மனிதனுக்கு வாதம், பித்தம், சிலோத்துமம் எனும்
மூன்றின் கலவையால் 4,448 வியாதிகள் வருவதாக வைத்திய சாஸ்திரங்கள் வரையறுத்து
வைத்துள்ளன. இந்த பிணிகள் எல்லாம் உடலுக்கு ஏற்படுபவையாகும். இது இல்லாமல்
மனதிற்கு ஏற்படும் பிணிகள் வரையறை செய்ய இயலாத அளவு இருக்கின்றது. கோடி மனத்தார்
என்பார் பட்டினத்தடிகள். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது அடங்காத குதிரை
என்பார்கள். ஒரு முறை மனம் எதை விரும்புகின்றதோ அதே மனம் விரைவில் அதை
வெறுக்கின்றது. எண்ணங்களை ஒருமுகப் படுத்த தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து
கொண்டிருக்கின்றோம். பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் என்று
பாடுகின்றார் அருணகிரிநாத சுவாமிகள். மனிதப் பிறப்பில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
பிரச்சினைதான். பதம் பதம் விபதம் என்கின்றது வேதம். எனவே உடலுக்கு வருகின்ற
நோய்கள், மனதிற்கு வருகின்ற நோய்கள் என வகை வகையாக இருந்தாலும் எல்லா நோய்களையும்
விட கொடிய நோய் ஒன்றுள்ளது. அதுதான் பிறவி நோய். புனரபி ஜெனனம் புனரபி மரணம்
என்கிறார் ஆறு மதங்களைத் தொகுத்த ஆதிசங்கரர் அவர்கள். அதாவது இறந்தன பிறக்கும்
மீண்டும் பிறந்தன இருக்கும். இந்த பிறவி நோய் பற்றி தெய்வப்புலவர் வள்ளுவரும்
குறிப்பிடுகின்றார். பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்
என்று. கயிலை மலை மீது கால் படக்கூடாது என்று தலையாலேயே நடந்து சென்று சிவபெருமானே
ஓடோடி வந்து அம்மையே என்று அழைத்த பெருமை காரைக்கால் அம்மையாரைச்சேரும். அத்தகைய
பெருமைகளை உடைய காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் பிறவாமை வேண்டும் என்கிறார்
என்றால் இந்த பிறவி நோய் எவ்வளவு கொடிய நோய் என்று கௌமார பயணம் வாசகர்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி தீராத பிணியைத் தீர்க்கின்ற சக்தி கௌமார
சமயத்தின் பரம்பொருளாகிய முருகப்பெருமானிடத்தில் இருக்கின்றது. ஆறு சமயத்தின்
ஒட்டு மொத்த உருவமே முருகப்பெருமான். அது மட்டுமல்ல ஆறு சமயத்தையும் வழிபடுவது
நமது கௌமார சமயம். அடியேனின் குரு பீடமான கோவை கௌமார மடாலயத்தில் அறு சமயக்
கடவுள்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உண்டு. எம்மதமும் சம்மதம் என்பதே கௌமாரத்தின்
முதிர்ந்த நிலையாகும். முத்திக்கு ஒரு
வித்து முருகப்பெருமான். இதையும் திருப்புகழே சொல்கின்றது. அப்படி முத்திக்கு
விதையாக இருக்கின்ற முருகப்பெருமானிடம் கோயம்புத்தூரில் இருக்கின்ற பேரூர் எனும்
தலத்தில் அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ் பாடும்போது முருகா தீராத பிணி தீர ஓர்
வாக்கு அருள்வாயே என்கிறார். முருகப்பெருமானின் திருவாயில் இருந்து இந்த பிணி
தீரும் என்று ஒரு வாக்கு வந்தால் போதாதா உடனே இந்த பிணிதீரும். அதனால்தான்
அருணகிரிநாத சுவாமிகள் அப்படிக்கேட்கிறார். ஊர் பெயரே பாருங்கள் பேரூர்.
மற்றதெல்லாம் சிற்றூர் என்று சொல்லாமலே விளங்கும். அந்த பேரூரில்தான் பிறவாப் புளி
இறவாப்பனை இருக்கின்றது.
தவத்திரு.சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள்
பேரூர் என்ற உடனேயே அடியேனுக்கு திருமுருகாற்றுப்படையை
உபதேசம் செய்து தமிழ் முறைப்படி நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் வழிபாடு நடத்தச் சொன்ன
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சுவாமிகள் அவர்கள் நினைவு வருகின்றது. 90
வயது கடந்தும் தமிழின் ஒட்டு மொத்த உருவமாக பேரூர் பெரிய சுவாமிகள் திகழ்ந்து
வருகின்றார்கள். நமது பரம குரு நாதர் தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்களையும்
சேர்த்து இரட்டை ஆன்மீக குரு நாதர்களாக இரண்டு சுவாமிகளும் கோவை மண்டலத்தில்
திகழ்ந்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.
தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள்
அப்படிப் பெருமை
நிறைந்த ஊர் பேரூர். அந்த பேரூர் தலத்தில் அருணகிரி நாத சுவாமிகள் பாடிய திருப்புகழ்
இன்றைய பாராயண திருப்புகழாக மலர்கின்றது.
தங்கள் உறவினர்கள் யாரேனும் அகால
மரணமடைந்து ஆன்மா சாந்தியில்லாமல் அலைந்து வந்தாலும், ஜாதகத்தில் எத்தகைய பித்ரு
சாபங்கள் இருந்தாலும் பேரூர் சென்று இந்த திருப்புகழைப் பாடி ஒரு மோட்ச தீபத்தை
ஏற்றினால் நிச்சயம் அந்த சாபங்கள் நீங்கும். பெயரால் பெரிய பெயர் என்று புகழப்படும்
முருகன் எனும் நாமத்தை உடையவரும் இந்த உலகத்தின் இறைவனாகிய சிவபெருமானின்
பாலகனாகியவரும், எல்லா கிரிகளுக்கும் இறைவனாக விளங்குபவரும், பேரூரில் அருள்
புரிபவருமாகிய முருகப்பெருமான் கருணை புரிவார் என்பது திண்ணம்.
இந்த திருப்பிகழின் பெருமை என்னவென்றால்
- பெரிய நோய் பிறவி
நோய்
- பெரிய பெயர் முருகன்
என்பது
- பெரியது இந்த உலகம்
- பெரிய உலகத்தின்
இறைவன் மகன் முருகன்
- பெரிய ஊர் பேரூர்
- பெரிய உலகத்தின் இறைவனின் மகன் பெரிய பெயருடைய முருகன் பெரிய நோயான பிறவி நோயை பெரிய ஊரான பேரூரில் தீர்ப்பார் என்பதுதான் அதி உன்னத செய்தியாகும். அதுதான் திருப்புகழ். பொல்லா கருப்புகழை கேட்குமோ கான மயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி. இதோ கேளுங்கள். இதோ அந்த திருப்புகழ்.
பேரூர் திருப்புகழ்
தீராப்
பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. |
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக