வியாழன், 28 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-18


இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சமயத்தின் தத்துவங்களை கடைபிடித்து அந்த சமயத்தின் குருநாதர் உணர்த்துகின்ற நெறிகளைக் கைக்கொண்டால் அந்த சமயத்தின் தெய்வம் பரம்பொருள் வடிவத்தைக் காட்டி நம்மை வந்து ஆட்கொள்ளும். பரம்பொருள் ஒன்றுதான் என்பதில் நமக்கு எந்தவித மாற்றுக் கருத்துக்களும் ஏற்படுவதில்லை. ஆனால் அந்த பரம்பொருள் கணபதியா, முருகப்பெருமானா, சிவ பெருமானா, அம்பாளா, சூரியனா அல்லது விஷ்னுவா என்பதே இப்போது பெரிய சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் செய்தியாகும். நான் இந்து நான் கிருத்துவன் நான் இசுலாமியன் எனும் வகையில் சமயப்பூசல்கள் ஆங்காங்கே எழுந்து வந்தாலும் எல்லா மதத்தினருக்குமே இறைவன் ஒருவர்தானே. பரம் பொருள் ஒன்றுதானே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மதப் பூசல்கள் ஒருபுறம் இருந்தாலும் அறு சமய வழிபாடான நமது இந்து சமயத்துக்குள்ளேயே பலவித தெய்வ அவதாரங்கள் இருப்பதால் நாம் எந்த தெய்வத்தை வழிபடுவது எனும் ஒரு குழப்பம் ஏற்படவே செய்கின்றது. கணபதியை வணங்கினால் முருகனுக்குப் பிடிக்காதோ, முருகனை வணங்கினால் விஷ்னுவுக்குப் பிடிக்காதோ என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும், பாமர மக்களுக்கும் ஒருவித குழப்பங்கள் வரவே செய்கின்றது. இது சமய உணர்வு எனப்படுகின்றது. தான் வழிபடுகின்ற கடவுளே பரம்பொருள் என்ற உணர்வோடு இருப்பதற்கு சமய உணார்வு என்று பெயர். வழிபாடுகள் முதிர்ச்சி அடைய அடைய பக்குவம் ஏற்படும்போது அந்த சமய உணர்வு சமரச உணர்வாக மலர்கின்றது. அதாவது நாம் வழிபடும் கணபதியே மற்ற முருகன் அம்பாள் சிவன் விஷ்னு சூரியன் போன்ற மற்ற சமயங்களுக்கும் அருள் வழங்குகின்றது என்பதே சமரச உணர்வாகும். இந்த சமரச உணர்வில் இருக்கும் பக்தன் ஓரளவு பக்குவப்பட்டவன் என்றே சொல்ல வேண்டும். இன்னும் பக்தியில் ஆழம் கானும்போது அதே பக்தன் பரம்பொருள் ஒன்றுதான் அந்த ஒரு பரம்பொருளே நாம் வழிபடும் கணபதி உட்பட அனைத்துக் கடவுளாகவும் தேவைக்கு ஏற்ப அவதாரம் எடுத்து வந்து இந்த உலகை படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி அரும் பெரும் ஐந்தொழிழ்களைச் செய்கின்றது என்ற ஒரு மிகுந்த பக்குவ உணர்விற்கு செல்கின்றான். இந்த நிலை சமயாதீத நிலை என்று சொல்லப்படுகின்றது. சமய, சமரச, சமயாதீத நெறிகளைப் படிப்படியாக கடிபிடித்து வரும்போது அந்த பக்தன் மெய்யான எம்மதமும் சம்மதம் எனும் நிலையை அடைகின்றான். இந்த உபதேசங்களை உலகிற்கு அருளியவர் தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். 
                   தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். 
இந்த உபதேசங்களை எனக்குப் போதித்தவர் எமது குருநாதர் சிரவையாதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள். எதற்காக இதை இங்கு சொல்கின்றேன் என்றால் கௌமார சமயம் அனைத்து சமயங்களையும் ஒரு சேர நினைத்து அறு சமய வழிபாட்டை மேற்கொள்ளச் செய்கின்றது. அறு சமய சாத்திரப் பொருளோனே என்பார் அருணகிரிநாத சுவாமிகள். எமது சமய்ம் பெரியது, உமது சமயம் தாழ்ந்தது என்று விவாதங்களை மேற்கொண்டு விவாதங்களையே வாழ் நாள் முழுதும் செய்து செய்து இந்த காவிரி எங்கு உற்பத்தி ஆகிறது எப்படிப்பட்டது என்று விவாதங்களையே செய்து கொண்டு தமது வாழ் நாளில் ஒரு முறை கூட அந்தக் காவிரியில் குதித்து குளித்து சுகம் காணாத வீணர்கள் போல சமயப் பூசல்களை விவாதம் செய்யாமல் இருக்க வேண்டும். 
                                                   
எது நமது மனதை ஈர்க்கின்றதோ அந்த சமய நெறியில் நின்று யார் நமது ஆன்மாவை ஈர்க்கின்றார்களோ அவரைக் குருவாக ஏற்று வழிபாடு இயற்றி வந்தால் இந்த சமய, சமரச, சமயாதீத உணர்வுகள் தானாகத் தோன்றி அவன் அருளால் அவன் தான் வணங்கும் செயல்கள் வந்து காலன் நம்மை அனுகாமல் அவன் இரு காலில் வழிபட இறைவன் அருள்வான். இப்படிப்பட்ட சமயச் சண்டைகளிலும், விவாதங்களிலும், வாக்குவாதங்களிலும் நான் ஈடுபடாமல் கடல் போன்று உள்ள கலை மற்றும் அறிவு ஆகியவற்றை உன்னை அறியவே பயன்படுத்த வேண்டும் என்று பவானியில் உள்ள முருகன் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய தினம் ஒரு திருப்புகழ்.

பவானி திருப்புகழ்

கலைமேவு ஞானப் பிரகாசக்
     கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
     பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
     மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
     திருவாணி கூடற் ...... பெருமாளே.

திரு என்பது அலைமகளாகிய செல்வம் வாணி என்பது கலைமகளாகிய கல்வி இந்த இரண்டும் இணைகின்ற இடமாகிய (திருவாணி கூடல்) பவானியில் இருக்கின்ற முருகன் மீது இந்த திருப்புகழைப் பாடுபவர்கள் தான் பெற்ற கல்வியினாலும் செல்வத்தினாலும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பதி ஞான வாழ்வைத் தருவாயே என்று துதித்தால் நிச்சயம் கௌமாரச் செல்வனாகிய முருகப்பெருமான் நம்மை கௌமார நெறியில் நன்றாகச் செலுத்தி நம்மை வந்து ஆட்கொள்வார். குரு நெறியே கௌமார நெறி, குருவே பரம் பொருள் என்பதும் கௌமார நெறி. அறு சமயமும் ஒரு சமயமே என்பதும் கௌமார நெறியே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் 

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம்ம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக