வியாழன், 18 ஜூன், 2020

அனைத்துச் சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மை 

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

புலமை இலக்கணம்   

நூற்பா: 69      
               
                       III. மரபியல்பு

முன்பே கூறப்பட்டது போல இவ் வியல்பு செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கிய வரலாறு ஆகும். இன்றைய இலக்கிய ஆராய்ச்சியாளர்களில் மிகப்பலர் இவ்வியல்பில் இடம்பெற்றுள்ள பல நிகழ்ச்சிகளை உண்மையாக நடந்த சம்பவங்களாக ஒப்பமாட்டார்கள். எனினும், சென்ற நூற்றாண்டில் தமிழகத்தே புலவர்கள் நடுவே வழக்கிலிருந்த பல செவிவழிச் செய்திகளை அறிய இவ்வியல்பு துணைசெய்யும். இவ் வியல்பின் ஒவ்வொரு நூற்பாவும் ஒவ்வொரு கதையைத் தன்னுள் அடக்கி இருத்தலின் ஒவ்வொன்றையும் விரித்து எழுதினால் இவ்வுரை மிகப் பெருத்துவிடும். எனவே, இதற்குச் சுருக்கமாகவே உரை வரையப்படும். இதில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே நூலில் பார்க்க விரும்பும் அன்பர்கள் இந் நூலாசிரியரால் இயற்றப்பட்டதாகிய புலவர் புராணத்தைப் பார்க்கவும். இவ் விலக்கண நூலில் இக் கதைகள் ஒரு தனி அதிகாரமாகக் கூறப்படுவதன் காரணம் இதே இயல்பின் முப்பதாம் நூற்பா உரையிலும் இறுதி நூற்பாவிலும் கூறப்படும் இவ் வியல்பு
முப்பத்தைந்து நூற்பாக்களை உடையது. அனைத்துச்
சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மை  தெய்வமும்
புலமைத் திருஉரு வாம்என்று
அறியும் பெரியோர்க்கு அவர்தம் இணையே    69

இதன் பொருள்:

இறைவனும் அறிவு வடிவானவனே எனும் உண்மையை உணரும் பெரியவர்கள் தம் சிறப்பில் இணையற்றவர் ஆவர் என்றவாறு

விளக்கம்:

இறைவன் முற்றறிவன் அல்லது அறிவுமயமானவன் என்பது அனைத்துச் சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மையாகும். வாலறிவன் என்றார் வள்ளுவரும்.


நன்றி: பதிவு ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: