மனிதனுக்கும்
விலங்கிற்கும் உள்ள வித்தியாசங்களைச் சற்று சிந்திக்க வேண்டும். விலங்கும் உணவு
கொள்கிறது நாமும் உண்னுகின்றோம். விலங்கும் உறங்குகின்றது நாமும் உறங்குகின்றோம்.
விலங்கும் தனது இனத்தை விருத்தி செய்கின்றது. நாமும் நமது இனத்தை விருத்தி
செய்கின்றோம். விலங்கும் தற்காத்துக் கொள்கின்றது நாமும் தற்காத்துக்
கொள்கின்றோம். அப்படிப் பார்க்கும்போது நமக்கும் விலங்கிற்கும் என்ன வித்தியாசம்.
நாம் அனைவருமே சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மனிதனும் விலங்கும்
இத்தனைக்கும் விலங்குகளுக்கு
ஐந்து அறிவே இருக்கின்றது நமக்கு மட்டும்தான் ஆறு அறிவு என்று அறிவியல் அறைகூவல்
விடுக்கின்றது. என்ன பயன்? ஆறாவது அறிவைக்கொண்டு சிறந்த முறையில் உணவு, உறக்கம்,
இனவிருத்தி, தற்காத்துக்கொள்ளுதல் ஆகிய செயல்களைச் சிறப்பாகச் செய்கின்றோமோ தவிர
வேறு என்ன செய்கின்றோம் என்று தயவு செய்து ஒரு நிமிடம் சிந்திதுப் பாருங்கள்.
அப்படிப் பார்த்தால் ஒரு பணக்கார வீட்டில் வாழும் ஒரு விலங்கு மேற்கூறிய
அனைத்தையுமே எந்தவித சிரமமும் இன்றி பெறுகின்றதே. நமது ஆறாவது அறிவைக்கொண்டு நாம்
யார் என்று அடிக்கடி சிந்தித்து வந்தோம் என்றால் அந்த ஆறாவது அறிவு நாம் உடல் அல்ல
ஆன்மா என்ற ஒரு அடையாளத்தைக் காட்டிக் கொடுக்கும். ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆனால்
உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கும். நான்கு வேதங்கள், இரண்டு இதிகாசங்கள், ஆறு தத்துவங்கள்,
ஆறு சமயங்கள், 18 புராணங்கள், 108 உபனிஷத்துக்கள், 28 ஆகமங்கள், 63 நாயன்மார்கள்,
12 ஆழ்வார்கள், 12 திருமுறைகள் என அனைத்தும் இறுதியாக அறுதியிட்டுக் கூறுகின்றது
நாம் உடல் அல்ல நாம் ஆன்மா. நாம் ஜீவாத்மா, கடவுள் பரமாத்மா. அந்த உன்னத
பரமாத்மாவிடம் இருந்து நாம் விலகி நமது
ஆசைகளுக்கு அடிமையாகி பல்வேறு வடிவங்களை எடுத்து இறுதியில் இந்த மனித வடிவை
எடுத்திருக்கின்றோம்.
கிருஷ்ண பரமாத்மா குருவாக நின்று அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்து கௌமார நெறியாகிய குரு நெறியில் நின்று போதிப்பதும் ஜீவாத்மா பரமாத்மா தத்துவம்தான்
பரமாத்மாவிடம் கீதை கேட்கும் ஜீவாத்மா அர்ச்சுனன்
இராமன் என்பவர் பரமாத்மா சீதா தேவி ஜீவாத்மா ஜீவாத்மாவை
விட்டு பரமாத்மாவினாலும் இருக்க முடியாது, பரமாத்மாவை விட்டு ஜீவாத்மாவாலும்
இருக்க முடியாது. எனவே இராவணன் ஆகிய காமம் எனும் அரக்கனைக் கொன்று சீதையாகிய
ஜீவாத்மாவை ராமனாகிய பரமாத்மா மீட்டு தன்னிடம் சேர்த்துக் கொள்வதை இராமாயனம்
காட்டுகின்றது. கானகத்திலே இருந்த ஜீவாத்மா வள்ளிப் பிராட்டி பரமாத்மாவான முருகனை
நோக்கி தவம் இருக்க பரமாத்மா முருகப்பெருமான் வள்ளியை நோக்கி வந்து விருப்பமுடன்
மணந்து கொள்வதை வள்ளி திருமணம் காட்டுகின்றது. இந்திரனின் மைந்தன் ஜீவாத்மா
ஜயந்தனை சூரபத்மன் சிறை பிடிக்க பரமாத்மாவாகிய
முருகப்பெருமான் சூரனை வென்று ஜயந்தனைச் சிறை மீட்கும் நிகழ்வே கந்தபுராணம்
காட்டுகின்றது. இப்படி புராண இதிகாசங்கள் அனைத்தும் ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தை
மையமாக வைத்தே சொல்லி இருக்கின்றது. இந்த தகவல்களை நாம் படிக்கப் படிக்க மதியால்
வித்தகனாக்கின்றோம். மதியால் வித்தகனான உடனேயே மனதால் உத்தமனாக மாறுகின்றோம்.
மனதால் உத்தமனானால் சீவ சிவ தத்துவத்தை உணர்ந்து கொள்கின்றோம், சீவன் என்பது
ஜீவாத்மா, சிவன் என்பது பரமாத்மா. இப்படிப்பட்டி சிவஞானம் நன்றாகப் பதியும்படி பர
யோகத்தை அருள்வாயே என்று கரூரில் திருப்புகழ் பாடுகின்றார் நமது கௌமார குரு
அருணகிரிநாத சுவாமிகள். இந்த மூன்று நிகழ்வுகளிலும் நாம் ஒன்றை நிச்சயம் அறிந்து கொள்ள
வேண்டும். என்ன அது அதுதான் கௌமார நெறியாகிய குரு நெறி. இதில் எங்கு குரு
வருகின்றார் என்ற கேள்வி எழும். இதோ விளக்கம் சொல்கின்றேன். இராமாயனத்தில்
ராமனிடம் இருந்த பிரிந்து சென்ற சீதையை கண்டுபிடித்து தூது சென்றவர் ஆஞ்சனேயர்.
அவர் தான் ஜீவாத்மா பரமாத்மாவை இணைக்க வந்த குரு நாதர் ஆவார்.
அடுத்து வள்ளி
திருமண நிகழ்வில் முருகப்பெருமானிடம் வள்ளியைப் பற்றி எடுத்துச் சொல்லி வள்ளியைத்
திருமணம் செய்யுமாறு முருகனிடமும் வள்ளியிடமும் தூது சென்றவர் நாரத முனிவர். இங்கு
அவர்தான் ஜீவாத்மா பரமாத்மாவை இணைக்க வந்த குரு நாதர் ஆவார்.
வள்ளி திருமணத்தில் நாரதமுனி குருவாக வருதல்
அதே போல் கந்த
புராணத்தில் ஜயந்தனை விட்டுவிடுமாறு சூரபத்மனிடம் சொல்லியும் ஜயந்தனைச் சந்தித்து
விரைவில் முருகப்பெருமான் உன்னை வந்து மீட்பார் என்று தூது சென்றவர்
வீரபாகுத்தேவர். அவர் தான் இங்கு ஜீவாத்மா பரமாத்மாவை இணைக்க வந்த குரு நாதர்
ஆவார்.
முருகனும் வீரபாகுவும்
இப்போது புரியும் என நினைக்கின்றேன். நாம் ஜீவாத்மா முருகப்பெருமான்
பரமாத்மா நம்மைமுருகனோடு அதாவது பரம்பொருளான பரமாத்மாவோடு இணைக்கப் போவது யார்? அவர்தான்
குரு நாதர். குருவே சிவமெனக் கூறினான் நந்தி என்றும் தெளிவு குருவின் திரு உரு
சிந்தித்தல்தானே என்றும் திருமூல நாயனார் சொல்கின்றாறே திருமந்திரத்தில் அவரை
விடவா நாம் மதியால் வித்தகனாகிவிட்டோம். தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்பதும் மூலன் வாக்கு. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
திருமூலர்
குரு உருவே
தியானம் என்று அருணகிரிநாத சுவாமிகள் இந்த திருப்புகழில் சொல்கின்றார். நிதியே
நித்தியமே என்று சொல்லிவிட்டு என் நினைவே என்கிறார். தொடர்ந்த குரு நினவே தியானம்
என்பது. அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமான் குரு நாதர் என்பதால் என்
நினைவே என்கின்றார். நமக்கு நமது குரு நாதர்தான் நிதி, நித்தியம், நினைவு என்று
எல்லாமாக இருக்க வேண்டும். இது நான் சொல்லவில்லை அருணகிரிநாத சுவாமிகள் அப்படி
கௌமார நெறியில் வாழ்ந்து காட்டி இருக்கின்றார். அதைத்தான் நாம் கடைபிடிக்க
வேண்டும். கௌமார மடத்தை கோவையில் ஸ்தாபித்த தவத்திரு இராமானந்த சுவாமிகள் அவர்கள்
தனது குரு நாதரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் திரு உருவை பூஜித்து அவர்
பிரதிஷ்டை செய்த முருகன் திருஉருவத்திற்கும் தண்டபாணி சுவாமிகள் என்றே பெயர்
சூட்டி வழிபாடு செய்துள்ளார்கள். நாளடைவில் அந்த தெய்வத்திரு உருவம் தண்டபாணிக்கடவுள்
எனும் திரு நாமம் தாங்கிவிட்டதாக எமது குரு நாதர் தவத்திரு குமர குருபர சுவாமிகள்
அவர்கள் என்னிடம் கூறிய போது எனக்கு உள்ளம் உவகை கொண்டு உச்சி குளிர்ந்தது.
சிரவை தண்டபாணிக் கடவுள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகள்
குரு
நெறியைப் போற்றி வருவதே கௌமார சமயம். எனவே சீவாத்மா பரமாத்மாவை இணைக்க ஒரு குரு
தேவை என்பதை உணர்ந்து கொண்டு நல்ல செல்வ வளம் கிடைத்து எப்போதும் இறைவனாகிய
குருவிற்குச் சேவை செய்ய வேண்டி பிரார்த்தனை செய்து இன்றைய கரூர் திருப்புகழைப்
பாராயணம் செய்யுங்கள்.
கரூர் திருப்புகழ்
மதியால்வித்
தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச்
சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித்
தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற்
பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
குழந்தைகள்
கல்வியில் நல்ல மேன்மை அடையவும், தவறான பழக்க வழக்கங்களில் உங்கள் குழந்தைகள்
சிக்காது இருக்கவும், எப்போதும் இருக்கின்ற மனக்குழப்பங்கள் நீங்கவும், கடன்
தொல்லைகள் நீங்கி நல்ல செல்வ வளம் அடையவும், குரு சேவை செய்யவும், எப்போதும்
இறைவன் நினைவிலேயே இருந்து செயலாற்றவும், நல்ல கதி கிடைக்கவும் எல்லோராலும்
புகழ்ப்படுகின்ற கரூரில் உள்ள முருகப் பெருமானைச் சென்று சேவித்து செவ்வேள்
பெருமானின் சீரிய அருளைப் பெற்று உய்யுமாறு கௌமாரபயணம் வாசகர்கள் அனைவரையும்
அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி:
சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த
உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,
அந்தியூர்.
சிரவையாதீன முதல் மூன்று குருமஹா சந்நிதானங்கள் சமாதி வளாகத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள்
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக