வெள்ளி, 29 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-19

        
                                                             திருச்செங்கோடு
மனதிலே தோன்றும் எண்ணங்களை மட்டுமே நன்றாகக் கவனித்து வாருங்கள் அந்த எண்ணங்களே சொற்களாக வெளிப்படுகின்றன. நாம் பேசுகின்ற சொற்களை நன்றாகக் கவனித்துப் பேசுங்கள் சொற்களே செயல்களாக மாறுகின்றன. நமது செயல்களை நன்றாகக் கவனித்து வாருங்கள் செயல்களே நம்மை இந்த சமுதாய மதிப்புக்கும் அவ மதிப்புக்கும் ஆளாக்குகின்றன. செயற்கரிய செய்வார் பெரியர் என்கின்றார் வள்ளுவர். வையத்துள் வாழவாங்கு வாழ்பவர் வானத்துள் உறைகின்ற தெய்வத்துள் வைத்துப் போற்றப்படுவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றாகின்றது. இதற்கு பலர் பயிற்சிகளையும் தருவதைப் பார்க்கின்றோம். இன்னும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்து இந்தப் பயிற்சியை மக்கள் பெற்று வருகின்றனர். ஆனால் சில காலங்கள் மட்டுமே பயிற்சியும் செய்கின்றனர், அதே போல சில காலங்கள் மட்டுமே எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர். பின்னர் காலப் போக்கில் மீண்டும் தனது பழைய நினைவுகளுக்கே சென்று கண்டதையும் போட்டு மனதை காம, குரோத, மோக, லோப, மத மாத்சரியங்களால் மாசினை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு இணையம், தொலைக்காட்சி, அலைபேசி போன்ற ஊடகங்களும் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு தவறான எண்ணங்களை வளரச் செய்கின்றது. நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பது த்தவமசி எனும் வேத வாக்கியம். நமது ஆழ் மனதிற்கு அளப்பரிய சக்திகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். 
                                          
ஆனாலும் என்னால் அப்படி நல்ல எண்ணங்களை வளரச் செய்ய முடியவில்லையே என்று என்னிடம் பலர் புலம்புகின்றார்கள். அவர்களுக்கெல்லாம் அடியேன் சொல்வது குரு சேவை செய்யுங்கள் என்று.
                                          
ஒரு உன்னத குருவுடன் தொடர்பில் இருக்கும்போது நமது எண்ணங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. அப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்த எண்ணங்கள் நல்ல சொற்களாக பரிமளிக்க ஆரம்பிக்கின்றது. நல்ல சொற்களையே பேசும் நாம் விரைவில் பல நல்ல செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். குரு தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கரும்பில் இருந்து சக்கைகள் பிழியப்பட்டு எப்படி கரும்புச்சாறு எடுக்கப்படுகின்றதோ அப்படி இனிய பேச்சினால் பேசி நமது கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளின் பார்வையில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும். அவர்கள் பார்வையினால் நாம் அழிந்துவிடக்கூடாது. அப்படியே இருந்தாலும் நமது மனதிலே தோன்றுகின்ற எண்ணங்கள் நமது ஊழ்வினையினால் ஏற்படுபவையாகும். சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் ஆகிய மூன்று வினைகள் உண்டு. இந்த வினைகள் நமது பூர்வ ஜென்மத்தின் கர்மாவின் அடிப்படையில் வருபவையாகும். ஆனால் இந்த வினைகளெல்லாம் ஒரு உன்னத குருவின் திருவடி தீண்டியவுடன் நமக்கு தீமைகள் சுட்டுப் பொசுக்கப்பட்டு தூய வடிவினில் வாழ்வைத் தொடர ஏதுவாகின்றது. தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவார் என்கிறது கந்த புராணம். ஆம் பல்வேறு எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு படாத பாடு பட்டு வந்த அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமானின் தீட்சை அனைத்தும் நீக்கி மிகச்சிறந்த கௌமார குரு நாதராக மாற்றி உள்ளது. அந்த தீவினைகளினால் ஏற்படும் எண்ணங்கள் தோன்றாமல் என்னை காத்தருள்வாயே என்று அருணகிரிநாத சுவாமிகள் திருச்செங்கோட்டில் அருளும் முருகப் பெருமானிடம் இந்த்த் திருப்புகழில் பாடி இருக்கின்றார். இதோ இன்றைய திருப்புகழ்
                                            
 நாலாயிரம் கண் படைத்திலனே அன் நான்முகனே செங்கோட்டு வேலன்

திருச்செங்கோடு திருப்புகழ்
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
     கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையி ...... லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
     விருப்பஞ் சாலவு ...... முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
     விடற்கஞ் சேலென ...... அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்குங் கூரிய ...... வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
     யடுக்கும் போதக ...... முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
     திருச்செங் கோபுர ...... வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
     திருச்செங் கோடுறை ...... பெருமாளே.

மன அமைதி இல்லாமல் தவிப்பவர்கள் திருச்செங்கோடு சென்று முருகப்பெருமானை வணங்கி இந்த திருப்புகழைப் பாராயணம் செய்தால் பூர்வ ஜென்ம வினைகளால் பாதிக்கப்பட்ட தீய எண்ணங்கள் விலகும். அதே போல் எந்த வித தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தாலும் சரி இந்த திருப்புகழைத் தொடர்ந்து ஓதி வந்தால் அந்த தீய பழக்கங்கள் உங்களை விட்டு வினை ஓட விடுங்கதிர்வேல் மறவேன் எனும் அனுபூதியின் வாக்குப்படி ஓடி மறைந்து விடும். குருவின் உபதேசங்களை மனதிலே அடிக்கடி நினைத்து வந்தால் நல்ல எண்ணங்கள் தானாக வரும். குருவின் உபதேச மொழிகளை அனைவருக்கும் அடிக்கடி சொல்லி வந்தால் நல்ல சொற்கள் தானாகவே வரும். குருவிற்கு சேவை செய்வதை ஒரு கொள்கையாகக் கடைபிடித்து வந்தால் நல்ல செயல்கள் தானாகவே செய்யும் படி நேரும். குருவே பரம்பொருள் என்பது கௌமார சமய நெறியாகும்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக