ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-35

ஜீவ நாடி தொடரில் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதீனம் பற்றி கடந்த இரண்டு மாதங்களாக எழுதி வருகின்றேன். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அவை. படிப்பவர்கள் மெய் சிலிர்ப்பதாகச் சொல்கின்றார்கள். காரணம் இதில் ஒரு துளி கூட பொய்யில்லை என்பதே. வாய்மை, புலால் உண்ணாமை, கொல்லாமை ஆகிய சத்திய விரதங்களை சத்தியமாகக் கடைபிடித்து வருபவன் நான். அதனால்தான் முருகப் பெருமான் ஜீவ நாடி படிக்கும் கலை சித்தியானதே தவிர இது ஒன்றும் மாய மந்திரத்தினாலோ, மை வித்தையினாலோ வந்ததல்ல.  நமது தவ வலிமையே இத்தகைய சித்திகளைத் தரும். பல பேர் எனக்கு  நாடி படியுங்கள் என்று கேட்ட வண்ணமே இருக்கின்றார்கள். சிலர் சுவாமி முழு நேரமும் நீங்கள் இந்த சேவையைச் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு இன்னும் எனது குருவிடமும், முருகப் பெருமானிடமும் இருந்து உத்தரவு வர வில்லை. வந்த உடனேயே மக்கள் அனைவருமே வந்து என்னைச் சந்திக்கலாம். நாடி கேட்டுக் கொள்ளலாம். உபதேசம் கேட்கலாம். செய்கிறேன். அதுவரை பொறுமையுடன் இருப்பது எனது அன்புக்குறிய வாசகர்களின் கடமையாகும். 


தொலைபேசியிலாவது பேசுங்கள் என்று பலர் கேட்கிறார்கள். தற்கால அதிக அலுவலில் அது கூட என்னால் முடிவதில்லை. அதனால்தால்தான் தொலைபேசி எண்ணைக்கூட எடுத்துவிடச் சொல்லி விட்டேன். இது என்னவோ நான் வேண்டுமென்றே செய்வதாக நினைக்க வேண்டாம். முழு நேர சேவையாக ஆன்மீகத்தில் வருகின்ற காலம் தொலைவில் இல்லை. பட்டி, தொட்டியெல்லாம் நமது நாடியின் வாக்கு ஒலிக்கும். பல ஆண்டுகளாகத் திருப்பணி இல்லாமல் இருக்கின்ற ஆலயங்கள் நமது நாடியின் மூலம் விடை தரப்பட்டு விரைவில் குடமுழுக்கைக் கண்டு வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் கூட அடியேன் கலந்து கொள்ள முடிவதில்லை. எனவே என் அபிமானிகள் தொடர்ந்து அவ்வப்போது வருகின்ற பெயர்ச்சிபலன்களில்  நான் ஜீவ நாடி மூலம் சொல்லி வருகின்ற பரிகாரங்களைக் கடைபிடித்து வாருங்கள். உங்களுக்காகத்தான் பெயர்ச்சி பலன்களையும், நாடி பரிகாரங்களையும் எழுதி வருகின்றேன். இணைய தள வசதி இருப்பவர்கள் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் பிளாக்கான kaumarapayanam.blogspot.in எனும் முகவரியில் இணையத்தில் உடனுக்குடன் நாடி சொல்லும் விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதே போல் கோவை கௌமார மடத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் சிரவை ஆதீனம் பங்கு பெறும் நிகழ்ச்சிகள், நாடியில் வருகின்ற உபதேசங்கள், சிரவை ஆதீனத்துடன் ஏற்படுகின்ற மற்றும் பல ஆன்மீகப் பெரியோர்களிடம் ஏற்படும்  ஆன்மீக அனுபவங்கள் அனைத்தும் உடனுக்குடன் அந்த பிளாக்கில் வெளி வரும். இவ்விதம் என்னுடன் நீங்கள் தொடர்பில் இருக்கலாம். அதே போல் அமாவாஸை அன்று இரவில் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நடக்கும் பூஜையில் வந்து கலந்து கொண்டும் இறை அருள் பெறலாம். முழு நேரச் சேவை தொடங்கியவுடன் அறிவிப்பு செய்கின்றேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று என் மனதில் உள்ளவற்றைக் கூறி இந்த தொடர் தொடக்கம் கொள்கின்றது.



ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை கௌமார மடத்தில் முதன் முதலாகக் கால் வைத்த உடனேயே எனக்கு என்னென்னமோ செய்தது. ஒரு வித பூரிப்பும், முதுகிற்கு அடியில் இருந்து எனது உச்சந்தலைக்கு என்னமோ ஊர்ந்து செல்வதையும் உணர்ந்தேன். முதலில் ஆலயத்தைத் தரிசனம் செய்ய வில்லை. எனக்கு எப்போதுமே குரு நாதர்களின் மீது அளவு கடந்த அதீத பக்தி உண்டு. காரணம் என்ன என்பதை குமார தந்திரத்தில் பின்பு அறிந்தேன். குமார தந்திரம் என்பத் ஒரு சைவ ஆகம் நூல். அந்த நூலில் சிவ பெருமான் கௌசிகருக்குச் சொல்கிறார், கௌசிகரே, எவன் ஒருவன் குருவை திருப்தி செய்கின்றானோ அவன் குமரனைத் திருப்தி செய்கின்றவன் ஆகின்றான் என்று. இதைப் படிக்கும் முன்பே கூட எனது முதல் உபதேச குருவான தவத்திரு. வேலுச்சாமி சுவாமிகளிடம் எனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பே அருள்வாக்கு சித்தியைத் தந்தது எனலாம். இதைப் படித்த பின்பு எனக்கு ஏற்பட்ட குரு பக்தியின் தன்மையை மேலும் உணர்ந்து கொண்டேன். எனவே தான் எனது பார்வை முதலில் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் எங்கே என்று தேடியது. அவர் இருக்கின்ற இடத்தை அடைந்தோம். உடன் வந்த ஞானஸ்கந்தாஸ்ரம அடியார்கள் என் எண்ணங்களை உடனுக்குடன் புரிந்து கொள்பவர்கள். சுரேந்திர அடியார் சொன்னார் சுவாமி நீங்கள் இங்கேயே இருங்கள் நான் உள் சென்று சிரவை ஆதீன சுவாமிகளுடன் நீங்கள் வந்த செய்தியை சொல்லி விட்டு பின்பு தங்களை அழைக்கிறேன் என்றார். சரி என்று நான் அங்குள்ள மூவர் சமாதி பீடத்தை வணங்கினேன். அந்த மூன்றும் முதல் மூன்று ஆதீனங்களின் பீடங்களாகும். நாங்கள் இப்போது பார்க்க வந்தது நான்காமவர். அதற்குள் சுவாமி உங்களை அழைக்கிறார் என்றார் சுரேந்திர அடியார். சரி என்று உள் சென்றேன். அவரைப் பார்த்தவுடனேயே பின்வரும் கவிதை பிறந்தது.

காவி உடை தரித்து கழுத்தில் மாலையிட்டு என்
ஆவிதனை அப்படியே இழுத்திவிடும் மந்திர
சாவியின் இரகசியத்தை என்னவென்பேன்
பாவிகளும் பரிசுத்தம் ஆவர்.

இது ஒரு வெண்பா போல் இருந்தது. ஆனால் உரிய இலக்கணப்படி இல்லை. ஆனாலும் பாடல் நன்றாக வந்தது. வாங்க உட்காருங்க என்றார் சுவாமிகள். அமர்ந்தேன். மீனாட்சி நாடி உரைத்ததை உரைத்தேன். என் உள் மனதில் உள்ள முருக பக்தி வெறியை வெளியிட்டேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது பல நெடுங்காலமாக பழகியது போல் உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனது முன் ஜென்மம் தொடர்பான இடம் என்பதில் எனக்கு எள் அளவு கூட சந்தேகம் எழவில்லை. ஏதோ நீண்ட நாள் நமது சொந்த வீட்டிற்கு செல்லாமல் இருந்து பின்பு சென்றால் என்ன உணர்வு இருக்குமோ அது இருந்தது. சுவாமிகள் என்னை அருகில் அழைத்து கந்தர் கலி வெண்பாவை உபதேசம் செய்தார்கள். பின்பு முருகனது கௌமாரம் உலகம் முழுவதும் பரப்பப் பட வேண்டும் என்றும் ஆன்மீகத்திற்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தைத் துடைக்க வேண்டும் என்றும் இது போல் இன்னும் பல விஷயங்களை எனக்கு உபதேசம் செய்தார்கள். 


ஒரு கிருத்திகையன்று வந்து கௌமாரக் காப்பு எனும் கங்கணத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றார். கௌமார மடாலய வரலாற்று நூலான சீர்மிகு சிரவை ஆதீனம் எனும்  நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னார்கள். அருந்துவதற்கு தேனீர் கொடுத்து உபசரித்தார்கள். நீண்ட நேரம் எங்களிடம் உரையாடினார்கள். சுரேந்திரன் அடியார் ஆனந்தன் அடியார் ஆகியோருடன் வஸந்த பஞ்சமி எனும் பத்திரிக்கை ஆசிரியரும் உடன் வந்திருந்தார்கள். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய பாடல்கள் ஓலைச்சுவடி வடிவில் மடாலய நூலகத்தில் இருக்கின்றது சென்று பாருங்கள் என்றார் சுவாமிகள். உடனே நூலகம் சென்றோம். அங்குள்ள சுவடிகளை சுவடி மொழி பெயர்ப்பாளரிடம் இருந்து வாங்கி கண்களில் ஒத்திக் கொண்டேன். சுமார் ஐம்பதாயிரம் பாடல்கள் பல சுவடிகளில் இன்னும் அச்சு ஏறாமல் இருப்பதைத் தெரிவித்தனர். அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். இவ்விதம் அந்த நாள் முழுவதும் கௌமார மடாலயத்தில் இனிமையாகக் கழிந்தது. பின்பு ஆலயம் சென்றோம். அங்குதான் அறு சமயக் கடவுள்களின் கோவில் இருப்பதை முதன் முதலில் பார்த்தேன். அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு விளக்கம் தெரியவில்லை ஆனால் இப்போது மிகத் தெளிவாகப் புரிந்தது. அதாவது கௌமார மதம் என்றால் முருகனைப் பரம் பொருளாகக் கொண்டு வழிபடும் மதமே தவிர  நமது மதத்தின் ஏனைய தெய்வ வடிவங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் சீரிய உபதேசம் ஆகும். அதை சமய, சமரச, சமயாதீத நெறி என்கிறது கௌமாரம். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் சமயம் என்பது தாம் வழிபடுகின்ற கடவுள், சமரசம் என்பது தாம் வழிபடுகின்ற கடவுளே மற்றோர் வழிபடும் கடவுளுக்குச் சக்தி அளிக்கின்றது என்பதாகும். 


சமயாதீதம் என்பது பரம்பொருள் ஒன்றுதான் அந்த ஒரு பரம்பொருளே தாம் வழிபடுகின்ற கடவுள் உட்பட மற்ற அனைத்திற்கும் சக்தி அளிக்கின்றது என்பதாகும். அந்த வகையில்தான் கௌமார மடாலயத்தில் அறு சமயக் கடவுள்களும் எழுந்தருளி உள்ளனர். முதல் சந்நிதானமாகிய தவத்திரு. ராமானந்த சுவாமிகள் ஆன்மார்த்த பூஜை செய்யும் பொருட்டு சித்தி மகோற்கட கணபதிக்கும், தண்டபாணிக்கடவுளுக்கும் ஆலயம் எழுப்பினார்கள். அதன் பின்பு இரண்டாவது சந்நிதானமாக வந்த தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் கொங்கு நாட்டு கச்சியப்பர் எனும் புகழைப் பெற்று பல்வேறு பாடல்களை இயற்றினார்கள். அதன் பின்பு மூன்றாவது சந்நிதானமாக வந்த தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள் காலத்தில்தான் திருப்பணி மிகவும் சிறப்பாக நடந்து பாண்டு ரங்கர், சனீஸ்வரர், நவ கிரகங்கள், பைரவர், சூரியன், அவி நாசியப்பர் உடன் பெருங்கருணை நாயகி சரவணப் பொய்கை என அனைத்துக் கோவில்களும் கட்டி முடிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தற்போது இருக்கும் நான்காம் சந்நிதானம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் இரண்டாவது சந்நிதானமாக வந்த தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அவர்களின் பாடல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்கள். 


அது மட்டுமில்லாமல் சுமார் மூவாயிரம் பேர் படிக்கின்ற பள்ளிகளைத் திறம்பட நடத்தி கல்விப் பணிகள் செய்வதோடு ஏராளமான ஆலய குடமுழுக்கை திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி நடத்தி வருகின்றார்கள். மேலும் மூன்றாவது சந்நிதானமாக வந்த தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள் காட்டிய வழியை நெறி பிறழாமல் கடைபிடித்து வருகின்றார்கள். இத்தகைய விஷயங்களையெல்லாம் கௌமார மடத்தில் தெரிந்து கொண்டேன். மடத்தில் இருந்து மாதம் தோறும் வெளி வருகின்ற மாத இதழான கௌமார அமுதம் எனும் இதழுக்கு ஒரு சந்தாவையும் கட்டிவிட்டு சுவாமிகளிடம் உத்தரவு வாங்கி அங்கிருந்து புறப்பட்டோம். மிகவும்  நல்ல அனுபவம் அது. அதன் பின்பு மீனாட்சி நாடியில் ஒரு ஆஸ்ரமம் கட்ட வேண்டும் என்று வந்தது. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.பேரூரில் சிவனது நெற்றிக் காணிக்கையை சந்தனத்துடன் கொடுத்து ஒரு ஆஸ்ரமம் கட்டுவாய் என பட்டீஸ்வரப் பெருமான் சொல்வதாக அர்ச்சகர் சொன்னதும் ஏற்கனவே இரண்டு ஆதீனங்களைச் சந்தித்ததும் இப்போது ஒரு ஆஸ்ரமம் கட்ட வேண்டும் என்று வந்ததும் ஒரு தொடர்பில் எல்லாம் நடப்பது போல் தெரிந்தது. கடவுள் இல்லை என்பவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டால் நிச்சயம் கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். இப்படி உருவானதே நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் ஆகும்.



ஆஸ்ரமம் உருவான பின்னர் சிரவை ஆதீனம் அவர்கள் உபதேசம் செய்தபடி முருக பக்தியை முறையாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கௌமாரத்தை நோக்கி ஒரு பயணம் எனும் பொருளில் kaumarapayanam.blogspot.in எனும் இந்த பிளாக் தொடங்கப்பட்டது. இப்படி இருந்த போது முருகப் பெருமான் ஜீவ நாடியில் இரு பிரிவாக தீட்சை கொடுத்து அடியார்களாக்கச் சொல்லி உத்தரவு தர புலால் மறுத்து கௌமாரக் கொள்கையைப் பின்பற்றி தீவிர உபாசனை செய்பவர்களுக்கு காவி தீட்சையும், சில சலுகைகளுடன் பக்தி மார்க்கத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பச்சை தீட்சையும் கொடுக்கப்பட்டு நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்பு 18 அடி வேல் பிரதிஷ்டையும் மீனாட்சி நாடி உரைத்தபடி செய்யப்பட்டது. அந்த வேல் பிரதிஷ்டைக்கு எனது முதல் உபதேச குரு நாதர் தவத்திரு வேலுச்சாமி சுவாமிகள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள். அதன் பின்பு ஜீவ நாடியில் வந்தபடி முருகப் பெருமானுக்கு  நடத்திய திருக்கல்யாண உற்சவத்திற்கு தவத்திரு.குமர குருபர சுவாமிகள் வந்து தலைமை ஏற்று சிறப்பு செய்தார்கள். இவ்விதம் எனக்கும் கௌமார மடத்திற்கும் உடைய முன் ஜென்ம தொடர்பு தொடர்கின்றது. அடுத்து ஒரு அதிசயம் நடந்தது...   (தொடரும்...)


                             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக