூம்பாவையின் எலும்புகளை மீட்டும் உயிருள்ள பெண்ணாகுமாறும், மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறுமாறும், திருமறைக்காட்டில் ஆலயக்கதவு அடைபடுமாறும் தேவாரப் பதிகங்களை அருளினார் என்றவாறு.



புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம், நெறியாளர், உலகத்தொல்காப்பிய மன்றம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 24 ஜூன், 2020


தேவர்கள் தங்களைப் புலவர் என அழைத்துக் கொண்டனர்


 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 
  
புலமை இலக்கணம் -  மரபியல்பு

நூற்பா: 74     
            
     68. தேவர்கள் தங்களைப் புலவர் என அழைத்துக் கொண்டனர்.

பொருவரும் தமிழ்ப்பாப் புகலாப் புத்தே- ளினரும் புலவோர் 
எனும்பெயர்க்கு இச்சித்து 
அணிந்து கொண்டமை அறிவும்அம் புவியே     74

இதன்பொருள் : இணையற்ற தமிழ்க்கவிகளை இயற்றாத தேவர்களும் தாங்களும் புலவர்கள் என அழைக்கப்பட வேண்டும் என்னும் விருப்பத்தால் அப்பெயரைப் புனைந்து கொண்டார்கள் என்று அறிஞர்கள் அறிவார்கள் என்றவாறு.

விளக்கம்: புலம் என்ற சொல் அறிவு, ஐம்புலன் முதலிய பலவற்றை உணர்த்தும் ஒரு பலபொருள் ஒரு சொல் ஆகும். புலவர் என்ற சொல் அறிவை உடையவர்கள் என்ற பொருளில் கவிஞர்களையும், ஐம்புல இன்பங்களையும் ஆரத் துய்ப்பவர்கள் என்ற பொருளில் தேவர்களையும் சுட்டும். பாப் புனைதலாகிய புலமை இல்லாதபோதும் அவர்கள் அப் பெயரை அணிந்து கொண்டனர்; இது அத்தொழிலின் சிறப்பைப் காட்டுகிறது என்பது இவர் கருத்து. இது யுத்தி வாதம்.


புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி:சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

திங்கள், 22 ஜூன், 2020


வாணியும் தமிழ்ப் புலவரே

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   

புலமை இலக்கணம்-மரபியல்பு

 நூற்பா: 73 

67.வாணியும்  தமிழ்ப் புலவரே 
வெண்மலர்க் கமல மீதுவீற் 
றிருந்து எவர் எவர் கவிகளும்
என்னது என்னும் வெண்பா
வொன்று விளம்பினள் அன்றே 
நாவின் கிழத்தியும் “நாடா முதல்” என.

இதன்பொருள்:

வெள்ளைத்தாமரையில் இருந்துகொண்டு இவ்வுலகில் யாரெல்லாம் கவிதை புனைந்தாலும் அவை யாவும் என்னுடையதே எனக்கூறும் கலைமகளும், “நாடா முதல்” எனத் தொடங்கும் வெண்பாவைப் பாடினாள் என்றவாறு.


விளக்கம்:
“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவிற்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் --கூடாரை
எள்ளுவன் மீன்உயர்த்த ஏந்துஇலைவேல் வேந்தனே
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு” 

எனும் வெண்பாவை நினைந்து கூறியது இது. இதில் வேதம், பாரதம், திருக்குறள் யாவும் யான் பாடினேன் என வாணி கூறுவதாக அமைந்துள்ளமை காண்க.

நன்றி பதிவு: ஆ.காளியப்பன் தலைவர், தொல்காப்பியர் தமிழ்சங்கம்.



நன்றி : சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

ஞாயிறு, 21 ஜூன், 2020


ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 9


ஆலயப் பரிகாரங்கள் மட்டுமில்லாமல் ஒரு சில மூலிகை மர்மங்களும், அதைப் பயன்படுத்தும் விதமும்
உரைக்கப்பட்டு அந்த மூலிகையை
அணிவதற்குள் ஆயிரம் அதிசயத்தை ஏற்படுத்துகிறது.


ஒரு சிலருக்கு யந்திரங்களை
வைத்து பூஜை செய்யும் முறைகள் வருகிறது. இன்னும் சிலருக்கு
யாகங்கள் செய்யச் சொல்லப்படுகிறது. ஞானத்தில் தெளிந்த நிலை உடையவர்களுக்கு மந்திர
உபதேசமே ஜீவ நாடியில் வருகிறது.

அதை எப்படி உச்சரிப்பது எப்படி பிரயோகம் செய்வது என்பது கூட
ஒரு குரு, உடன் இருந்து கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்குமோ
அப்படி வருகிறது.

உபாசனை செய்யும் இரகசியங்கள், தேவதைகளோடு
உறையாடும் உயர்வான மார்க்கங்கள் உறுதியான வழிமுறைகள் சொல்லப்படுகின்றன.
இது யாருக்கு பிராப்தமோ அவர்களுக்கே உறைக்கப்படுகிறது.

இன்னும் பாமர மக்களுக்கு மிகச் சுலபமான வழியாக அவர்களது
ஏதேனும் மூன்று பிரச்சினைகளை ஒரு தாளில் எழுதி அவர்கள்
குலதெய்வத்தின் பெயரோடு கொடுத்துவிட, அதை நான் பூஜித்து அவர்கள் குல
தெய்வத்தோடு தொடர்பு கொண்டு  ஆசி  பெற்று ஜீவ நாடியை
இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என சங்கல்பம் செய்து நாடியைப் பிரித்த உடனேயே
உறுதியான தீர்வும், அவர்கள் குலதெய்வம் என்ன
நினைக்கிறது, ஏதேனும் பூஜைகள் செய்ய வேண்டுமா அல்லது தேவை இல்லையா? என பல
விடைகள் கிடைத்து வடிவேல் முருகனின் ஆசியும் கிடைத்து
விடுகின்றன.

இது தான் எளிமையான வழிமுறையாகும்.

கேட்கின்ற கேள்விகள் தொடர்பான விடைகள் மட்டுமில்லாது, இன்னும் சில
கூடுதல் செய்திகளும், சித்தர்கள் மூலமும், முருகப்பெருமான் மூலமும் உணர்த்தப்படும்.

எனவே ஜீவ நாடி என்பது ஒரு நம்ப முடியாத பேரதிசயம்
என்றால் மிகை இல்லை.


கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

சனி, 20 ஜூன், 2020


சிவபெருமானும் ஒரு தமிழ்ப் புலவரே 

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்



நூற்பா 70 

சிவபெருமானும் ஒரு தமிழ்ப் புலவரே
பாணனும் தருமியும் பெத்தானும் உய்யப்
பாடியது அன்றிப் பைந்தமிழ்க் கழகத்
தலைவனைப் பழித்தும் தனிக்கவி பகர்ந்த
பரமனும் புலவன் என்பது பண்பே.70

இதன்பொருள்:

பாணபத்திரருக்காக “மதிமலி புரிசை” என்னும் திருமுகப் பாசுரத்தையும், தருமிக்காகக் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற அகவற் பாவையும், பெத்தான் சாம்பானுக்காக "அடியார்க் கெளியன்” எனத்தொடங்கும் வெண்பாவையும், நக்கீரனை இகழ்வதாக, “அங்கம் குலுங்க” என்னும் ஒரு வெண்பாவையும் பாடியதால் சிவபெருமானையும் ஒரு தமிழ்ப்புலவர் என்பதே முறையாகும் என்றவாறு.

விளக்கம்: 

இவ் வரலாறுகள் திருவிளையாடற் புராணம், புலவர் புராணம் ஆகியவற்றுள் உள்ளன. சிவபெருமானும் தமிழ்ப் புலவனே என்னும் இதே கருத்து இவரால் வேறிடத்தே “அரன்முனாள் தருமி பாணன் அன்புறு பெத்தான் கீரன் தரம்உலகு அறியப் பாடித் தமிழ்க்கவிப் புலவன் ஆனான்”1 எனக் கூறப்பட்டுள்ளது.


நன்றி : பதிவு புலவர்  ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வியாழன், 18 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 8


பொதுவாக ஆலய பரிகாரங்களே பரிந்துரை செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சில மாதங்களோ, சில வருடங்களோ ஜீவ நாடி
சொல்கின்ற ஆலயங்களை விடாமல் தரிசனம் செய்ய
வலியுறுத்தப்படுகிறது.

அந்த ஆலய தரிசனத்தை முறையாகச் செய்யும் போது அந்த ஆலயத்தில் ஏதேனும்
அதிசயம் நிகழ வேண்டும்.

அப்படி நிகழும் வரை அந்த ஆலயத்தைத் தொடர்ந்து வழிபட வேண்டும்.

என்ன அதிசயம் எனில் நமது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு ஏதேனும் அங்கு நடக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த இறைவனின் பார்வை நம்மீது விழுந்து
விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும்.

அதன் பின்பு ஜீவ நாடியில்
அதற்கான சூட்சும இரகசியங்களும், அந்த அதிசயத்தின் முழு செயல்களும்
விளக்கமாக வரும்.

அதன் மூலம் அந்த அதிசயத்தை மனப்பூர்வமாக முழுமையாக
அறிந்து கொள்ளலாம்.

நமது ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடம் சொல்வது போன்று 12
வீட்டின் பலன்களை ஒரே முறையில் சொல்லி விடுவதில்லை.

ஜீவநாடி என்பதே அப்போதைக்கு அப்போது தோன்றி மறைகின்ற எழுத்துக்களை வைத்து
 உரைக்கப்படுவது.

எனவே முருகப்பெருமான் என்ன உரைக்க நினைக்கிறாரோ,
அதை மட்டுமே படிக்க முடியும். நாம் எதிர்பார்த்ததுதான் வர வேண்டும்
 என்று எதிர்பார்க்க முடியாது.

முருகனது எண்ணம் எதுவோ
அதுவே நாடியில் வரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளி கழித்து மீண்டும் கேட்க
வேண்டிய தேதியையும் முருகனே நாடியில் உரைத்து விடுவார்.

 அந்த குறிப்பிட்ட காலம் வரை முதல் முறை உரைக்கப்பட்ட
பலன்களையும், பரிகாரங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

அதில் பல மாற்றங்கள்
ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம்.

அடுத்த முறை எந்த
குறிப்பிட்ட தேதியில் கேட்கச் சொன்னாரோ அப்போது
அடுத்த இரகசியங்களை உரைப்பார்.

மீண்டும்  ஒரு தேதி சொல்லி வரச்
சொல்லுவார். இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு
ஒரு முறையோ தொடர்ந்து ஜீவ நாடியில் வாக்கு ஒரு
குறிப்பிட்ட நபருக்கு வந்து கொண்டே இருக்கும். எனவே ஒரே நாளில் ஒரே மூச்சில் முழுவதும்
இங்கு உரைக்கப்படுவதில்லை.

அதேபோல் முதல் முறை சொன்ன ஆலயப் பரிகாரங்களை முறையாகக் கடைபிடிக்காமல்
இரண்டாம் முறை பலன் வருவதில்லை.

எனவே ஜீவநாடியில் வருவதை
முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் கடைப்பிடித்து
வந்தால் முருகப் பெருமானும், சித்தர்களும், நமது வாழ்வில் நடத்தும் அதிசயங்களை
அனுபவிக்கலாம்.

எமது வயது சிறியதானாலும் முருகனது அருள் முழுமையாக
இருப்பதால் இத்தனையும் செய்ய முடிகிறது.



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.
அனைத்துச் சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மை 

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

புலமை இலக்கணம்   

நூற்பா: 69      
               
                       III. மரபியல்பு

முன்பே கூறப்பட்டது போல இவ் வியல்பு செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கிய வரலாறு ஆகும். இன்றைய இலக்கிய ஆராய்ச்சியாளர்களில் மிகப்பலர் இவ்வியல்பில் இடம்பெற்றுள்ள பல நிகழ்ச்சிகளை உண்மையாக நடந்த சம்பவங்களாக ஒப்பமாட்டார்கள். எனினும், சென்ற நூற்றாண்டில் தமிழகத்தே புலவர்கள் நடுவே வழக்கிலிருந்த பல செவிவழிச் செய்திகளை அறிய இவ்வியல்பு துணைசெய்யும். இவ் வியல்பின் ஒவ்வொரு நூற்பாவும் ஒவ்வொரு கதையைத் தன்னுள் அடக்கி இருத்தலின் ஒவ்வொன்றையும் விரித்து எழுதினால் இவ்வுரை மிகப் பெருத்துவிடும். எனவே, இதற்குச் சுருக்கமாகவே உரை வரையப்படும். இதில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே நூலில் பார்க்க விரும்பும் அன்பர்கள் இந் நூலாசிரியரால் இயற்றப்பட்டதாகிய புலவர் புராணத்தைப் பார்க்கவும். இவ் விலக்கண நூலில் இக் கதைகள் ஒரு தனி அதிகாரமாகக் கூறப்படுவதன் காரணம் இதே இயல்பின் முப்பதாம் நூற்பா உரையிலும் இறுதி நூற்பாவிலும் கூறப்படும் இவ் வியல்பு
முப்பத்தைந்து நூற்பாக்களை உடையது. அனைத்துச்
சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மை  தெய்வமும்
புலமைத் திருஉரு வாம்என்று
அறியும் பெரியோர்க்கு அவர்தம் இணையே    69

இதன் பொருள்:

இறைவனும் அறிவு வடிவானவனே எனும் உண்மையை உணரும் பெரியவர்கள் தம் சிறப்பில் இணையற்றவர் ஆவர் என்றவாறு

விளக்கம்:

இறைவன் முற்றறிவன் அல்லது அறிவுமயமானவன் என்பது அனைத்துச் சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மையாகும். வாலறிவன் என்றார் வள்ளுவரும்.


நன்றி: பதிவு ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

செவ்வாய், 16 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 7


ஜீவநாடியை, குறி சொல்வது போன்று சொல்லப்படும் என்றும்,
மைவித்தை போல் இருக்குமோ என்றும், அந்த நேரத்தில் ஏற்படும்
எண்ணத்தின் வெளிப்பாடோ என்றும், நாடி ஜோதிடம் போன்று ஏற்கனவே எழுதி வைத்து
படிப்பதோ என்றும், அருள்வாக்கு என்றும், ஜோதிடம் சொல்வது
போல சொல்லப்படும் என்றும், எதிர்பார்த்து வருபவர்கள்
ஏமாந்துதான் போவார்கள்.

நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில், முருகப்பெருமான்,
அகத்தியர், சுகர் மற்றும் காகபுஜண்டர் ஆகியோரால்
உரைக்கப்படும் இரகசியங்கள் ஜோதிடப் பலன் அல்ல.
மாறாகப் பரிகாரம்
உரைக்கப்படுகிறது.

கர்மவினை குறைக்கும் சூட்சுமங்கள்
உரைக்கப்படுகின்றன. ஏனெனில் அடுக்கடுக்காய் ஆயிரம் பலன்கள்
சொன்னாலும் ஒருவர் பொருளாதார ரீதியில் பலன் அடையவில்லை என்றால்
நிறைவு ஏற்படுவதில்லை.

இல்லானை எல்லாரும் வேண்டாம்
என்கிறார்கள். பணம் இல்லாதவனை பரிசுத்தமானவன் என்று இந்தப் பாரினர்
மதிப்பதில்லை.

பணம் இருந்துவிட்டால் அவன் படுபாதகனாக இருந்தாலும்
பக்குவமானவன்,  பரிசுத்தமானவன் என இந்தப் பாரினர் கொண்டாடுகின்றனர்.

எனவே எம்மை நாடி, தேடி, அலைந்து திரிந்து
வந்து ஒரு வழியாக ஜீவ நாடி படித்து விட்டால் அவர் பணக்கார வாழ்வில் ஒரு படி எடுத்து
 வைத்துவிடுகிறார்.

அதன் பின்பு எந்த நிலையில் அவர்
இருந்தாலும் அதிலிருந்து சிறிது சிறிதாக பல மடங்கு தனது வாழ்வில் உயர்வினை அடைந்து
விடுகிறார்.

அதேபோல் தனது கர்மவினையைத் தீர்த்துக் கொள்ளாமல், இருப்பதால்தான்
பணக்கார வாழ்வினையோ, பகட்டு நிலையையோ சுகிக்க இயலாமல்
சுந்தர வடிவை இழந்து சூழ்ச்சியான வாழ்விற்கு பலியாக நேரிடுகிறது.

எனவே முருகப் பெருமானும் சரி, சித்தர்களும் சரி பலன் சொல்ல
விரும்புவதில்லை. பரிகாரம் சொல்லி வாழ்க்கையைச் சரி செய்கிறார்கள்.

ஜாதகத்தையே மாற்றுகிறார்கள். ஜீவ நாடி மூலம் பல இரகசியங்களை உரைத்து, செயல்பாடாத கிரகங்களைச் செயல்பட வைத்து, சீக்கிரத்தில்
சீரான வாழ்வை, சிரமமில்லாத வாழ்வை சித்தரிக்கிறார்கள். இதுதான்  இரகசியம்.


கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  
   
நூற்பா: 68 

புலமைக்கு உதவாத அத்தனை  தவறுகளையும் களைக
புலமையிற் கரவுதீர் நலம்பு கன்றனம்;
மரபியல்பு அதனையும் வகுக்குதும் அன்றே 68

இதன்பொருள்:

புலமையில் எந்தெந்தத் தீமைகள் களையப்பட்டுச் சிறப்பு உண்டாக வேண்டும் என இதுவரை கூறினாம். இனி அடுத்து மரபியல்பையும் வகுத்துச் சொல்வாம் என்றவாறு.

விளக்கம்:

குற்றங்களைக் காட்டிக் குறைகூறுவது தம் நோக்கமன்று என்பதைக் தெளிவு படுத்துவதற்காக இவ் வியல்பின் முதலில் ‘சாராது ஒழிப்பான் தவறு இயல்பு உரைக்குதும்” எனவும் இங்குக் “கரவுதீர் நலம்” என்றும் கூறினார். அடுத்துவரும் மரபியல்பு பெரும்பாலும் செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக்  கொண்ட தமிழ் இலக்கிய வரலாறாகவே அமைந்துள்ளது. மொழி இலக்கணத்தில் ஒரு பிரிவாக அம்மொழி இலக்கிய வரலாற்றை எம்மொழியாளரும் எங்கும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. இவரே புதுமையாக இவ்வாறு கூறுகிறார். எனவேதான் வகுக்குதும் என்றார்.

இந்நூற்பாவுடன் தவறியல்பு என்னும் இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த பிரிவாகிய மரபியல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன்அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வெள்ளி, 12 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 6


நமது ஞானஸ்கந்தர் ஜீவநாடி யாருக்கு பலன் சொல்லுமோ அவருக்கு நிச்சயம் ஏதாவது
ஒரு வழியில் சொல்லியே தீரும்.

எம்மைத்தொடர்பு கொள்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு பொறுமை காப்பது அவசியம்.

ஐயா நான் ஒரு வருடமாகத் தொடர்பு கொள்கிறேன் படிக்கவே மாட்டேன் என்கிறீர்கள் எனப்  பலர்  தங்களது கருத்துக்களைச்
சொல்கிறார்கள்.

காரணம் இதுதான். உரிய காலம் வரும்போது படித்தால் தான் உண்மை புலப்படும். இல்லாவிடில்
பலன் நடக்காது.

பொதுவாக, நாடி ஜோதிடம் பார்த்தால் சுமார் பத்தாயிரம் முதல்
இருபதாயிரம் வரை பரிகாரம் சொல்கிறார்கள்.

அதே போல் பிறந்த தேதி,
நேரத்தை வாங்கி அதைக் கொண்டு கணினியில் போட்டு, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு, மனப்பாடமாகப் பாடல் வடிவில்
சொல்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஈரோட்டில் இருந்து என்னைப் பார்க்க  வந்த நபர்.

ஒரு சிலர் சொல்கின்ற பலனைக்
கடைபிடிப்பது எப்படி என்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இவர் எப்படி பலன் சொல்கிறார்
என்பதை மட்டுமே ஆய்வு செய்து ஜோதிடர்களை சோதனை
செய்வது மட்டுமே பணியாகக் கொள்கிறார்கள்.

அதே போல் தான் நாடி என்ற
பெயரில் நடக்கும் மோசடிகளையும் அறியாதவர் இல்லை.

 நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் நாடியை அதனால்தான் அனைவருக்கும் உரைப்பது  இல்லை.

காரணம் எவருக்கு பிராப்தம் உள்ளதோ அவருக்கே உரைக்கிறோம்.

அதேபோல இதில் வரும் பரிகாரங்களும் பொதுவாக அன்னதானம், சித்தர்கள்
பூஜை, ஜீவ சமாதி வழிபாடு, ஆலய தரிசனம், மணி, மந்திரம், ஔஷதம் என்கிற முறையில்
தான் வருகிறது.

பரிகாரங்கள் எத்தனை தான் செய்தாலும் அது பலிப்பதும். பலிக்காமல் போவதும்,
அவரவர் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது.

அதேபோல் நாடியில் வரும் பலன்களும் அவரவர் கர்ம வினைப்படியே நடக்கிறது என்பதையும் நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் அந்தியூர்.



புதன், 10 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 5


ஜீவநாடி பல உண்மைகளைப் புலப்படுத்தி வைத்துவிடும்.

ஆனால் எதை எங்கு
பயன்படுத்த வேண்டுமோ அங்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து குறிப்பறிந்து வெளியிட வேண்டும்.

சித்தர்கள் பலர் சூட்சுமமாக ஜீவ நாடியில் அருள்வாக்கு சொல்லுவதால் அவர்கள்
சம்பந்தமாக ஏற்படும் சகுனங்கள், நிமித்தங்களைக் கவனித்தால்
100% துல்லிய பலன்களைச் சொல்ல முடியும்.

ஜீவ நாடியும் ஜோதிடத்தை விட்டு விலகி எதையும் சொல்வதில்லை.
மனிதனின் ஜாதக ரீதியாகவே பலன்களைச் சொல்லும்.

சித்தர்கள் சொல்வதால் கிரகங்களின் தாக்கங்களிலிருந்து தப்பிக்கின்ற வழிமுறைகளை
ஏராளமாகச் சொல்வார்கள்.

பொதுவாக ஆலய வழிபாடுகளையே
பரிகாரமாகச் சொல்வார்கள்.

ஒரு சில நேரங்களில் சில மூலிகைகளைப் பற்றியும்
அதைப் பயன்படுத்தும் வித்தையும் சொல்வார்கள்.

சில நேரங்கள் யந்திரங்கள் பற்றியும், மந்திர ஜபம் பற்றியும் சொல்வார்கள்.

நமது ஞானஸ்கந்த ஜீவ நாடியின் மணி மகுடமாக நாங்கள் கருதுவது
உபாசனை மார்க்கம்.

நெற்றியில் அடித்தது போல் வருகின்ற உபாசனை முறைகள்
உறுதியான பலன்களைத் தந்து உயர் வாழ்வை பலருக்கு தந்து
கொண்டிருக்கிறது.



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

செவ்வாய், 9 ஜூன், 2020

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்     
  


நூற்பா: 67               

புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யல்  

கோங்குஅரும்பு அன்ன  குவிமுலைக் கோதையர் 
கோங்குஅரும்பு அன்ன குவிமுலைக் கோதையர் 
மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் 
புலவர்க்கு ஆகா தனஎலாம் புலமைக்கு 
உதவா தனஎன்று உணர்வது முறையே    

இதன்பொருள்:

செம்மையான தமிழ்மொழியைக் கோங்கரும்பைப் போன்ற அழகிய தனங்களைப் பெற்ற மங்கையரின் கொஞ்சுமொழிகளை விட இனியதாகச் சில மெய்யறிஞர் தம் மனச்சாட்சியும் கடவுளும் அறியப் போற்றுவர். அத்தகையோருக்கு எவையெவை ஆகாதனவோ அவையனைத்தும் நற்புலமைக்கும் ஏலாதன ஆகும். இந்த அடிப்படையிலேயே ஒவ்வொன்றையும் இது புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யவேண்டும் என்றவாறு

விளக்கம்:

நகிற் குறிப்பால் மங்கைப் பருவமும், தீஞ்சுவைச் சொல் என்றதால் கொஞ்சுமொழியும் பெறப்பட்டன. அரசியல் ஆதாயம், பொருள் வருவாய், எளிதில் செல்வாக்கடைதல் முதலியன கருதிப் போலியாகத் தம் தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதிகளினின்றும் சத்தியமான தமிழன்பர்களைப் பிரித்துக் காட்ட “மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் புலவர்" என்றார்.

புலமை என்பது இத்தன்மைத்து இவ்வளவினது எனத்தூலமாகச் கூற இயலாதவாறு புலவர்களைச் சார்ந்தே அறியப்படுதலின் அவர்களுக்கு ஆகாதன யாவும் புலமைக்கும் ஆகாதன ஆயிற்று. தமிழ் இனிமைக்கு இவர் இதே உவமையை வேறோர் இடத்தில், “சிமிழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம் தமிழ்”என்றார்.

சிரவை ஆதீனம் திருவுளப்படி  பதிவு  புலவர். ஆ. காளியப்பன் அவர்கள், தலைவர்
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

திங்கள், 8 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 4


ஜீவ நாடி படிப்பதற்கு எந்தத் தகவலையும் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் சில நேரங்களில் நம் கேள்விக்கு உரிய பதில்களை துல்லியமாக பெற நாடி படிப்பவர் வந்து அமருபவர்களின் கேள்வியை நன்கு உள்வாங்கிக் கொண்டு பிரார்த்தனை செய்தால் 100 % பலன்கள் வருவதை அனுபவத்தில் காண்கின்றோம்.

சுருங்கச் சொல்வதென்றால் ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் மற்றவர்க்கு ஏற்படுவதில்லை.

அதேபோல் பலன்கள் நடக்கும் விஷயத்தில் நாடியில்
வந்த ஆலய தரிசனங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் பலன்களும் நடப்பதில்லை.

சென்ற ஜென்ம தீவினை அதிகம் உடையவர்கள் பல
ஆண்டுகள் பரிகாரங்கள் செய்கின்ற நிலைகளும் ஏற்படுகின்றன.

இது பொறுமையான
அதே சமயத்தில் உறுதியான வழிமுறை. அவசரம் கூடவே
கூடாது.

நாடி பார்த்து விட்டால் மட்டும் போதும் நாம் சும்மா இருந்தாலே நடக்கும் எனும் கருத்து ஏற்புடையதல்ல.


கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், 
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

வெள்ளி, 5 ஜூன், 2020

பணம் பட்டம் செல்வாக்கு  உள்ளவர் இயற்றியது என்பதற்காக தகுதியற்ற கவிதையை சிறந்தது  என கூறக்கூடாது

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   

நூற்பா: 65    
           
பொருட்குவை குலத்துஉயர்வு அரசு பூண்உடை
பட்டம் ஆதிய பற்றிப் புலமைக்கு 
உயர்ச்சி கூறலும் ஒவ்வா முறையே  65

இதன்பொருள்:

ஒருவன் பெற்றுள்ள செல்வவளம், தோன்றிய குடும்பத்தின் சிறப்பு, வசிக்கும் அதிகாரமுள்ள பதவி, அணிந்துள்ள ஆடையணிகளின் ஆடம்பரம், பெற்றுள்ள விருதுகள் முதலியனவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ மட்டுங்கருதி அவனுடைய புலமையைத் தகுதியற்றபோதும் புகழ்ந்துரைத்தல் உண்மைப் புலவனுக்குப் பொருந்தாத செயலாம் என்றவாறு

விளக்கம்:

முதல் நூற்பாவில் சிறந்த புலமை பழிக்கப்படுவதைத் தவறு என எடுத்துக்காட்டியவர் இதில் இழிந்த புலமை வேறு பற்பல காரணம் பற்றி வானளாவப் புகழப்படுவதையும் விளக்குகிறார். பூண்உடை உம்மைத்தொகை. இந் நிகழ்ச்சியை நாடோறும் கண்டுவருலின் விரித்தல் மிகை.
விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்;
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும்; அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று” என்னும் பழம்பாடல் இங்கு நினைவுகூரத் தக்கது.

நன்றி:

சிரவை ஆதீனம் திருவுளப்படி பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 3


ஜீவ நாடி  என்பதற்கு ஜீவனுள்ள எழுத்துக்களைத் தோன்றி மறையச் செய்யும் என்றே
பொருள் உண்டு.

ஆனாலும் எல்லா நேரங்களில் தோன்றுகின்ற எழுத்துக்களைப்
பார்த்தே படிப்பது சுலபமாக இருப்பதில்லை.

பல நேரங்களில் சுவடியைப் பிரித்த உடனேயே சரளமாகப் பாடல் வடிவில் முக்காலமும்
 வந்து விடுகின்றன.

அப்போது  எந்த எழுத்துக்களும் சுவடியில் இருப்பதில்லை.

சில நேரங்களில் வரைபடங்கள் தோன்றும். சங்கு, சக்கரம்,
மற்றும் மந்திரங்கள் போன்றவை தோன்றும். அதை வைத்து
வழிபடும் தெய்வம், செல்கின்ற ஆலயம், பரிகாரம் போன்றவற்றை
அறிந்துக் கொள்ள முடிகிறது.

சில நேரங்களில் மூச்சுவிடவே இடைவெளி தராமல் வேகமாக
பாடல்கள் வருவதும் உண்டு.

இது அத்தனையும் வந்து
அமர்பவரின் கர்ம வினைகளையும், அவர்களது குல தெய்வ அருளையும், அவர்கள் கர்ம வினைகளையும், நம்பிக்கையையும்
பொறுத்தே அமைகிறது.

கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், 
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

செவ்வாய், 2 ஜூன், 2020


நன்றான கவிதையைப் பொறாமை காரணமாக குறைகூறல் தவறு

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
     

நூற்பா: 65                 

மற்றோர் புலவன் வாய்த்தமிழ் மனத்திற்கு இனித்தும்
அவன்எதிர் இகழும் பொல்லான் கொடுமையைத் தெய்வம் குறிக்கும் அன்றே. 

இதன்பொருள்:

   ஒருவனின் இலக்கியப் படைப்பு தம் உள்ளத்திற்குப் பிடித்ததாக இருந்தும் அப்படைப்பாளிக்குப் பெருமை சேர்ந்துவிடுமே என்ற அழுக்காறு அல்லது வேறு சில காரணங்களால் அப்படைப்பைக் குறை கூறுகின்ற தீய குணம் படைத்தவர்களின் பொல்லாங்கை உடனே தெய்வம் குறித்துவைத்துக் கொள்ளும் என்றவாறு.

விளக்கம்:

  குறை கூறுபவனின் உள்ளமும் உரையும் தம்முள் மாறுபடுதலின் அவர் பொல்லார் எனவும், அவர்செயல் கொடுமையானது எனவும் கூறப்பட்டது. அவர்செயல் சத்தியத்திற்கு மாறுபட்டதாதலின் செய்யும் நாளிலேயே அது தெய்வத்தால் குறித்துக் கொள்ளப்படும் என்கிறார். கூறவே இதனால் தெய்வதண்டனை நேரும் என்பது பெறப்பட்டது.


நன்றி: பதிவு ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.