வியாழன், 3 டிசம்பர், 2015

குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறி

எந்த தெய்வத்தை எப்படி வணங்கினாலும் தவறில்லை ஆனால் கொல்லாமை புலால் மறுத்தல் ஆகிய கொள்கைகளை மட்டும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமாரக் கொள்கையாகும். அந்த வண்ணச் சரபர்தான் நமது மௌமார மடாலய ஆதீனக் குரு முதல்வர் திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களின் உபதேச குரு ஆவார்கள். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தியானானுபூதி எனும்  நூலை அடிக்கடி படித்து வந்த திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்கள் அந்த நூலின் ஆசிரியரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளே தமது குரு என உணர்ந்து இருக்கும் வேளையில் பழனியில் அவர் தங்கியிருக்கும் தகவலை அறிந்து வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் சென்று உபதேசம் பெற்று கோவையில் குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறிப்படி தனது குருவான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருவுருவத்தைப் பூஜித்து, தியானித்து பெரும் சித்திகளை அடைந்தார்கள்.
ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை மிகவும் அவசியம். தனியாக மனிதன் ஞானம் அடைய முடியாது. குரு இல்லாமல் ஞானம் இல்லை. குரு உபதேசம் மிகமுக்கியம். ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும். உடனடியாக இல்லாவிட்டாலும், சற்று தாமதமாகவாது. குரு உபதேசித்த வழி நடந்தாலே ஞானம் சித்திக்கும். குரு உபதேசம் பொதுவானது அல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. அது எப்படிப்பட்டது என்பதை குருவே முடிவு செய்வார். ஒருவருக்கான உபதேசம் மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை. அதனால் இதில் உயர்ந்த உபதேசம், தாழ்ந்த உபதேசம் என்ற பேதமில்லை. அவரவருக்கு அவரவருக்கான குரு உபதேசமே உயர்ந்தது, சிறந்தது. அதுவே அவரவருக்கான வழி. இதைக் கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதை கடமையாகக் கொண்டால் கண்டிப்பாக ஞானம் சித்திக்கும். இதைத்தான் கௌமர சமயம் காட்டுகின்றது.
அருணகிரி நாத சுவாமிகளும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் முருகப்பெருமானிடம் இருந்து பெற்றதை உபதேசத்தை கௌமார சமய நெறிகளாக்கி உள்ளனர்.
அருவாய் உருவாகி, ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட் கொண்டு அருள்வது எக்காலம்?
என்று பத்ரகியார் மெய்ஞானப் புலம்பலில் குறிப்பிடுகின்றார்கள்
பக்குவ நிலையைப் பெற்ற ஆன்மா நிச்சயம் ஒரு குருவைத்தேடி அலையும். அதேபோல் அந்த ஆன்மாவின் பக்குவத்திற்கு ஏற்ப குருவே சீடனைத்தேடி வருவார் என்பது திண்ணம். குருவிற்கும் சீடனுக்கும் இடையே எந்த பேச்சும் இருக்காது. பெரிய உரையாடல்கள் இருக்காது. ஆனால் குரு மௌனத்திலேயே தனது சீடனுக்கு எல்லாவற்றையும் போதித்து விடுவார்.
                    கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
குருஎன்னும் சம்ஸ்கிருதச் சொல் குஎன்ற ருஎன்ற இரண்டு சொற்களின் அடிப்படையில் தோன்றியதாகும். குஎன்றால் இருள். ருஎன்றால் ஒளி. குரு தன் சீடனின் அறியாமை இருளை அகற்றி உண்மை ஒளியைத் தோற்றுவிப்பவர். ஆன்மிகக் கண்களைத் திறந்து வைப்பவர்.
குருவென் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை இன்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. (மந்.2057)
என்று திருமந்திரம் குருவினுக்கு விளக்கம் கூறுவதைக் காண்கிறோம்.
ஆன்மீக குருவின் முக்கியத்துவம் உபநிடதங்களில் அதிகமாக காணப்படுகிறது. உபநிடதங்களில் குருவானவர் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகிறார். அதுதான் குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறியாகும்.
கர்ம வினைக் கோட்பாடு என்பது ஒரு சுழற்சி. அதாவது ஒவ்வொரு ஜீவனும் தன்னால் செய்யப்படும் புண்ய பாப வினைகளுக்கு தக்கவாறு மறுபிறவி எடுக்கிறான் என்பது நியதி. இருந்தும் அந்த ஜீவனுக்கு தாய் தந்தையர் ஒருவரே தொடர்ந்து வருவதில்லை. ஆனால் ஸத்குரு என்பவர் பரம்பொருள் துல்யமானவராதலால் ஜீவனது பரிபக்குவத்திற்கேற்ப அவரே தொடர்ந்துவந்து அவனது பிறவி கடைத்தேற உபதேசம் செய்து ஞானம் புகட்டி ஆட்கொள்ளுகிறார். இம்மாதிரி அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஜன்மாவிலும் அவனை படிப்படியாக பக்குவப்படுத்தி சரஜன்மாவிலிலே அதாவது கடைசி ஜன்மாவிலே மந்திரத்தை உபதேசித்து தன்னோடு இணைத்துக் கொள்ளுகிறார். ஆதலால்தான் தாய் தந்தையரை விட ஸத்குருவானவர் உயர்ந்த நிலையில் போற்றப்படுகிறார். தாயிடமிருந்தே தந்தையை அறிவதைப்போன்று ஸத்குருவினிடமிருந்து பரம்பொருளை அறிகிறான் ஜீவன். அதாவது ஒரே ஸத்குரு படிப்படியாக ஜீவனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்கிறார். எனவே பூர்வ ஜென்ம சம்பந்தம் இல்லாமல் ஒருவருக்கு குரு அமைவத்தில்லை. எல்லாம் அமைந்தும் எந்தவித தெய்வீக அனுபூதியும் அடையவில்லை என்பவர்கள் நிச்சயம் அவர்களது பூர்வ ஜென்ம குருவை அடையாளம் கண்டிருக்கமாட்டார்கள். தமது பூர்வ ஜென்ம குருவை அடையாளம் கண்ட ஒருவர் எப்போதும் தனது குருவை இடைவிடாமல் சிந்தித்து வருகின்ற ஒரு அனுபூதியை விரைவில் பெறுகின்றனர். அதன் பின்பு மந்திர சித்தி, வாக்கு சித்தி, தெய்வ சித்தி என் படிப்படியாக வளர்ச்சியை அடைவார்கள்.
ஒரு உண்மையான சீடன் என்பவன் கீழ்படிதல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், நேர்மை குருவை பூஜிக்கும்தன்மை எனும் குணங்களை கொண்டவனாகவும், பிறரை துன்புறுத்துதல், சந்தேகம், ஆணவம், பொருளாசை, பொறாமை என துன்பங்களை ஏற்படுத்தும் குணங்களற்றவனாகவும் இருத்தல்வேண்டும்.
தவத்திரு, குமர குருபர சுவாமிகள் அவர்கள் தனது ஞான ஆசிரியன் ஆகிய தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் திருப்பணிகளுக்கு அதிகமாக தனது குருவுடன் இருந்து சேவை செய்துள்ளார்கள். தனது குரு காட்டிய நெறியில் பிறழாது கடைபிடித்தும் வருகின்றார்கள். இப்போது இந்த கௌமார மடத்தின் ஆசனத்தை அழகாக அலங்கரிக்கும் ஜோதியாகத் திகழ்ந்து வருகின்றார்கள். தவத்திரு, குமர குருபர சுவாமிகள் அவர்களின் குரு நாதராகிய தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகளின் திரு அவதார நாள் வருகின்ற 09.12.2015 புதன்கிழமை அன்று கௌமார மடாலய சமாதி வளாகத்தில் சிறப்பாக நடக்க இருக்கின்றது. இதைப்பற்றி ஏற்கனவே ஒரு பதிவை எழுதி இருக்கின்றேன். (http://kaumarapayanam.blogspot.in/2015/11/blog-post_66.html )
வாய்ப்பு இருப்பவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறலாம்.
நன்றி: தவத்திரு. குமர குருபர சுவாமிகள்
என்றும் குருவின் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக