சனி, 30 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-20

                                          
மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள வித்தியாசங்களைச் சற்று சிந்திக்க வேண்டும். விலங்கும் உணவு கொள்கிறது நாமும் உண்னுகின்றோம். விலங்கும் உறங்குகின்றது நாமும் உறங்குகின்றோம். விலங்கும் தனது இனத்தை விருத்தி செய்கின்றது. நாமும் நமது இனத்தை விருத்தி செய்கின்றோம். விலங்கும் தற்காத்துக் கொள்கின்றது நாமும் தற்காத்துக் கொள்கின்றோம். அப்படிப் பார்க்கும்போது நமக்கும் விலங்கிற்கும் என்ன வித்தியாசம். நாம் அனைவருமே சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
                                          
                                                      மனிதனும் விலங்கும்
இத்தனைக்கும் விலங்குகளுக்கு ஐந்து அறிவே இருக்கின்றது நமக்கு மட்டும்தான் ஆறு அறிவு என்று அறிவியல் அறைகூவல் விடுக்கின்றது. என்ன பயன்? ஆறாவது அறிவைக்கொண்டு சிறந்த முறையில் உணவு, உறக்கம், இனவிருத்தி, தற்காத்துக்கொள்ளுதல் ஆகிய செயல்களைச் சிறப்பாகச் செய்கின்றோமோ தவிர வேறு என்ன செய்கின்றோம் என்று தயவு செய்து ஒரு நிமிடம் சிந்திதுப் பாருங்கள். அப்படிப் பார்த்தால் ஒரு பணக்கார வீட்டில் வாழும் ஒரு விலங்கு மேற்கூறிய அனைத்தையுமே எந்தவித சிரமமும் இன்றி பெறுகின்றதே. நமது ஆறாவது அறிவைக்கொண்டு நாம் யார் என்று அடிக்கடி சிந்தித்து வந்தோம் என்றால் அந்த ஆறாவது அறிவு நாம் உடல் அல்ல ஆன்மா என்ற ஒரு அடையாளத்தைக் காட்டிக் கொடுக்கும். ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆனால் உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கும்.  நான்கு வேதங்கள், இரண்டு இதிகாசங்கள், ஆறு தத்துவங்கள், ஆறு சமயங்கள், 18 புராணங்கள், 108 உபனிஷத்துக்கள், 28 ஆகமங்கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், 12 திருமுறைகள் என அனைத்தும் இறுதியாக அறுதியிட்டுக் கூறுகின்றது நாம் உடல் அல்ல நாம் ஆன்மா. நாம் ஜீவாத்மா, கடவுள் பரமாத்மா. அந்த உன்னத பரமாத்மாவிடம் இருந்து  நாம் விலகி நமது ஆசைகளுக்கு அடிமையாகி பல்வேறு வடிவங்களை எடுத்து இறுதியில் இந்த மனித வடிவை எடுத்திருக்கின்றோம். 
கிருஷ்ண பரமாத்மா குருவாக நின்று அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்து கௌமார நெறியாகிய குரு நெறியில் நின்று போதிப்பதும் ஜீவாத்மா பரமாத்மா தத்துவம்தான்
                                              
                         பரமாத்மாவிடம் கீதை கேட்கும்  ஜீவாத்மா அர்ச்சுனன்
இராமன் என்பவர் பரமாத்மா சீதா தேவி ஜீவாத்மா ஜீவாத்மாவை விட்டு பரமாத்மாவினாலும் இருக்க முடியாது, பரமாத்மாவை விட்டு ஜீவாத்மாவாலும் இருக்க முடியாது. எனவே இராவணன் ஆகிய காமம் எனும் அரக்கனைக் கொன்று சீதையாகிய ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மா மீட்டு தன்னிடம் சேர்த்துக் கொள்வதை இராமாயனம் காட்டுகின்றது. கானகத்திலே இருந்த ஜீவாத்மா வள்ளிப் பிராட்டி பரமாத்மாவான முருகனை நோக்கி தவம் இருக்க பரமாத்மா முருகப்பெருமான் வள்ளியை நோக்கி வந்து விருப்பமுடன் மணந்து கொள்வதை வள்ளி திருமணம் காட்டுகின்றது. இந்திரனின் மைந்தன் ஜீவாத்மா ஜயந்தனை சூரபத்மன் சிறை பிடிக்க பரமாத்மாவாகிய  முருகப்பெருமான் சூரனை வென்று ஜயந்தனைச் சிறை மீட்கும் நிகழ்வே கந்தபுராணம் காட்டுகின்றது. இப்படி புராண இதிகாசங்கள் அனைத்தும் ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தை மையமாக வைத்தே சொல்லி இருக்கின்றது. இந்த தகவல்களை நாம் படிக்கப் படிக்க மதியால் வித்தகனாக்கின்றோம். மதியால் வித்தகனான உடனேயே மனதால் உத்தமனாக மாறுகின்றோம். மனதால் உத்தமனானால் சீவ சிவ தத்துவத்தை உணர்ந்து கொள்கின்றோம், சீவன் என்பது ஜீவாத்மா, சிவன் என்பது பரமாத்மா. இப்படிப்பட்டி சிவஞானம் நன்றாகப் பதியும்படி பர யோகத்தை அருள்வாயே என்று கரூரில் திருப்புகழ் பாடுகின்றார் நமது கௌமார குரு அருணகிரிநாத சுவாமிகள். இந்த மூன்று நிகழ்வுகளிலும் நாம் ஒன்றை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். என்ன அது அதுதான் கௌமார நெறியாகிய குரு நெறி. இதில் எங்கு குரு வருகின்றார் என்ற கேள்வி எழும். இதோ விளக்கம் சொல்கின்றேன். இராமாயனத்தில் ராமனிடம் இருந்த பிரிந்து சென்ற சீதையை கண்டுபிடித்து தூது சென்றவர் ஆஞ்சனேயர். அவர் தான் ஜீவாத்மா பரமாத்மாவை இணைக்க வந்த குரு நாதர் ஆவார். 

       குருவாகியஅனுமன் சீதையிடம் பரமாத்மா இராமன் பற்றி கூறுதல்

அடுத்து வள்ளி திருமண நிகழ்வில் முருகப்பெருமானிடம் வள்ளியைப் பற்றி எடுத்துச் சொல்லி வள்ளியைத் திருமணம் செய்யுமாறு முருகனிடமும் வள்ளியிடமும் தூது சென்றவர் நாரத முனிவர். இங்கு அவர்தான் ஜீவாத்மா பரமாத்மாவை இணைக்க வந்த குரு நாதர் ஆவார். 
                       வள்ளி திருமணத்தில் நாரதமுனி குருவாக வருதல்
அதே போல் கந்த புராணத்தில் ஜயந்தனை விட்டுவிடுமாறு சூரபத்மனிடம் சொல்லியும் ஜயந்தனைச் சந்தித்து விரைவில் முருகப்பெருமான் உன்னை வந்து மீட்பார் என்று தூது சென்றவர் வீரபாகுத்தேவர். அவர் தான் இங்கு ஜீவாத்மா பரமாத்மாவை இணைக்க வந்த குரு நாதர் ஆவார். 
                                    
                                                 முருகனும் வீரபாகுவும்
இப்போது புரியும் என நினைக்கின்றேன். நாம் ஜீவாத்மா முருகப்பெருமான் பரமாத்மா நம்மைமுருகனோடு அதாவது பரம்பொருளான பரமாத்மாவோடு இணைக்கப் போவது யார்?  அவர்தான் குரு நாதர். குருவே சிவமெனக் கூறினான் நந்தி என்றும் தெளிவு குருவின் திரு உரு சிந்தித்தல்தானே என்றும் திருமூல நாயனார் சொல்கின்றாறே திருமந்திரத்தில் அவரை விடவா நாம் மதியால் வித்தகனாகிவிட்டோம். தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்பதும் மூலன் வாக்கு. சற்று சிந்தித்துப் பாருங்கள். 
                                                                திருமூலர்
குரு உருவே தியானம் என்று அருணகிரிநாத சுவாமிகள் இந்த திருப்புகழில் சொல்கின்றார். நிதியே நித்தியமே என்று சொல்லிவிட்டு என் நினைவே என்கிறார். தொடர்ந்த குரு நினவே தியானம் என்பது. அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமான் குரு நாதர் என்பதால் என் நினைவே என்கின்றார். நமக்கு நமது குரு நாதர்தான் நிதி, நித்தியம், நினைவு என்று எல்லாமாக இருக்க வேண்டும். இது நான் சொல்லவில்லை அருணகிரிநாத சுவாமிகள் அப்படி கௌமார நெறியில் வாழ்ந்து காட்டி இருக்கின்றார். அதைத்தான் நாம் கடைபிடிக்க வேண்டும். கௌமார மடத்தை கோவையில் ஸ்தாபித்த தவத்திரு இராமானந்த சுவாமிகள் அவர்கள் தனது குரு நாதரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் திரு உருவை பூஜித்து அவர் பிரதிஷ்டை செய்த முருகன் திருஉருவத்திற்கும் தண்டபாணி சுவாமிகள் என்றே பெயர் சூட்டி வழிபாடு செய்துள்ளார்கள். நாளடைவில் அந்த தெய்வத்திரு உருவம் தண்டபாணிக்கடவுள் எனும் திரு நாமம் தாங்கிவிட்டதாக எமது குரு நாதர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் என்னிடம் கூறிய போது எனக்கு உள்ளம் உவகை கொண்டு உச்சி குளிர்ந்தது.
                                                  
                                                 சிரவை தண்டபாணிக் கடவுள்
                                      வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
                                   திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள்
 குரு நெறியைப் போற்றி வருவதே கௌமார சமயம். எனவே சீவாத்மா பரமாத்மாவை இணைக்க ஒரு குரு தேவை என்பதை உணர்ந்து கொண்டு நல்ல செல்வ வளம் கிடைத்து எப்போதும் இறைவனாகிய குருவிற்குச் சேவை செய்ய வேண்டி பிரார்த்தனை செய்து இன்றைய கரூர் திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள்.
 கரூர் திருப்புகழ்
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.

குழந்தைகள் கல்வியில் நல்ல மேன்மை அடையவும், தவறான பழக்க வழக்கங்களில் உங்கள் குழந்தைகள் சிக்காது இருக்கவும், எப்போதும் இருக்கின்ற மனக்குழப்பங்கள் நீங்கவும், கடன் தொல்லைகள் நீங்கி நல்ல செல்வ வளம் அடையவும், குரு சேவை செய்யவும், எப்போதும் இறைவன் நினைவிலேயே இருந்து செயலாற்றவும், நல்ல கதி கிடைக்கவும் எல்லோராலும் புகழ்ப்படுகின்ற கரூரில் உள்ள முருகப் பெருமானைச் சென்று சேவித்து செவ்வேள் பெருமானின் சீரிய அருளைப் பெற்று உய்யுமாறு கௌமாரபயணம் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்


கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


சிரவையாதீன முதல் மூன்று குருமஹா சந்நிதானங்கள் சமாதி வளாகத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள்
 ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வெள்ளி, 29 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-19

        
                                                             திருச்செங்கோடு
மனதிலே தோன்றும் எண்ணங்களை மட்டுமே நன்றாகக் கவனித்து வாருங்கள் அந்த எண்ணங்களே சொற்களாக வெளிப்படுகின்றன. நாம் பேசுகின்ற சொற்களை நன்றாகக் கவனித்துப் பேசுங்கள் சொற்களே செயல்களாக மாறுகின்றன. நமது செயல்களை நன்றாகக் கவனித்து வாருங்கள் செயல்களே நம்மை இந்த சமுதாய மதிப்புக்கும் அவ மதிப்புக்கும் ஆளாக்குகின்றன. செயற்கரிய செய்வார் பெரியர் என்கின்றார் வள்ளுவர். வையத்துள் வாழவாங்கு வாழ்பவர் வானத்துள் உறைகின்ற தெய்வத்துள் வைத்துப் போற்றப்படுவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றாகின்றது. இதற்கு பலர் பயிற்சிகளையும் தருவதைப் பார்க்கின்றோம். இன்னும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்து இந்தப் பயிற்சியை மக்கள் பெற்று வருகின்றனர். ஆனால் சில காலங்கள் மட்டுமே பயிற்சியும் செய்கின்றனர், அதே போல சில காலங்கள் மட்டுமே எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர். பின்னர் காலப் போக்கில் மீண்டும் தனது பழைய நினைவுகளுக்கே சென்று கண்டதையும் போட்டு மனதை காம, குரோத, மோக, லோப, மத மாத்சரியங்களால் மாசினை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு இணையம், தொலைக்காட்சி, அலைபேசி போன்ற ஊடகங்களும் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு தவறான எண்ணங்களை வளரச் செய்கின்றது. நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பது த்தவமசி எனும் வேத வாக்கியம். நமது ஆழ் மனதிற்கு அளப்பரிய சக்திகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். 
                                          
ஆனாலும் என்னால் அப்படி நல்ல எண்ணங்களை வளரச் செய்ய முடியவில்லையே என்று என்னிடம் பலர் புலம்புகின்றார்கள். அவர்களுக்கெல்லாம் அடியேன் சொல்வது குரு சேவை செய்யுங்கள் என்று.
                                          
ஒரு உன்னத குருவுடன் தொடர்பில் இருக்கும்போது நமது எண்ணங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. அப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்த எண்ணங்கள் நல்ல சொற்களாக பரிமளிக்க ஆரம்பிக்கின்றது. நல்ல சொற்களையே பேசும் நாம் விரைவில் பல நல்ல செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். குரு தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கரும்பில் இருந்து சக்கைகள் பிழியப்பட்டு எப்படி கரும்புச்சாறு எடுக்கப்படுகின்றதோ அப்படி இனிய பேச்சினால் பேசி நமது கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளின் பார்வையில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும். அவர்கள் பார்வையினால் நாம் அழிந்துவிடக்கூடாது. அப்படியே இருந்தாலும் நமது மனதிலே தோன்றுகின்ற எண்ணங்கள் நமது ஊழ்வினையினால் ஏற்படுபவையாகும். சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் ஆகிய மூன்று வினைகள் உண்டு. இந்த வினைகள் நமது பூர்வ ஜென்மத்தின் கர்மாவின் அடிப்படையில் வருபவையாகும். ஆனால் இந்த வினைகளெல்லாம் ஒரு உன்னத குருவின் திருவடி தீண்டியவுடன் நமக்கு தீமைகள் சுட்டுப் பொசுக்கப்பட்டு தூய வடிவினில் வாழ்வைத் தொடர ஏதுவாகின்றது. தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவார் என்கிறது கந்த புராணம். ஆம் பல்வேறு எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு படாத பாடு பட்டு வந்த அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமானின் தீட்சை அனைத்தும் நீக்கி மிகச்சிறந்த கௌமார குரு நாதராக மாற்றி உள்ளது. அந்த தீவினைகளினால் ஏற்படும் எண்ணங்கள் தோன்றாமல் என்னை காத்தருள்வாயே என்று அருணகிரிநாத சுவாமிகள் திருச்செங்கோட்டில் அருளும் முருகப் பெருமானிடம் இந்த்த் திருப்புகழில் பாடி இருக்கின்றார். இதோ இன்றைய திருப்புகழ்
                                            
 நாலாயிரம் கண் படைத்திலனே அன் நான்முகனே செங்கோட்டு வேலன்

திருச்செங்கோடு திருப்புகழ்
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
     கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையி ...... லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
     விருப்பஞ் சாலவு ...... முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
     விடற்கஞ் சேலென ...... அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்குங் கூரிய ...... வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
     யடுக்கும் போதக ...... முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
     திருச்செங் கோபுர ...... வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
     திருச்செங் கோடுறை ...... பெருமாளே.

மன அமைதி இல்லாமல் தவிப்பவர்கள் திருச்செங்கோடு சென்று முருகப்பெருமானை வணங்கி இந்த திருப்புகழைப் பாராயணம் செய்தால் பூர்வ ஜென்ம வினைகளால் பாதிக்கப்பட்ட தீய எண்ணங்கள் விலகும். அதே போல் எந்த வித தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தாலும் சரி இந்த திருப்புகழைத் தொடர்ந்து ஓதி வந்தால் அந்த தீய பழக்கங்கள் உங்களை விட்டு வினை ஓட விடுங்கதிர்வேல் மறவேன் எனும் அனுபூதியின் வாக்குப்படி ஓடி மறைந்து விடும். குருவின் உபதேசங்களை மனதிலே அடிக்கடி நினைத்து வந்தால் நல்ல எண்ணங்கள் தானாக வரும். குருவின் உபதேச மொழிகளை அனைவருக்கும் அடிக்கடி சொல்லி வந்தால் நல்ல சொற்கள் தானாகவே வரும். குருவிற்கு சேவை செய்வதை ஒரு கொள்கையாகக் கடைபிடித்து வந்தால் நல்ல செயல்கள் தானாகவே செய்யும் படி நேரும். குருவே பரம்பொருள் என்பது கௌமார சமய நெறியாகும்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 28 ஜனவரி, 2016

ஜீவ நாடியில் வந்த ஸ்ரீவித்யா சோடச தீப பூஜை

ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்டது ஆறு சமயங்கள். சண்மதங்கள் என்றும் அதைச் சொல்வார்கள். கணபதி வழிபாடு காணாபத்யம், முருக வழிபாடு கௌமாரம், சிவன் வழிபாடு சைவம், அம்பிகை வழிபாடு சாக்தம், சூரிய வழிபாடு சௌரம், விஷ்னு வழிபாடு வைணவம் எனப்படுகின்றது. நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் கௌமார சமய குரு பரம்பரையில் கௌமார வழிபாடு கடைபிடிக்கப்படுகின்றது. கௌமார நெறியில் அறு சமய வழிபாடும் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நிகழ்த்தப்படுகின்றது. அந்த வகையில் தைப்பூசத்தின் முன்தினம் தீர்த்த நீராட்டு நாளில் ஸ்ரீவித்தை மார்க்கத்தில் ஆச்சாரிய அபிடேகம் பெற்ற சாக்த உபாசகர் ஸ்ரீகுகானந்த நாத சுவாமிகள்(ஆதவா) அவர்கள் சோடச தீபம் ஏற்றியும், அகத்தியர் திருமைந்தன் அவர்கள் வேல் தீபம், சூல தீபம் ஏற்றியும் கூட்டு வழிபாடு நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. .இந்த தீபங்கள் செய்யும் முறைகளை  நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் உபதேசித்து இருந்தார்கள். நல்ல முறையில் தீபங்கள் செய்யப்பட்டு முதல் தீபம் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தலைமையில் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. மதுரை இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சுமார் 500 பக்தர்கள் வழிபாடு செய்து அருள்பெற்றார்கள். அந்த நிகழ்ச்சிகளின் சில காட்சிகள்.
சாக்த உபாசகர், இறையருள் மன்றத்தினருடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் 
வேல், சூல வடிவில் தீப வழிபாடு 
                  சாக்த உபாசகருடன் உரையாடும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
சோடச தீபம் 
தைப்பூச ஊர்வலத்தில் பாலமுருகப்பெருமான் 
வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்
இந்த தீப வழிபாடு திதி நித்யா தேவிகள் புடை சூழ பாலாம்பிகை இராஜ மாதங்கி, வாராஹியுடன் லலிதா திரிபுர சுந்தரியின் அருளை ஒருசேரப் பெற்றுத்தந்தது எனும் செய்தி நமது ஜீவ நாடியில் வந்து அனைவரையும் ஆனந்தம் அடையச் செய்தது.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-18


இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சமயத்தின் தத்துவங்களை கடைபிடித்து அந்த சமயத்தின் குருநாதர் உணர்த்துகின்ற நெறிகளைக் கைக்கொண்டால் அந்த சமயத்தின் தெய்வம் பரம்பொருள் வடிவத்தைக் காட்டி நம்மை வந்து ஆட்கொள்ளும். பரம்பொருள் ஒன்றுதான் என்பதில் நமக்கு எந்தவித மாற்றுக் கருத்துக்களும் ஏற்படுவதில்லை. ஆனால் அந்த பரம்பொருள் கணபதியா, முருகப்பெருமானா, சிவ பெருமானா, அம்பாளா, சூரியனா அல்லது விஷ்னுவா என்பதே இப்போது பெரிய சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் செய்தியாகும். நான் இந்து நான் கிருத்துவன் நான் இசுலாமியன் எனும் வகையில் சமயப்பூசல்கள் ஆங்காங்கே எழுந்து வந்தாலும் எல்லா மதத்தினருக்குமே இறைவன் ஒருவர்தானே. பரம் பொருள் ஒன்றுதானே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மதப் பூசல்கள் ஒருபுறம் இருந்தாலும் அறு சமய வழிபாடான நமது இந்து சமயத்துக்குள்ளேயே பலவித தெய்வ அவதாரங்கள் இருப்பதால் நாம் எந்த தெய்வத்தை வழிபடுவது எனும் ஒரு குழப்பம் ஏற்படவே செய்கின்றது. கணபதியை வணங்கினால் முருகனுக்குப் பிடிக்காதோ, முருகனை வணங்கினால் விஷ்னுவுக்குப் பிடிக்காதோ என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும், பாமர மக்களுக்கும் ஒருவித குழப்பங்கள் வரவே செய்கின்றது. இது சமய உணர்வு எனப்படுகின்றது. தான் வழிபடுகின்ற கடவுளே பரம்பொருள் என்ற உணர்வோடு இருப்பதற்கு சமய உணார்வு என்று பெயர். வழிபாடுகள் முதிர்ச்சி அடைய அடைய பக்குவம் ஏற்படும்போது அந்த சமய உணர்வு சமரச உணர்வாக மலர்கின்றது. அதாவது நாம் வழிபடும் கணபதியே மற்ற முருகன் அம்பாள் சிவன் விஷ்னு சூரியன் போன்ற மற்ற சமயங்களுக்கும் அருள் வழங்குகின்றது என்பதே சமரச உணர்வாகும். இந்த சமரச உணர்வில் இருக்கும் பக்தன் ஓரளவு பக்குவப்பட்டவன் என்றே சொல்ல வேண்டும். இன்னும் பக்தியில் ஆழம் கானும்போது அதே பக்தன் பரம்பொருள் ஒன்றுதான் அந்த ஒரு பரம்பொருளே நாம் வழிபடும் கணபதி உட்பட அனைத்துக் கடவுளாகவும் தேவைக்கு ஏற்ப அவதாரம் எடுத்து வந்து இந்த உலகை படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி அரும் பெரும் ஐந்தொழிழ்களைச் செய்கின்றது என்ற ஒரு மிகுந்த பக்குவ உணர்விற்கு செல்கின்றான். இந்த நிலை சமயாதீத நிலை என்று சொல்லப்படுகின்றது. சமய, சமரச, சமயாதீத நெறிகளைப் படிப்படியாக கடிபிடித்து வரும்போது அந்த பக்தன் மெய்யான எம்மதமும் சம்மதம் எனும் நிலையை அடைகின்றான். இந்த உபதேசங்களை உலகிற்கு அருளியவர் தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். 
                   தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். 
இந்த உபதேசங்களை எனக்குப் போதித்தவர் எமது குருநாதர் சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள். எதற்காக இதை இங்கு சொல்கின்றேன் என்றால் கௌமார சமயம் அனைத்து சமயங்களையும் ஒரு சேர நினைத்து அறு சமய வழிபாட்டை மேற்கொள்ளச் செய்கின்றது. அறு சமய சாத்திரப் பொருளோனே என்பார் அருணகிரிநாத சுவாமிகள். எமது சமய்ம் பெரியது, உமது சமயம் தாழ்ந்தது என்று விவாதங்களை மேற்கொண்டு விவாதங்களையே வாழ் நாள் முழுதும் செய்து செய்து இந்த காவிரி எங்கு உற்பத்தி ஆகிறது எப்படிப்பட்டது என்று விவாதங்களையே செய்து கொண்டு தமது வாழ் நாளில் ஒரு முறை கூட அந்தக் காவிரியில் குதித்து குளித்து சுகம் காணாத வீணர்கள் போல சமயப் பூசல்களை விவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். 
                                                   
எது நமது மனதை ஈர்க்கின்றதோ அந்த சமய நெறியில் நின்று யார் நமது ஆன்மாவை ஈர்க்கின்றார்களோ அவரைக் குருவாக ஏற்று வழிபாடு இயற்றி வந்தால் இந்த சமய, சமரச, சமயாதீத உணர்வுகள் தானாகத் தோன்றி அவன் அருளால் அவன் தான் வணங்கும் செயல்கள் வந்து காலன் நம்மை அனுகாமல் அவன் இரு காலில் வழிபட இறைவன் அருள்வான். இப்படிப்பட்ட சமயச் சண்டைகளிலும், விவாதங்களிலும், வாக்குவாதங்களிலும் நான் ஈடுபடாமல் கடல் போன்று உள்ள கலை மற்றும் அறிவு ஆகியவற்றை உன்னை அறியவே பயன்படுத்த வேண்டும் என்று பவானியில் உள்ள முருகன் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய தினம் ஒரு திருப்புகழ்.

பவானி திருப்புகழ்

கலைமேவு ஞானப் பிரகாசக்
     கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
     பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
     மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
     திருவாணி கூடற் ...... பெருமாளே.

திரு என்பது அலைமகளாகிய செல்வம் வாணி என்பது கலைமகளாகிய கல்வி இந்த இரண்டும் இணைகின்ற இடமாகிய (திருவாணி கூடல்) பவானியில் இருக்கின்ற முருகன் மீது இந்த திருப்புகழைப் பாடுபவர்கள் தான் பெற்ற கல்வியினாலும் செல்வத்தினாலும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பதி ஞான வாழ்வைத் தருவாயே என்று துதித்தால் நிச்சயம் கௌமாரச் செல்வனாகிய முருகப்பெருமான் நம்மை கௌமார நெறியில் நன்றாகச் செலுத்தி நம்மை வந்து ஆட்கொள்வார். குரு நெறியே கௌமார நெறி, குருவே பரம் பொருள் என்பதும் கௌமார நெறி. அறு சமயமும் ஒரு சமயமே என்பதும் கௌமார நெறியே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் 

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம்ம், அந்தியூர்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-17


                                   
                                                                              கொடுமுடி
நான் பெரிய பணக்காரன். பணத்தினால் எதையும் என்னால் சாதிக்கமுடியும் என்றும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்றும் பணம் பாதாளம் வரை பாயும் என்றும் மார்தட்டிக்கொண்டு பணத்திற்காக எதையும் செய்யத் துணிபவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். முருகா உனக்கு ஒரு லட்சம் உண்டியலில் போடுகின்றேன் எனக்கு ஒரு கோடியாக திருப்பிக் கொடு என்று பேரம் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச் சொல் என்கிறார் ஔவைப்பிராட்டி. பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர். அதனால் நிச்சயம் பணம் வேண்டும். பணம் இருப்பவர்கள்தான் சிறப்பு தரிசனத்தில் சீட்டு வாங்கிச் சென்று கடவுள் திருவுரு முன் அமர்ந்து அனைத்து பூஜைகளையும் பார்க்க முடிகிறது. பணம் இல்லாத ஏழை பொது தரிசனத்தில் பத்து மணி நேரம் கால் கடுக்க நின்று தரிசனம் பெறுகிறான். இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்து  நான் அனைத்துவிதமான சாஸ்திரங்களையும் கற்றுவிட்டேன் எனும் கல்விச் செறுக்கில் அறிவாளி எனும் மிதப்பில் திகழ்பவர்கள் அனைவரும் ரசிக்க ரசிக்க பேசுபவர்கள் எழுதுபவர்கள் ஆகிய கல்வி உடையவர்களும் மறுபுறம். இப்படி செல்வச்செருக்கில் இருப்பவர்களும், அறிவாளி எனும் கல்விச்செறுக்கில் இருப்பவர்களும் கடவுளை நெருங்க முடிவதில்லை. செல்வத்தின் அதிபதி திருமகளாகிய லட்சுமி. அந்த திருமகளின் அதிபதி விஷ்னு. 
                                                
கல்விக்கு அதிபதி கலைமகளாகிய சரஸ்வதி. அந்த கலைமகளின் அதிபதி நான்முகனாகிய பிரம்மா. இவர்கள் இருவருமே முருகப்பெருமானை அறிய முடியாத போது நம்மிடம் இருக்கும் கல்வியும், செல்வமுமா முருகனைக் காட்டப்போகின்றது. சரி பின் எது காட்டும். பணம் இருப்பவர்கள் சிலை வடிவில் இருக்கும் கடவுளை விரைவில் தரிசனம் செய்யலாம் ஆனால் இறைவனின் தரிசனத்தை அடியவர்கள்தான் பெறமுடியும். எனவேதான் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்கிறார் ஔவையார். நல்ல தொண்டர்தம் உள்ளத்திதான் இறைவன் ஒடுக்கம். எனவே முருகா முருகா என்று எப்போதும் முருக சிந்தனையிலேயே இருப்பவர்களுக்கும் கௌமார குரு நெறியில் குரு சேவை செய்கின்ற உண்மையான அடியவர்களுக்கு முருகப் பெருமான் ஓடோடி வந்து நமக்கு அருகில் இருந்து அருள்வார். பிரம்மாவிற்கும் விஷ்னுவிற்கும் (பணத்திற்கும், அறிவிற்கும்) காட்சி தராத முருகப் பெருமான் தம் மீது தூய பக்தி செலுத்தும் அடியார்களுக்கு மிக எளிய முறையில் காட்சி தந்து ஆட்கொள்கின்றார். தாரகன் எனும் அரக்கனிடம் தோற்ற விஷ்னு தனது சக்கரத்தை இழக்க அதை தாரகனை வதம் செய்த பின்பு மீட்ட்சு விஷ்னுவிடம் முருகப் பெருமான் தருகிறார் என்பது புராணம். 
                                           
அதேபோல் பிரணவத்தின் பொருள் தெரியாதை பிரம்மனை தலையில் குட்டி சிறையில் முருகப்பெருமான் அடைத்த்தையும் புராணம் குறிப்பிடுகின்றது. அதன் தத்துவம் இதுதான். 
                                                          
இதை கொடுமுடி எனும் மும்மூர்த்தி ஸ்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடுகின்றார். இந்த இடத்தில் மற்ற சமய தெய்வங்களைத் தாழ்த்துவதாக எண்ணக்கூடாது. 18 புராணங்களைப் படித்தால் யார் புராண நாயகனோ அந்த தெய்வத்தை உயர்த்தி மற்ற தெய்வங்கள் அந்த தெய்வத்திற்கு பணிபுரிவதாக வரும். காரணம் நாம் வழிபடும் பரம்பொருள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் என்று அறிந்து கொள்வதற்காக அப்படி சொல்லப்பட்டுள்ளது. எனவே நமது கௌமார நெறியில் எல்லா தெய்வங்களும் ஒரு பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள்தான் என்று சொல்லப்பட்டுள்ளதால் வாசகர்கள் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். சமய பேதங்கள் பார்க்கும் ஒருவர் கௌமாரராக இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அறு சமய சாத்திரப் பொருளோனே என்ற ஒரே வரியில் அருணகிரிநாத சுவாமிகள் மிகத் தெளிவாக இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
                                                 
கொடுமுடியை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகச்சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்வது கொடுமுடி. வாழ்வில் எந்த கஷ்டமும் தீரவே இல்லை எனும் பணமும் கல்வியும் அதிகமுள்ளவர்கள் கொடுமுடி சென்று இந்த திருப்புகழைப் பாடினால் நிச்சயம் முருகப்பெருமானின் இன்னருள் கிட்டும் என்பது திண்ணம்.

கொடுமுடி திருப்புகழ்

இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
     இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே 

திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
     திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ 

அரியயற் கறிதற் ...... கரியானே
     அடியவர்க் கெளியற் ...... புதநேயா 
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
     கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

திங்கள், 25 ஜனவரி, 2016

கௌமார மடாலய தைப்பூச தேர்ப் பெருவிழா காட்சிகள்

கோவை கௌமார மடாலயத்தில் தைப்பூச தேர்ப் பெருவிழா சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற்று கிடைத்தற்கரிய பெறும் பேறு பெற்றார்கள். கண்ணினால் நல்ல காட்சி. அதைக் கண்டால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். இதோ அந்த விழா நிகழ்வுகளில் சில காட்சிகள்.
ஆராதனை செய்யும் ஆதீனம் அவர்கள் 
திரளாக வந்த முருக பக்தர்கள் கூட்டம் 
தைப்பூசத் தேரில் என் குருவும் குமர குருபரக் கடவுளும்
                                தேர் முன் பார் போற்றும் எம் ஞானதேசிகர் அவர்கள்
எம் ஞானதேசிகரைச் சுற்றி ஆடி வரும் அழகுக் காவடிகள்

சிரவை ஆதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 20ம் ஆண்டு தைப்பூச பெருவிழா !

அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி தைப்பூசத்தில் தங்க கவசத்தில் அலங்காரக் காட்சி
அந்தியூர் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 20ம் ஆண்டு தைப்பூச பெருவிழா முருகப்பெருமானின் அருளாசியினாலும்,கௌமார குருமார்களின் ஆசிர்வாதத்தாலும்,ஸ்ரீஸ்கந்த உபசாகர் சுவாமிகள் அவர்களுடைய தலைமையில் மிகச்சிறப்பாக   இனிதே  நடந்தது. விழா நிகழ்வுகளின் சில காட்சிகள் கௌமாரபயண  வாசகர்களுக்காக  வெளியிடுகின்றோம்.

                                                 
 ஸ்ரீஸ்கந்த உபாசகர்  சுவாமிகள் அவர்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குதல்.


              தைப்பூச பெருவிழாவில் பக்தர்கள் நடனமாடி மகிழ்ந்த காட்சி .
கொடி பூஜை 
பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் 
 ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் குரு பரம்பரையான அருணகிரி நாத சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் ஆகிய குரு மகான்களுக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் குரு பூஜை செய்தல்
விநாயகர் வழிபாடு


                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-16

                                        
மனிதனுக்கு வாதம், பித்தம், சிலோத்துமம் எனும் மூன்றின் கலவையால் 4,448 வியாதிகள் வருவதாக வைத்திய சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்துள்ளன. இந்த பிணிகள் எல்லாம் உடலுக்கு ஏற்படுபவையாகும். இது இல்லாமல் மனதிற்கு ஏற்படும் பிணிகள் வரையறை செய்ய இயலாத அளவு இருக்கின்றது. கோடி மனத்தார் என்பார் பட்டினத்தடிகள். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது அடங்காத குதிரை என்பார்கள். ஒரு முறை மனம் எதை விரும்புகின்றதோ அதே மனம் விரைவில் அதை வெறுக்கின்றது. எண்ணங்களை ஒருமுகப் படுத்த தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றோம். பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் என்று பாடுகின்றார் அருணகிரிநாத சுவாமிகள். மனிதப் பிறப்பில்  நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பிரச்சினைதான். பதம் பதம் விபதம் என்கின்றது வேதம். எனவே உடலுக்கு வருகின்ற நோய்கள், மனதிற்கு வருகின்ற நோய்கள் என வகை வகையாக இருந்தாலும் எல்லா நோய்களையும் விட கொடிய நோய் ஒன்றுள்ளது. அதுதான் பிறவி நோய். புனரபி ஜெனனம் புனரபி மரணம் என்கிறார் ஆறு மதங்களைத் தொகுத்த ஆதிசங்கரர் அவர்கள். அதாவது இறந்தன பிறக்கும் மீண்டும் பிறந்தன இருக்கும். இந்த பிறவி நோய் பற்றி தெய்வப்புலவர் வள்ளுவரும் குறிப்பிடுகின்றார். பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார் என்று. கயிலை மலை மீது கால் படக்கூடாது என்று தலையாலேயே நடந்து சென்று சிவபெருமானே ஓடோடி வந்து அம்மையே என்று அழைத்த பெருமை காரைக்கால் அம்மையாரைச்சேரும். அத்தகைய பெருமைகளை உடைய காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் பிறவாமை வேண்டும் என்கிறார் என்றால் இந்த பிறவி நோய் எவ்வளவு கொடிய நோய் என்று கௌமார பயணம் வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி தீராத பிணியைத் தீர்க்கின்ற சக்தி கௌமார சமயத்தின் பரம்பொருளாகிய முருகப்பெருமானிடத்தில் இருக்கின்றது. ஆறு சமயத்தின் ஒட்டு மொத்த உருவமே முருகப்பெருமான். அது மட்டுமல்ல ஆறு சமயத்தையும் வழிபடுவது நமது கௌமார சமயம். அடியேனின் குரு பீடமான கோவை கௌமார மடாலயத்தில் அறு சமயக் கடவுள்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உண்டு. எம்மதமும் சம்மதம் என்பதே கௌமாரத்தின் முதிர்ந்த நிலையாகும்.   முத்திக்கு ஒரு வித்து முருகப்பெருமான். இதையும் திருப்புகழே சொல்கின்றது. அப்படி முத்திக்கு விதையாக இருக்கின்ற முருகப்பெருமானிடம் கோயம்புத்தூரில் இருக்கின்ற பேரூர் எனும் தலத்தில் அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ் பாடும்போது முருகா தீராத பிணி தீர ஓர் வாக்கு அருள்வாயே என்கிறார். முருகப்பெருமானின் திருவாயில் இருந்து இந்த பிணி தீரும் என்று ஒரு வாக்கு வந்தால் போதாதா உடனே இந்த பிணிதீரும். அதனால்தான் அருணகிரிநாத சுவாமிகள் அப்படிக்கேட்கிறார். ஊர் பெயரே பாருங்கள் பேரூர். மற்றதெல்லாம் சிற்றூர் என்று சொல்லாமலே விளங்கும். அந்த பேரூரில்தான் பிறவாப் புளி இறவாப்பனை இருக்கின்றது.
                         தவத்திரு.சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள்
 பேரூர் என்ற உடனேயே அடியேனுக்கு திருமுருகாற்றுப்படையை உபதேசம் செய்து தமிழ் முறைப்படி நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் வழிபாடு நடத்தச் சொன்ன தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சுவாமிகள் அவர்கள் நினைவு வருகின்றது. 90 வயது கடந்தும் தமிழின் ஒட்டு மொத்த உருவமாக பேரூர் பெரிய சுவாமிகள் திகழ்ந்து வருகின்றார்கள். நமது பரம குரு நாதர் தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்களையும் சேர்த்து இரட்டை ஆன்மீக குரு நாதர்களாக இரண்டு சுவாமிகளும் கோவை மண்டலத்தில் திகழ்ந்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். 
                                           தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள்
அப்படிப் பெருமை நிறைந்த ஊர் பேரூர். அந்த பேரூர் தலத்தில் அருணகிரி நாத சுவாமிகள் பாடிய திருப்புகழ் இன்றைய பாராயண திருப்புகழாக மலர்கின்றது. 

தங்கள் உறவினர்கள் யாரேனும் அகால மரணமடைந்து ஆன்மா சாந்தியில்லாமல் அலைந்து வந்தாலும், ஜாதகத்தில் எத்தகைய பித்ரு சாபங்கள் இருந்தாலும் பேரூர் சென்று இந்த திருப்புகழைப் பாடி ஒரு மோட்ச தீபத்தை ஏற்றினால் நிச்சயம் அந்த சாபங்கள் நீங்கும். பெயரால் பெரிய பெயர் என்று புகழப்படும் முருகன் எனும் நாமத்தை உடையவரும் இந்த உலகத்தின் இறைவனாகிய சிவபெருமானின் பாலகனாகியவரும், எல்லா கிரிகளுக்கும் இறைவனாக விளங்குபவரும், பேரூரில் அருள் புரிபவருமாகிய முருகப்பெருமான் கருணை புரிவார் என்பது திண்ணம்.
இந்த திருப்பிகழின் பெருமை என்னவென்றால்
  • பெரிய நோய் பிறவி நோய்
  • பெரிய பெயர் முருகன் என்பது
  • பெரியது இந்த உலகம்
  • பெரிய உலகத்தின் இறைவன் மகன் முருகன்
  • பெரிய ஊர் பேரூர்                                
  • பெரிய உலகத்தின் இறைவனின் மகன் பெரிய பெயருடைய முருகன் பெரிய நோயான பிறவி நோயை பெரிய ஊரான பேரூரில் தீர்ப்பார் என்பதுதான் அதி உன்னத செய்தியாகும். அதுதான் திருப்புகழ். பொல்லா கருப்புகழை கேட்குமோ கான மயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி. இதோ கேளுங்கள். இதோ அந்த திருப்புகழ்.
பேரூர் திருப்புகழ்
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான 

ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே 

பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே 

பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.


 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.