சனி, 5 டிசம்பர், 2015

கௌமார மடத்தில் கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவதார நாள் விழா 09.12.2015

கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவதார நாள் கவிதை

 கந்தனுக்கு உகந்த கார்த்திகைத் திங்கள்
கந்தனுக்கு உகந்த விசாக மீனில்
கந்தனுக்கு உகந்த கவுமார மடத்திற்காய்
கந்தனுக்கு உகந்த சுந்தரர் தோற்றம்

சுந்தரம் எனும் பெயரைப் பெற்று
கந்தசாமிகள் மூலம் தமிழைக் கற்று
வந்தனைக்குரிய வள்ளலாகி
சுந்தர சாமி ஆனார் கேளே

பேரூர் தன்னில் புலவர் பயிற்சி
பேரூர் தன்னில் ஆசான் பணியும்
பேரூர் சாந்தலிங்கராமாசாமிகள் நட்பு
பேரூர் புகழும் சுந்தரர் இவரே

கவிகள் பாடும் வள்ளல் இவரே
கவிகளே பாடும் வள்ளல் இவரே
கவிகள் பாடிய கணக்கில் மொத்தம்
கவிகள் எண்ணூறு இருக்கும் என்பேன்

பாடிய கவிகள் எண்ணூறும் நன்றாய்
தேடிய ஆர்வலர் ஏத்தும் சிறப்பாய்
நாடிய அனைவரும் நவில்வர் நன்றே
கூடியே சுந்தரர் சொற்றமிழ் ஆய்வர் பலரே

தலங்கள் முப்பத்து நான்கு தனக்கு
நலங்கள் நல்கும் கவிபல புணைந்து
தலங்கள் பலவும் தரிசனம் செய்து
தலமாய் கவுமார மடத்தைச் செய்தார்

 சொல்லால் சிறந்த பொழிவுகள் பலவும்
நல்ல தமிழால் நயம்பட உரைப்பார்
கல்வி மேவிய கூட்டம் பலவும்
எல்லையில்லா ஆனந்தம் அடையும்

பெரிய புராணக் காட்சிகள் தன்னை
அரிய நோக்கால் மேற்கோள் காட்டி
உரிய அறிவைக் குவியச் செய்வார்
பெரிய மனிதரும் பெருமை படுவர்

சிரவைக் கந்தசாமிகள் தன்குரு
சிரவையில் அவருக்கு சிறப்பாய்ச் சேவை
சிரவையில் அவர் பின்னர் இவர்தான்
சிரவை ஆதீனக் குரு மகான் ஆனார்

அதிசயம் அனேகமுற்று இருக்கும்
அதிசயப் பழனிமலை தன்னில்
புதிய ஆதீனக் குருமகான் ஆகி
நதிபோல் வந்தார் சிரவை

சிரவைக் குருவாய் ஆன பின்னர்
வரவை நோக்கி இருந்தது போல
சிரவை ஆலயம் சீராய் வளர்ந்து
சிரவைப் புகழ் சிறந்ததே

விருப்பமுடனும் வீரியத்துடனும்
திருப்பணி பலவும் செய்த மாந்தர்
குரு புகழ் பாடும் வாரியார் சுவாமிகள்
திருப்பணிச் செம்மல் எனப் புகழ்ந்தார்

 வந்தனை செய்யும் கடவுள் தன்னை
சொந்தத் தமிழில் பூசை செய்யும்
சிந்தனைத் தோற்றம் கண்டவராகி
அந்தமும் ஆதியும் வகுத்தவர் இவரே

நூற்றி எட்டு ஆண் ஆனை கொண்டு
போற்றிப் புகழும் பூசைகள் செய்தார்
சுற்றி வந்தது மக்கள் கூட்டம்
பெற்றார் கஜபூசைசாமி எனும் பேர்

கந்தனுக்குகந்த விசாகம் தோற்றம்
கந்தனுக்குகந்த சஷ்டியில் முக்தி
வந்தனைக்குரிய சுந்தரசாமிகளை
சிந்தனை செய்வோம் அவதார நாளில்

சுந்தரசாமியின் அனுக்கத் தொண்டராய்
வந்தனை செய்தவர் எம் குரு நாதர்
கந்தனின் கவுமார மடம் தனக்கு
கந்தன் வழி ஆதீன குருவானாரே

என்குரு குமர குரு நாதர் ஆவார்
என்குருவின் குரு நாதர் சுந்தரனார்
என் குருவின் குரு எனக்கு பரமகுரு
என் பரம குருவிற்கு இக்கவி சமர்ப்பணம்.


நன்றி:இந்த அவதார நாள் கவி எனது ஞானாசிரியன் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கும் என் பரம குருநாதர் கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்களுக்கும் சமர்ப்பணம்
குருவின் பணியில் இக்கவிதையை எழுதியவர்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

  ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக