திங்கள், 11 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-8

தலங்கள் தோறும் திருப்புகழைப் பாடி வந்த அருணகிரிநாத சுவாமிகள் திருவாவினன்குடிக்கு வரும்போது முருகப்பெருமான் ஜபமாலை ஒன்றைத் தருகின்றார். இதை அருணகிரி நாத சுவாமிகளே தமது திருப்புகழில் குறிப்பிடுகின்றார். இந்தத் திருப்புகழை மனதார ஓதினால் நமக்கு ஜபம் செய்கின்ற பழக்கம் விரைவில் வரும். ஜபம் செய்யச் செய்ய மனம் ஒடுங்கும் மனம் ஒடுங்கினால் மூச்சு ஒடுங்கும். மூச்சு ஒடுங்கினால் நாம் யார் எதற்காக இங்கு வந்தோம் என்பது புரிய ஆரம்பிக்கும். 
ஒரு முறை கண்ணீர் சிந்திக்கொண்டு ஒரு அம்மையார் என்னை வந்து சந்தித்தார்கள். அவர்களுக்கு 100% அப்பைடியே ஜீவ நாடி உரைத்த பின்னர் இன்னும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள். காரணம் தனது ஒரே பிள்ளை ஒழுக்க நெறியில் இல்லாமல் இருப்பதுதான். அதற்கு அடியேன் கொடுத்த விளக்கத்தை இங்கு எமது ஞானதேசிகரை வணங்கி  எழுதுகின்றேன்.
அருமை பெருமை நிரம்பிய திருப்புகழை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் ஜட இசையை சினிமா பாடல்களையே கேட்டு கேட்டு புத்தி மழுங்கிப் போகின்றார்கள் இளைஞர்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இளமை காலந்தொட்டே நல்ல மகான்களின் சேர்க்கையிலும் மேற்பார்வையிலும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நமது குழந்தைகள் மாதா பிதா குரு தெய்வம் எனும் நெறிகளை புரிந்து கொள்ளும். கடைசி காலத்தில் முதியோர் இல்லத்திற்கு உங்களை அனுப்பாது. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மதிரம் இல்லை ஆலயம் தொழுவது சாலவும் நன்று குருவே பரம் பொருள் என்று சிறு வயது முதலே ஆழப் பதிய வைத்துவிட்டால் நிச்சயம் உங்கள் குழந்தைகள் புகை பிடித்தல் மது அருந்துதல் தவறான பழக்க வழ்க்கங்கள் என எந்த தீமைகளிலும் சிக்காமல் சிறப்பான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளும். எல்லாமே நவீன காலம் என்று சொல்லிக் கொண்டு ஆன்மீகப் பெரியோர்களை நாம் எப்போது விரும்பாமல் இருக்கின்றோமோ அப்போதே பிரச்சினை ஆரம்பம் ஆகி விடுகின்றது. எமது ஞானதேசிகர் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் பழனியில் பட்டணம் சுவாமிகள் குரு பூஜையில் தனது அருளுரையில் குறிப்பிடும் போது கள்ளம் கபடம் இல்லாத நல்ல நிலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பை முடித்து வெளியே வரும்போது போட்டி பொறாமை எனும் தீய குணங்களோடு வெளி வருகின்றதே எப்படி? அப்போது நாம் பள்ளிகளில் எதைப் போதிக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இதை ஒரு பதிவில் எழுதி இருக்கின்றேன். 
               படம்: பழனி பட்டணம் சுவாமிகள் குரு பூஜையில் எம் ஞானதேசிகர்
காரணம் மதிப்பெண்ணை மட்டுமே பார்க்கும் நாம் நல்ல ஒழுக்க நெறிகளை போதிக்கத் தவறிவிடுகின்றோம். ஒழுக்க நெறிகள் குறித்த கல்வியை யாரும் விரும்புவதில்லை. கோவை கௌமார மடாலயத்தில் உள்ள பள்ளிகளில் எமது ஞானதேசிகர் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களின் நேரடி அருள் பார்வையில் பல ஒழுக்க நெறிகள் போதிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள்தான் உயிரினும் மேலாக ஒழுக்கத்தை ஓம்பும். எனவே நாம் நமது பாரம்பரிய வழிபாடான முருக பக்தியில் திளைக்க முன் வர வேண்டும். ஆன்மீகப் பெரியோர்களின் அருளுரையை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி எடுக்க வேண்டும் அதன் பின்பு சிறுகச் சிறுக நமது வாழ்வு மாற்றம் அடைவதைக் காணலாம். அதுதான் எங்கள் வேண்டுகோள். எனவே எமது ஞானதேசிகரின் அறிவுரைப்படி தினமும் திருப்புகழைப் படி என்று சொல்லி விபூதி கொடுத்து அனுப்பி வைத்தேன். பிரச்சினைகள் வந்த பின்பு அழுவதைவிட இப்போதே ஒரு சபதம் எடுப்போம் என்ன சபதம்? முதல் சபதம் நமது பாரம்பரிய முருக பக்தியைக் கடைபிடித்து கௌமார நெறியில் நின்று எம்மதமும் சம்மதம் என உணர்ந்து குருவே பரம்பொருள் எனும் நெறியை அறிந்து திருப்புகழை தினமும் படிப்போம். இரண்டாவது சபதம் குருவை பரம்பொருளாக உணர்ந்து குரு சொல்லே மந்திரம் என செயல்படுவோம். இதோ இன்றைய திருப்புகழ்

ஆவினன்குடி திருப்புகழ்
அபகார நிந்தைபைட்                         டுழலாதே
        அறியாத வஞ்சரைக்                  குறியாதே
உபதேச மந்திரப்                          பொருளாலே
        உனைநானி னைந்தருட்      பெறுவேனோ
இபமாமு கன்தனக்                    கிளையோனே
        இமவான்ம டந்தையுத்                தமிபாலா
ஜெபமாலை தந்தசற்                           குருநாதா
        திருவாவி னன்குடிப்               பெருமாளே.

சுருக்க உரை
தீமை செய்யும் நிந்தைகளுக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியைக் கைக்கொள்ளாத வஞ்சகர்களாகிய விலை மாதர்களுக்கு இணங்காமலும், நீ எனக்கு உபதேசித்த மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டுஉன்னை நினைந்து, உன் திருவருளைப் பெற மாட்டேனோ?கணபதியின் தம்பியே. பார்வதி தேவியின் மகனே, எனக்கு ஜெபமாலையைத் தந்த சற்குருநாதனே, திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே,உன்னை நினைந்து அருள் பெற வேண்டுகின்றேன்.


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

1 கருத்து: