2500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட மீனாட்சி நாடியில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்களின் பூர்வ ஜென்மம் கௌமாரம் என்றும் கோவை கௌமார மடாலயத்திற்கும்
இவருக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு உள்ளது என்றும் எனவே கோவை கௌமார மடம் தரிசனம் செய்
என்றும் அங்கு உபதேசம் கொள் என்றும் வந்ததால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் மந்திர உபதேசம் பெற்று கௌமார
பரம்பரையில் இணைந்து இருக்கின்றார்கள்.
கௌமார பரம்பரை என்பது
முருகபெருமான் அருணகிரி நாதருக்கு
செய்த உபதேசம் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்து வண்ணச்சரபம் தண்டபாணி
சுவாமிகள், தவத்திரு.இராமானந்த சுவாமிகள், தவத்திரு.கந்தசாமி சுவாமிகள், தவத்திரு.சுந்தர சுவாமிகள், தவத்திரு.குமர
குருபர சுவாமிகள் என்று தொடர்வதாகும். முருகனிடம் இருந்து வரும் ஒரே பரம்பரை இந்த
கௌமார பரம்பரை மட்டுமே ஆகும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து கௌமார சமயத்திற்கும் தலைமை பீடமாகத்திகழ்ந்து வருவது கோவை கௌமார மடாலயம் மட்டுமே என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். எனவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள் இந்த
பரம்பரையில் இணைய வேண்டும் என்று அன்னை மீனாட்சியின் ஆணைப்படி அவ்விதமே தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களைக் கௌமார குருவாக ஏற்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தனது முன் ஜென்மமான கௌமாரத்தில் இணைந்திருப்பது மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.
தமது 13 வயது முதலே முருகப்பெருமான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மூலம் நடத்தி வரும் திருவிளையாடல்களை நாம் அனைவருமே அறிந்து வருகின்றோம். இந்த இனிய நேரத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் கௌமாரத்தில் முறையாக பரம்பரை பரம்பரையாக வருகின்ற உபதேசத்தைப் பெற்றிருப்பதும் அந்த ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்களில் ஒன்று என்பது நிச்சயம்.
உபதேசம் பெற்ற நாளுக்கு என தமது குரு நாதர் மீது நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஒரு நினைவுக் கவி ஒன்றை அருள் நிலையில் இருந்து அகார வரிசையில் எழுதி இருக்கின்றார்கள். அதை தற்சமயம் பார்க்க நேர்ந்தது. உடனே அதை நமது கௌமார பயணத்தில் வெளியிட வேண்டும் என்ற ஒரு உந்துதலில் இப்பொது வெளியிடுகின்றேன். அனைவருக்கும் இறையருள் கிட்டி ஆனந்த வாழ்வு அடைய குருவருளையும் திருவருளையும் சிந்திக்கின்றோம்.
படம்: சிரவை ஆதீனம், தென்சேரிமலை ஆதீனம் ஆகிய குருமஹா சந்நிதானங்களுடன் கௌமார மடத்தில் உபதேச நாள் அன்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
படம்: உபதேசம் பெற்ற நாளில் ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் சென்ற ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம அடியார்கள் மஹா சந்நிதானங்களுடன்
படம்: கௌமார மடாலயத்தில் உள்ள முதல் மூன்று ஆதீன குரு நாதர்களின் மூவர் சமாதி வளாகத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
படம்: தென்சேரி மலை ஆதீனம் அவர்கள் சிரவை ஆதீனம் அவர்களின் முன்னிலையில் கௌமார காப்பை ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு அணிவித்தல்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய கவிதை
அருள் மந்திர உபதேச நாள் நினைவுக் கவி
விநாயகர் காப்பு
புத்தியும் தெளிவும் சிறப்பாகத் தருகின்ற
சித்தி மகோற்கடராய் சிரவையில் அருளும்
சத்தியம் தருமம் சீரான செல்வ வளம்தரும்
சித்தி கணபதியே காப்பு
குல தெய்வம் கரிய காளி காப்பு
குலம் காக்கும் தேவியவள் கரியகாளி
நலம் தரும்
நாயகியாய் காளிதேவி
பலம் தரும் தேவியாய் பத்ரகாளி
சீலமாய் சிறந்து காப்பு
முருகன் காப்பு
ஏறு மயிலேறி விளையாடும் குமரகுருபரனே
ஆறு முகத்தோடு காட்சி தரும் சண்முகனே
பேறு பெறவைக்கும் தூயவனே ஞானஸ்கந்தா
வீறு கொண்டு காப்பு
குரு வாழ்த்து(சிரவை ஆதீனம் அவர்கள் மேல்)
சந்திர ஒளி கொண்ட தூயமுகமும்
எந்திரம் போல் இயங்கும் பொன்மேனியும்
மந்திர உபதேசம் செய்யும் மாண்பும்
தந்திரமாய் இருந்து காப்பு
நூல்
உபதேச நினைவுக் கவி
அன்பாறு ஓடுகின்ற அருள் கவுமாரமே
அடியேன் என் பூர்வஜென்மம் என்று
அண்ணாமலை தனில் மீனாட்சி நாடி
அன்புடனே உரைத்த மொழி கேட்டு
அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றேன்
அதைப்
புதுப்பிக்க கவுமாரம் சென்று
அருள் மந்திர உபதேசம் தன்னை
அன்பாகப் பெறு என்று அருளாக
அன்னை மீனாட்சி உரைத்ததாலே
அமுத மொழி கேட்டு ஆச்சரியம் தான் அடைந்து
அருள் குரு நாதர் குமர குருபரர் சுவாமிகள் தன்னை
அன்புடனே நாடி நின்றேன் அப்படியே
அழகாக நாடி உரைத்த விதம் உரைத்தேன்
அருள் கொண்ட குரு நாதர் என்
அன்பு மொழி கேட்டு அப்டியா சந்தோசம்
அப்படியே ஆகட்டும் என்றார்
அறுமுகன் வரும்போது ஆகாய வீதி தனில்
அதிசயமாய் ஆயிரம் சூரியர்கள் சேர்ந்தால் போல்
அழகான அருள் செம்மை நிறக் காட்சியாமே
அதில் இருந்து அருள் பெற்ற ஒரு சூரியன் ஒளியே
அம்மம்மா இப்படி இத்திறம் எனும் போது
அறுமுகன் தன் ஒளி எப்படியோ எத்திறமோ
அந்த ஒளியதனை அற்புதம் எனக் கொண்ட
அந்த ஆறு முகக் கடவுள் ஆறு நாள் பூசையிலே
அழகிய மூன்றாம் நாள் ஆனந்த பூசையிலே
அன்பான கவுமாரக் குரு நாதன் என்னிடம்
அன்பாக அருளிய அருள் கட்டளை அதனாலே
அர்ச்சிக்க மலர் தட்டு தந்து எனை ஆட்கொண்டு
அருள்தரும் ஆறெழுத்து மந்திரத்தை ஆதி எழுத்துடன்
சேர்த்து
அன்புடனே அழகாக மும்முறை ஓதி ஓதி
அர்ச்சிக்க சொன்னாரே என் அங்கமெல்லாம் சிலிர்த்ததுவே
அழகுடைய பூசை தனை அழகனுக்கு முடித்தபின்னே
அன்பான உபதேசம் அற்புதமாய்க் கொடுத்தாரே அருள் குரு
அறுமுகங்களிலும் உள்ளதொரு கோடி சூரியப் பிரகாசம்
அழகான என் குருவின் முகத்தில் வந்ததுவே
அந்த ஆனந்த நிலையதனை வர்ணிக்க வார்த்தையில்லை
அப்படியே வாயடைத்துப் போய்விட்டேன்
அதன் பின்னர் அற்புதமாய் ஆறுமுகம் சொல்லி பூசும்
அரு மருந்தாம் அருள் திரு நீறு அணிகின்ற
அருள் திறத்தை அன்பாகப் போதித்து
அப்படியே உரையாடி அன்பொழுகப் பேசி
அமுதுக்கு நிகரெனவே அறுசுவை உணவுதனை
அன்புடனே அள்ளி அள்ளி பரிமாறச் செய்து
அருமையாய் வாழக்காய் பொறியலுடன்
அற்புத பருப்போடு அருள் ரசம் தன்னோடு
அமிர்தம் நிகரெனவே கெட்டித் தயிர் கொடுத்து
அழகாகக் கவனித்து அவரும் அருந்தினாரே
அன்பை வியந்து இலை மூடும் நேரத்தில்
அடடா என்று சொல்லி அமுத பாயாசம் கொண்டு
அடியவர் ஒருவர் அப்படியே வரும்போது
அதையும் கவனித்து முன்னே கொடுத்திருக்கலாமே என்று
அன்பு மொழியாலே அவரிடம் சொன்னாரே
அப்படியே சிலிர்த்துப் போய் விட்டேன்
அருள் தரும் கவுமார பயணம் எழுதும்
அன்பர் இவர் தான் என்று அறிமுகம் செய்துவைத்து
அப்படியே ஆட் கொண்டு அருள் தந்தார்
அடியார்கள் அணிகின்ற கவுமாரக் காப்பொன்றை
அருகிலே அமர்ந்து கொண்டு
அருள்திரு முத்து சிவராமசாமி அடிகளார்
அருள் கையில் அணிய வைத்தாரே
அந்த காப்பும் அவர் முகம் போல் செந்நிறமே
அதை அணிந்த பின்னர் பலப் பல
அருள் உபதேசங்கள் அன்பாகக் கொடுத்து
அன்புடனே ஆட்கொண்டார் இன்னும் இன்னும்
அதை எப்படிச் சொல்லிடுவேன்
அந்த ஆறுமுகனே அருள் சாட்சி
அன்புடனே விடை பெற்று
அங்கிருந்து வெளியேற மனமதில்லாமல்
அப்படியே விடைபெற்று வந்தேனே
அடியேன் உடல் மட்டும் இங்கே
அனைத்தும் ஆன்மா உட்பட
அருள் குரு நாதன் தன்னிடமே
அப்படியே விட்டு விட்டேன்
அவரது நினைவினிலே அனுதினமும்
அலைந்து அலைந்து இருக்கின்றேன்
அதுவே ஆனாலும் இது சுகாமான சுமைதான்
அப்படியே உண்மை குருவே பரம்பொருள்
அனுதினமும் மந்திரத்தை உச்சரித்து வருகின்றேன்
அதிகம் படித்தவன் ஆனாலும்
அருள் உபதேசம் தருவதற்கு
அனுபூதி வேண்டுமென்றும்
அதீத படிப்பு கொண்டோர்
அருள் உபதேசம் அப்படியே செய்தாலும்
அருள் உருவாகும் திறமில்லை என்றும்
அருமையாய் உணர வைத்தார் குரு
அப்படியே உணர்ந்து கொண்டேன்
அவர் போலே நிற்பதுவும்
அவர் நினைவில் இருப்பதுவும்
அவருடன் எடுத்த அருள் புகைப்படங்களை
அப்படியே அடுத்தவர் அறிய போடுவதும்
அவர் இடம் தன்னில் சென்று
அவர்போலவே நின்று படம் எடுப்பதுவும்
அவருக்கு அடிக்கடி குறுந்தகவல் கொடுப்பதுவும்
அவர் கொடுக்கும் தகவல்களை எதிர்பார்ப்பதும்
அப்படியே கவுமார பயணத்தில் போடுவதும்
அன்பன்றி வேறில்லை இது சத்தியம்
அதற்கும் அந்த ஆறுமுகனே அருள் சாட்சி
அதில் ஏதும் பிழை உண்டா என்றதொரு
அடிக்கடி குழப்பமும் வந்து வந்து போகிறதே
அப்படியே உயரப் பறந்தாலும் அவர் பருந்து
அடியேன் ஊர்க்குருவி என்பேன் உண்மை
அதிசயமேதுமில்லை ஊர்க்குருவி பருந்து போல்
அடிக்கடி நினைத்தாலும் என்ன நினைத்தாலும்
அது பருந்து ஆவதில்லை என்பதும் சத்தியம்
அன்னவர் ஒன்று சொல்லி தவகல் அனுப்ப
அதற்கு இணையாக நான் ஒன்று சொல்ல
அது எதிர்பேச்சு ஆயிடுமோ எனும்
அதிகக் கவலை அடிக்கடி வந்தாலும்
அவர் உன்னத குரு அன்றோ
அடியேன் சிறு பிள்ளைதானே
அப்படி ஏதேனும் ஆர்வக் கோளாறில்
அரும் பிழைகள் செய்தாலும்
அவர் கருணைக் கடவுள் கந்தவேலின்
அபூர்வ வம்ச குரு அதையும் மன்னிப்பார்
அடுசமர் செய்த மாயையின் மகன் அன்று
அறுமுகன் தனைக் கண்டு அற்புதமாய்
அப்படியே தூயவன் ஆனான் என்று
அருள் புராணத்தில் படித்துள்ளேன்
அது போல்தான் என் குருவும்
அழுக்குடைய பாவிகளும்
அவர் பார்வை பட்டு விட்டால்
அப்படியே தூயோராகி மேலைத் தொல்கதி
அடைவர் அன்றோ இது சத்தியம்
அவ்வளவு பாவி நானில்லை என்கிறது என் மனசாட்சி
அன்பு குரு நாதன் ஆட்கொண்டு என்னையும்
அப்படியே தூயவனாக்குவார் என்பது நிச்சயம்
அவருக்கு இணையாக நிற்கவும்
அவருடன் இணையாக அமரவும்
அவர் போல உடை அணியவும்
அப்படி ஒரு கூச்சம் வருகிறதே
அதிசயம் என்ன்வென்றால்
அவர் அண்ணாமலை ஜோதி
அடியேன் ஒரு மின்மினிப் பூச்சி
அடியார் பலர் என்னை சாமி என்றழைக்க
அதுவும் கூச்சம் கூச்சம்
அப்படி ஏதும் என்னிடம் இல்லை
அவரே சிறந்த குரு
அவருக்கே அதி உன்னதத் தகுதி உண்டு
அருள் உபதேசம் தருகின்ற தகுதி உண்டு
அவர் தான் சாமி என்றும்
அடியேன் வெறும் ஆசாமி என்றும்
அப்படியே உரைக்கின்றேன்
அதுதான் சத்தியம் நிச்சயம் நிதர்சனம்
அப்படி என்ன செய்து விட்டேன் நான்
அவருக்கு இணை அவரல்லவா
அன்பு குமர குருபரருக்கு இணை எவர்
அனைவர் வணங்கிடவும்
அருள் தகுதி கொண்டவர்
அதி உன்னதம் படைத்தவர்
அவர்தான் அன்பு குரு நாதர்
அறுமுகனை நான் கண்டதில்லை
அருணகிரியைக் கண்டதில்லை
அப்படியே வண்ணச்சரபரைக் கண்டதில்லை
அதுபோலும் அருள் ராமனந்தரையும் கண்டதில்லை
அப்படியே கந்தசாமிகளையும் கண்டதில்லை
அதுபோலே கஜ பூஜையும் கண்டதில்லை
அதை நடத்திய சுந்தர சாமியும் கண்டதில்லை
அத்துனையும் சேர்த்து ஒட்டு மொத்தமாய்
அப்படியே கண்டுவிட்டேன் ஆனந்தமாய்
அவர்கள் ரூபத்தில் உம்மை இது உண்மை
அன்பு குரு நாதன் ஆனந்த குரு நாதன்
அருள் உபதேசக் குரு நாதன்
அருள் மந்திரம் தந்த குரு நாதன்
அருள்திரு குமர குரு பரரை
அப்படியே கண்டு விட்டேன்
அதை உணர்ந்தவர் எத்தனை பேர்
அடியேன் அறிந்ததை அப்படியே
அனைவரும் அறியட்டும் என்றே
அன்பான எண்ணத்தில் அடிக்கடி எழுதியும்
அப்படியே சொல்லியும்
அடைகின்றேன் ஆனந்தம்
அவரைக் கண்டு பொறாமை ஏதுமில்லை
அப்படியே பெருமைதான் வேறில்லை
அவரிடம் எதிர்பார்ப்பு ஏதுமில்லை
அவர் தனியாக எனைக் கவனிக்க
அடியேன் பெரிய ஆளுமில்லை
அளப்பரிய சேவை எதுவும் செய்யவில்லை
அத்துனையும் துறந்து விட்டு
அருள் காவி அணிந்து கொண்டு
அற்புதக் கல்லாடை தரித்துக் கொண்டு
அவர் வருகின்ற அழகிற்கு இணை எவர்
அப்படியே காவி வேட்டி ஒன்றை
அருகில் ஏதேனும் கடையில் வாங்கி வந்து
அப்படியே கட்டி விட்டு அவர் போலவே நின்றால்
அவர் ஆகிவிட முடியுமா இது தகுமா
அனுபூதி பெறுகின்ற வழியை விட்டு விட்டு
அருளிலா ஆஷாட பூதியாவதற்கா இந்தப் பிறப்பு
அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துவிட்டால்
அவருக்கு இணையாகிவிட முடியுமா
அருள் பெறும் வழியைத் தேடி
அவர் கொடுத்த மந்திரத்தை
அனுதினமும் வேளைகிடைக்கும் போது
அடிக்கடி ஜபித்து வந்தால்
அப்படியே படிப்படியாய் அருள் கூடும்
அந்த இறையவன் அனுபூதி கூடும்
அன்பாக என் குரு நாதன் சொன்ன மொழி இது
அதை விடுத்து ஒரு நாளில் எதுவும் வந்துவிடாது
அப்படியே எல்லாம் மாயையாகி மயக்கும்
அது உண்மையா என்பதை அறிய நமக்கு சக்தியில்லை
அருள் குருவே அதை அறிவார்
அதனால்தான் அவரிடம் சரணடைந்தேன்
அருளாக முவ் வெழுத்தில் வருவதும்
அதேபோல் குவ் வெழுத்தில் வருவதும்
அறுமுகத்திற்குரிய சவ் வெழுத்தில் வருவதும்
அபூர்வ அருள் மந்திரம் பல உண்டு
அதில் எதைக் கொடுக்க வேண்டுமென்று
அருளுடன் குருவே தீர்மானிப்பார்
அப்படியே புத்தகத்தை அடிக்கடி பார்த்து
அந்த மந்திரத்தை உச்சரித்து வந்தாலும்
அழகான காகிதத்தில் சர்க்கரை என எழுதி
அதை சுவைத்தால் அரும் இனிப்பு வந்திடுமா
அறிஞர் என்று சொல்லி அபூர்வ மாயையில்
அப்படியே இருந்து விட்டேனோ அறியேன்
அனுபூதி பெறாமல் எதுவும் வந்திடாது
அனுபூதி பெறுவதற்கு குரு அருள் வேண்டும்
அப்படி குரு அருளோடு நம் உழைப்பும் வேண்டும்
அதேபோல் பூர்வ புண்ணியமும் வேண்டும்
அப்படி அனுபூதி பெறுதற்கு
அடித்தளம் இட்ட நாளே இந்த
அருள் மந்திர உபதேச திரு நாளாகும்
அதற்கு ஒரு நினைவுக் கவி தேடி
அப்படியே வருவதை எழுதி விட்டேன்
அரிய இலக்கணம் தெரியாது
அகரம் முதலாக அருளுடன்
அன்புடன் தோன்றிய குறளை நினைத்தேன்
அகரத்தில் தோன்றி அகர வரிசையிலே
அதுவாக வந்ததை அப்படியே
அடுக்கி வைத்தேன் அவ்வளவே
அருள் ஓம் கார மந்திரத்தில் முதல் எழுத்து
அகாரம் அன்றோ அது தொடக்கம்
அப்படி தொடக்கம் குறிக்கின்ற
அகார எழுத்ததுவில் ஆரம்பம் செய்து
அடுக்கி வைத்தேன் இதனை
அன்பு மட்டுமே அன்றி வேறில்லை
அருள் உபதேச தொடக்க நாளிற்கு
அகார தொடக்க எழுத்து பொருத்தமே
அதுகூட அடியேனின் சிறு கருத்து
அரிய தமிழில் அருள் முனைவர் பட்டம் பெற்ற
அரும் குருவின் முன்னாலே இது போற்றும் மலராக
அப்படியே இல்லாவிட்டாலும் அவதூறு ஆகக் கூடாதே
அரும் இலக்கண இலக்கியங்கள்
அற்புத புலமை புலவராக என் குரு இருக்கையிலே
அடியேன் சிறியவனின் கிறுக்கல்கள்
அதீத ஆர்வக் கோளாறால் எழுந்தவையே
அதுவும் நான் அறிவேன் நிச்சயம்
அப்படியே ஏதோதோ வருபவற்றைக் கிறுக்கி வைத்தேன்
அரும் பெரும் புலவர் பலர் கொண்ட
அற்புத கவுமார மடம் முன்னே
அடியேன் வரைந்த இந்தத் கவி தன்னில்
அத்துனையும் பிழையாக இருந்தாலும்
அது முழுதும் என் தவறே
அன்புக் கவி இதில் ஆங்காங்கே ஏதேனும் ஒரு சில
அருமைக் கருத்திருந்தால்
அது அத்தனைக்கும் எனது
அருள் குரு குமர குருபரரின் ஆசியும்
அவர் மேல் நான் கொண்ட அன்புமே
அன்றி வேறில்லை என அறிக
அப்படி இருந்தாலும் எனக்கு ஒரு மகிழ்ச்சி
அது என்னவென்று அறிந்து கொள்ள
அறுமுகப் பரமகுரு அன்பர் பலராலும்
அருந்தமிழில் வைதாரையும் வாழ வைப்பாரென்று
அகச்சந்தான குரு அருணகிரிநாதன் மொழிந்த
அருள் மந்திர அலங்காரம் சொல்வதாலே
அப்படிப் பிழை ஏதும் வந்தாலும்
அருள் தமிழால் வரைந்த இக்கவிதை
அப்படியே தப்பாமல் குரு அருள் தரும் என்று
அன்பாக உரைத்தது என் மனசாட்சி
அன்பிற்கு மொழி தேவையில்லை
அன்பாகச் சொன்னவர் என் குரு
அவர் பண்பிற்கு ஈடு இணையில்லை
அதிகாலை துயில் எழுந்து
அற்புதமாய் ஆன்மார்த்த பூசை செய்து
அதன் பின்னும் ஆலயப் பூசை செய்து
அடிக்கடி பல தல யாத்திரையும் செய்து
அற்புதமாய் குடமுழுக்கும் அதனோடு
அபூர்வ சேவை பல செய்தும் செய்வித்தும்
அதி உன்னத கல்வி சேவையோடு
அன்பாக தமிழ்ச் சேவை மருத்துவச் சேவை
அன்பு இல்லம் முதியோர் இல்லம் கண்டு
அருளாக பூசாரி பயிற்சி பலவும் நடத்தி
அபூர்வ நூல்கள் பலவும் வெளியிட்டு
அருமையாய் மறை மொழி எனும் தலைப்பில்
அற்புத கவுமார அமுத நூலில்
அருமையான கட்டுரை வழங்கி
அடிக்கடி கடல் கடந்தும் கச்சிதமாய்
அண்டை அயல் நாடு சென்றும்
அபூர்வ தொண்டு செய்யும்
அன்பு குரு நாதர் குமர குரு நாதர்
அவர் போல் எவரால் இருக்க முடியும்
அவ்வளவும் இருந்தாலும் அலட்டல் இல்லை
அன்பு மொழி கேட்க அமுத கானம்
அப்படியே பொறுமை அதன் பெருமை
அத்துனையும் என்னால் சொல்லொனாது
அம்மம்மா இத்துணை பெருமை கொண்ட
அருள் குரு சிரவை ஆதீன குரு முன்
அடியேன் எம்மாத்திரம் என்று எண்ணுவேன்
அத்தனையும் இது அப்படியே உண்மைதானே
அறிந்தவர் இதை அறிவர்
அப்படியே தான் உணர்வார்
அன்பு குரு நாதன் தனக்கு
அடியேனின் இக்கவிதை
அன்பு பாத காணிக்கை
அன்பாக ஒரு முறை படித்தாலே போதும்
அடியவன் மனம் குளிரும்
அது கூட சுய நலம்தான்
அருள் குருவே சரணம்
அப்படியே சத்தியம் குருவே பரம்பொருள்!
அப்படியே சத்தியம் குருவே பரம்பொருள்!!
அப்படியே சத்தியம் குருவே பரம்பொருள்!!!
வாழ்த்துக் கவி
சிரவை குரு பரம்பரை வாழி !
சிரவை குமர குருபரர் வாழி!
சிரவை மடம் சீராக வாழி!
சிரவை மடத்தில் உள்ளோர் வாழி!
சிரவை மடம் நாடும் எல்லோரும் வாழியவே!!
எழுதியவர்:
தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களின் சீடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்
அந்தியூர்.
இப்படிக்கு
கௌமாரபயணம் நிர்வாகி
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
இப்படிக்கு
கௌமாரபயணம் நிர்வாகி
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
முருகப் பெருமான் சுவாமி அருணகிரிநாதருக்கு அருளியது போல உங்களுக்கும் உங்கள் குருநாதர் சிரவை ஆதினம் அவர்கள் அருள் கொடுத்து உங்களை ஏற்றுக்கொண்டார்.முருகனே உங்கள் மனதில் தோன்றி என்னுடைய சீடனை பாடு என்று இந்த கவி மழையை பொழிய வைத்திருப்பார். அது தான் இந்த கவி மழை. அருமை! அருமை!
பதிலளிநீக்குமுருகனே உங்கள் மனதில் தோன்றி என்னுடைய சீடனை பாடு என்று இந்த கவி மழையை பொழிய வைத்திருப்பார். அது தான் true ayya இந்த கவி மழை. அருமை! அருமை!
பதிலளிநீக்கு