செவ்வாய், 26 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-17


                                   
                                                                              கொடுமுடி
நான் பெரிய பணக்காரன். பணத்தினால் எதையும் என்னால் சாதிக்கமுடியும் என்றும் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்றும் பணம் பாதாளம் வரை பாயும் என்றும் மார்தட்டிக்கொண்டு பணத்திற்காக எதையும் செய்யத் துணிபவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். முருகா உனக்கு ஒரு லட்சம் உண்டியலில் போடுகின்றேன் எனக்கு ஒரு கோடியாக திருப்பிக் கொடு என்று பேரம் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச் சொல் என்கிறார் ஔவைப்பிராட்டி. பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர். அதனால் நிச்சயம் பணம் வேண்டும். பணம் இருப்பவர்கள்தான் சிறப்பு தரிசனத்தில் சீட்டு வாங்கிச் சென்று கடவுள் திருவுரு முன் அமர்ந்து அனைத்து பூஜைகளையும் பார்க்க முடிகிறது. பணம் இல்லாத ஏழை பொது தரிசனத்தில் பத்து மணி நேரம் கால் கடுக்க நின்று தரிசனம் பெறுகிறான். இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்து  நான் அனைத்துவிதமான சாஸ்திரங்களையும் கற்றுவிட்டேன் எனும் கல்விச் செறுக்கில் அறிவாளி எனும் மிதப்பில் திகழ்பவர்கள் அனைவரும் ரசிக்க ரசிக்க பேசுபவர்கள் எழுதுபவர்கள் ஆகிய கல்வி உடையவர்களும் மறுபுறம். இப்படி செல்வச்செருக்கில் இருப்பவர்களும், அறிவாளி எனும் கல்விச்செறுக்கில் இருப்பவர்களும் கடவுளை நெருங்க முடிவதில்லை. செல்வத்தின் அதிபதி திருமகளாகிய லட்சுமி. அந்த திருமகளின் அதிபதி விஷ்னு. 
                                                
கல்விக்கு அதிபதி கலைமகளாகிய சரஸ்வதி. அந்த கலைமகளின் அதிபதி நான்முகனாகிய பிரம்மா. இவர்கள் இருவருமே முருகப்பெருமானை அறிய முடியாத போது நம்மிடம் இருக்கும் கல்வியும், செல்வமுமா முருகனைக் காட்டப்போகின்றது. சரி பின் எது காட்டும். பணம் இருப்பவர்கள் சிலை வடிவில் இருக்கும் கடவுளை விரைவில் தரிசனம் செய்யலாம் ஆனால் இறைவனின் தரிசனத்தை அடியவர்கள்தான் பெறமுடியும். எனவேதான் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்கிறார் ஔவையார். நல்ல தொண்டர்தம் உள்ளத்திதான் இறைவன் ஒடுக்கம். எனவே முருகா முருகா என்று எப்போதும் முருக சிந்தனையிலேயே இருப்பவர்களுக்கும் கௌமார குரு நெறியில் குரு சேவை செய்கின்ற உண்மையான அடியவர்களுக்கு முருகப் பெருமான் ஓடோடி வந்து நமக்கு அருகில் இருந்து அருள்வார். பிரம்மாவிற்கும் விஷ்னுவிற்கும் (பணத்திற்கும், அறிவிற்கும்) காட்சி தராத முருகப் பெருமான் தம் மீது தூய பக்தி செலுத்தும் அடியார்களுக்கு மிக எளிய முறையில் காட்சி தந்து ஆட்கொள்கின்றார். தாரகன் எனும் அரக்கனிடம் தோற்ற விஷ்னு தனது சக்கரத்தை இழக்க அதை தாரகனை வதம் செய்த பின்பு மீட்ட்சு விஷ்னுவிடம் முருகப் பெருமான் தருகிறார் என்பது புராணம். 
                                           
அதேபோல் பிரணவத்தின் பொருள் தெரியாதை பிரம்மனை தலையில் குட்டி சிறையில் முருகப்பெருமான் அடைத்த்தையும் புராணம் குறிப்பிடுகின்றது. அதன் தத்துவம் இதுதான். 
                                                          
இதை கொடுமுடி எனும் மும்மூர்த்தி ஸ்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடுகின்றார். இந்த இடத்தில் மற்ற சமய தெய்வங்களைத் தாழ்த்துவதாக எண்ணக்கூடாது. 18 புராணங்களைப் படித்தால் யார் புராண நாயகனோ அந்த தெய்வத்தை உயர்த்தி மற்ற தெய்வங்கள் அந்த தெய்வத்திற்கு பணிபுரிவதாக வரும். காரணம் நாம் வழிபடும் பரம்பொருள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் என்று அறிந்து கொள்வதற்காக அப்படி சொல்லப்பட்டுள்ளது. எனவே நமது கௌமார நெறியில் எல்லா தெய்வங்களும் ஒரு பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள்தான் என்று சொல்லப்பட்டுள்ளதால் வாசகர்கள் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். சமய பேதங்கள் பார்க்கும் ஒருவர் கௌமாரராக இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அறு சமய சாத்திரப் பொருளோனே என்ற ஒரே வரியில் அருணகிரிநாத சுவாமிகள் மிகத் தெளிவாக இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
                                                 
கொடுமுடியை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகச்சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்வது கொடுமுடி. வாழ்வில் எந்த கஷ்டமும் தீரவே இல்லை எனும் பணமும் கல்வியும் அதிகமுள்ளவர்கள் கொடுமுடி சென்று இந்த திருப்புகழைப் பாடினால் நிச்சயம் முருகப்பெருமானின் இன்னருள் கிட்டும் என்பது திண்ணம்.

கொடுமுடி திருப்புகழ்

இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
     இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே 

திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
     திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ 

அரியயற் கறிதற் ...... கரியானே
     அடியவர்க் கெளியற் ...... புதநேயா 
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
     கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக