1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா
(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)
(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு | .1 |
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த (2) போதமுங் காணாத | |
அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு | .2 |
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத . | .3 |
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல் இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும் | .4 |
கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம் போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து . | 5 |
உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள் மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் | .6 |
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் | 7 |
ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய .. | .8 |
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் . | 9 |
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத் சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் . | .10 |
சத்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த மலபரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா | .11 |
தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் . | .12 |
ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் .. | .13 |
அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் .. | .14 |
வரவு நினைப்பு மறப்பும் பகலும் இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் . | .15 |
பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு .. | .16 |
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின் | |
முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் யானெனதென்று அற்ற இடமே திருவடியா மோனபரா னந்த முடியாக - ஞானம் . | .17 |
திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் . | .18 |
தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட . | .19 |
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் .. | .20 |
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் . | .21 |
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப் பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும் | .22 |
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும் | |
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் | .23 |
வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் | .24 |
தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர் வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் | .25 |
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் | .26 |
அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் | .27 |
புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி . | .28 |
இளம்பருதி நுாறா யிரங்கொடி போல வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து | .29 |
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் | 30 |
ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின் நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி . | 31 |
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ | 32 |
வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் | 33 |
பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் | 34 |
ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ . | 35 |
பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும் | 36 |
நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம் ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் | 37 |
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து | 38 |
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் . | 39 |
எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று . | 40 |
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில் சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர் அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் | 41 |
கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய . | 42 |
முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி . | 43 |
மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து | 44 |
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன் விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா - படைப்போன் | 45 |
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் | 46 |
பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் | 47 |
தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம் | 48 |
சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன் வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு . | 49 |
பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் | 50 |
அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு . | 51 |
சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர் குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம் | 52 |
சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு . | 53 |
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து . | 54 |
ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க் கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் . | 55 |
பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல் பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா . | 56 |
வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும் எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத் | 57 |
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் . | 58 |
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப் பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை | 59 |
எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து | 60 |
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள். திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று | 61 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக