புதன், 6 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-3

திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் வயலூர் சென்றார். அப்போதும் முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. ஏமாற்றமடைந்த அவர், "அசரீரியே நீ சொன்னது பொய்யா?''என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி சொன்னது உண்மையே!' எனச்சொல்லி, அங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். உடனே முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல தலங்களுக்கும் சென்று பாடினார். இவ்வாறு, திருப்புகழ் என்ற ஒப்பற்ற நூல் கிடைக்க அருள் செய்தவர் வயலூரில் உள்ள பொய்யா கணபதி ஆவார்.

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடிசெய்த அதி தீரா

அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!!!!


பதவுரை
கைத்தலம் = கையில்.
நிறை = நிறைய.
கனி = பழம்.
அப்பம் ஒடு அவல் பொரி = அப்பம், அவல், பொரி (இவைகளை).
கப்பிய = வாரி உண்ணும்.
கரி முகன் = யானை முகக் கடவுளன்.
அடி பேணி = திருவடிகளை விரும்பி.
கற்றிடும் அடியவர் = கற்கும் அடியவர்களுடைய.
புத்தியில் உறைபவ = மனதில் உறைபவனே.
கற்பகம் என = (உன்னைக்) கற்பகமே என்று கூறினால்.
வினை = வினைகள் (யாவும்). கடிது ஏகும் = விரைவில் ஓடிப் போகும்.
மத்தமும்  ஊமத்த மலரும்.
மதியமும் = (பிறைச்) சந்திரனும்.
வைத்திடும் அரன் மகன் = (சடையில்) தரித்த சிவபெருமானுடைய மகனும்.
                            

மல் பொரு திரள் புய = மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும்.
மத யானை = மத யானையை ஒத்தவனும்.
மத்தள வயிறனை = மத்தளம் போன்ற வயிறு உடையவனும்.
உத்தமி = உத்தமியாகிய (பார்வதியின்).
புதல்வனை = மகனும் (ஆகிய கணபதியை).
                         
மட்டு அவிழ் மலர் கொடு = வாசனை வீசும் மலர்களைக் கொண்டு. பணிவேனே = நான் பணிவேன்.
முத்தமிழ் அடைவினை = முத்தமிழை எல்லாம்.
முற்படு கிரி தனில் = (மலைகளுள்) முற்பட்டதான மேரு மலையில்.
முற்பட எழுதிய = முதல் முதலில் எழுதிய. முதல்வோனே =முதன்மையானவனே.
                             
                                               
முப்புரம் எரி செய்த = (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த.
அச்சிவன் = அந்தச் சிவ பெருமான்.
உறை ரதம் = எழுந்தருளிய இரதத்தின்.
அச்சு அது = அச்சை. பொடி செய்த = பொடியாக்கிய.
அதி தீரா = மிக்க தீரனே.
                         
அத்துயரது கொடு = (வள்ளியம்மை மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு.
சுப்பிர மணி படும் = (உன் தம்பியாகிய) சுப்பிரமணி நடந்த.
அப்புனம் அதன் இடை = அந்தத் (தினைப்) புனத்திடை.
இபமாகி = யானையாகத் தோன்றி.
அக்குற மகளுடன் = அந்த குற மகளாகிய வள்ளியுடன்.
அச்சிறு முருகனை = அந்தச் சிறிய முருக பெருமானை
அக்கணம் = அப்பொழுதே.
மணம் அருள் பெருமாளே = மணம் புரிவித்த பெருமாளே.
                      
                                 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக