திங்கள், 18 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-11


எல்லாவிதமான செல்வங்களும் வந்து சேர தினமும் ஓத வேண்டியது இந்தத் திருப்புகழ். இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் என்கிறார்  ஔவையார். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர். எனவே இந்த உலகில் வாழ பொருள் மிகவும் அவசியத் தேவையாகின்றது. அதே போல் இறை அருளோடு பொருள் தேடுவதுதான் நல்லது. என்னைப் பொருத்தவரையில் அருளோடு உள்ள பொருளே நல்ல பொருள் என்பேன். பணக்காரர்களாக இருந்தால் மட்டும் போதாது அந்த பணத்தில் சிறிதளவேனும் புண்ணிய செயல்களைச் செய்ய ஒதுக்க வேண்டும். புண்ணியச் செயல்களைச் செய்வேன் அதே போல் சகல செல்வ யோக மிக்க பெரு வாழ்வு வாழ அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே என்ற நமது கௌமார குரு நாதர் அருணகிரி நாத சுவாமிகளின் திருப்புகழையே தியானித்து இந்த திருப்புகழை பாராயணம் செய்து நல்ல செல்வ வளம் அடையுங்கள். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் எந்த நேரமும் குருப்புகழை ஓதுகின்ற திருப்புகழைக் கேளீர் தினம். நிச்சயம் நல்ல வழி பிறக்கும்.

திருப்புகழ்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
        தவமுறைதி யானம் வைக்க                          அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
        தமியன்மிடி யால்ம யக்க                         முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
        கயிலைமலை நாதர் பெற்ற                        குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
        கமழுமண மார்க டப்ப                            மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
         சகல செல்வ யோக மிக்க                         பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
          தவிபுரிய வேணு நெய்த்த                          வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
          அரியதமிழ் தான ளித்த                            மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
        அழகதிரு வேர கத்தின்                            முருகோனே.

உரை:

தாமரை போன்ற உனது திருவடியை அரை நிமிஷ  நேரமாவது   நினைத்து தியானம் செய்வதற்கு அறியாத சட கசடன் மூடன் முட்டாளாகிய  நான்பிறவி எடுத்தலையே தொழிலாகக் கொண்டு,வறுமையால் மயக்கம் உறுவேனோ

அருணதள பாத பத்மம்
என் மீது கருணை காட்டாமல் இருக்க என்ன காரணம்இப்போதே சொல்லி அருள்வாய். கயிலை மலையில் வாழும் சிவ பெருமானின் மகனே. 
கைலை மலை
உனது திருப் புயங்களில் இரத்தினபொன் மாலைகளையும் கடப்ப மாலையையும் அணிவோனே, 
                                                                 கடம்ப மலர்
இதுவே தருணம் தக்க சமயம். எல்லா விதமான சுகங்களையும்சிவ ஞானம்முத்தி இவைகளையும் எனக்குக் கொடுத்து உதவி செய்ய வேண்டும். 
                                        சகல செல்வ யோக மிக்க பெரு வாழ்வு
கூரிய வேலை ஏந்தியவனே, உன் திருப்பாதத் தாமரைகளைத் துதிக்க அருமையான தமிழைத் தந்த மயில் வீரனே, 
தமிழ் அன்னை
மயில்
அதிசயங்கள் பல நிகழ்ந்த பழனி மலையில் வீற்றிருக்கும் திருவேரகத்து முருகனே, பர கதி கொடுத்து எனக்கு உதவி செய்ய வேண்டும்.
                                            பழனியின் அழகிய தோற்றம்

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்


கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

3 கருத்துகள்: