செவ்வாய், 22 டிசம்பர், 2015

சிரவை ஆதீனம் அவர்களின் கழுகுமலை அருள்பொழிவு

20.12.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று விருது நகர் மாவட்ட முருக பக்தர்கள் பேரவையினரால் கழுகுமலையில் மூன்றாம் ஆண்டு மலர்க்காவடிப் பெருவிழா சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்தான் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு ஞானதேசிகர் ஆவார்கள். தமது ஞானதேசிகர் எல்லா பொழிவுகளிலும் முதலாகப் பாடுகின்ற விழிக்குத்துணைதிரு வெண்மலர்ப்பாதங்கள் எனும் கந்தரலங்காரப் பாடலைப்பாடி தனது அருள்பொழிவைத் தொடங்கினார்கள் சிரவை ஆதீனம் அவர்கள். வேலும் மயிலும் துணை என்பது இதன் பொருளாகும். அந்த விழாவில் சிரவை ஆதீனம் அவர்கள் ஆற்றிய அருள் பொழிவுகள் கௌமாரப்பயண வாசகர்களுக்காக இங்கு இடம் பெறுகின்றன.
      படம்: கழுகுமலையில் உரையாற்றும் சிரவை ஆதீனம் அவர்கள்
  • தமிழர்களின் வழிபடு கடவுள் முருகப்பெருமான். முருகப்பெருமானின் மூன்று நாமங்கள்தான் மிக உன்னத நாமங்கள் என்று கந்தர் அனுபூதியில் அருணகிரிநாத சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்கள். முருகன்,குமரன்,குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் என்பது அனுபூதி.
                                     படம்: அருணகிரி நாதர் அனுபூதி பெறுதல்
  • முருகப்பெருமானே தனக்கு உபதேச குரு என்பதால் குருபுங்கவ எண்குண பஞ்சரனே என்று தனது குருவைப் போற்றுகின்றார்  அருணகிரிநாத சுவாமிகள் அவர்கள்.
  • 27 ஆண்டுகளுக்கு முன்னர் 1988ம் ஆண்டு கௌமார மடத்தில் முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டது. 1992 ம் ஆண்டு பழனியில் முருக பக்தர்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநாடு தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்களால் நடத்தப்பட்டது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்களின் அமைப்புகள் ஒன்றாக இணைந்தன. அதன் பின்பு ஒவ்வொன்றாக வந்து இணைந்து கொண்டன.
  • இந்த மலர்க்காவடி விழாவானது முதன் முதலில் திருத்தணி மலையில் ஆங்கிலேயரை ஆங்கிலப்புத்தாண்டு அன்று சென்று வாழ்த்து சொல்ல வேண்டுமே என்ற நியதியில் இருந்து தப்பிக்கும் பொருட்டும் அந்த நாள் நமது முருகனை வழிபடும் நாளாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் ஆங்கிலப் புத்தாண்டான சனவரி 1ம் தேதி இந்த மலர்க்காவடி விழா நடத்தப்பட்டது. அதே போல் வள்ளி மலையில் நடத்தப்பட்டது. இதை ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். கொங்கு நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களில் இந்த மலர்க்காவடி விழாவை நடத்தி இருக்கின்றோம். இந்த கழுகு மலையில் சென்ற இரண்டு ஆண்டுகள் இந்த மலர்க்காவடி விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.இது மூன்றாவது ஆண்டு. மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் எமது வாழ்த்துக்கள்.
                                        படம்: திருத்தணி மலர்க்காவடி விழா
  • ஒரு அம்மையார் எப்போதும் முருகா முருகா என்று முருகனின் நாமத்தையே தப்பாமல் சொல்லி வந்தார்கள். பெரிய புராணத்தில் வருகின்ற அப்பூதியடிகள் எப்படி எல்லாவற்றிற்கும் அப்பர் பெயரை வைத்தாரோ அப்படி இந்த அம்மையார் முருகா முருகா என்று எல்லாமே முருகன்தான்.
  • அந்த அம்மைக்கு திருமணம் ஆனது புகுந்த வீட்டில் யாருடைய பெயர் இந்த முருகன் எதற்காக இந்தப் பெயரை சொல்கிறாய் என்று அந்த பெயரைச் சொல்லக்கூடாது என்றார்கள். ஆனாலும் அந்த முருகன் நாமத்தைத் தவறாது சொல்லி வந்தார்கள் அந்த அம்மை அவர்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத குடும்பத்தினர்கள் அந்த அம்மையாரின் கையை வெட்டினார்கள். அந்த அம்மையார் அதற்கும் முருகா...முருகா என்றார்கள். உடனே முருகன் அருளால் அந்த கையானது மீண்டும் வளர்ந்தது என்கிறது புராணம். அந்த அம்மை பெயர் கூட தெரியவில்லை. முருகா முருகா என்று சொல்லி வந்ததால் அந்த அம்மையை முருகம்மை என்று அழைத்தார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த்து இந்த முருகன் எனும் திரு நாமம்.
                    படம்: முருகம்மையார் அனுபூதி பெறுதல்
  • விழிக்கும், மொழிக்கும், முன்பு செய்த பழிக்கும், வழிக்கும் துணையாக இருக்கின்ற பெரும் தெய்வம் முருகப்பெருமான்.
  • தமிழர்கள் கடவுள் என்றும் தமிழ்க்கடவுள் என்றும் போற்றப்படுபவர் முருகப்பெருமான். ஆனால் இங்கு தமிழகத்தைக்காட்டிலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கந்த புராணத்தை பாராயணம் செய்து வருகின்றார்கள். நாம் ராமாயணம், மகாபாரதம் என்று படித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இலங்கையில் கந்த புராணத்தைப் பாராயண நூலாகப் படித்து வருகின்றார்கள் என்றால் அவர்களது முருக பக்தியைப் பாருங்கள்.
  • கேரள நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் பழனிக்கு அடிக்கடி வந்து முருகனை வழிபடுகின்றனர். ஆனால் நாம் இங்கிருந்து அங்கு சென்று கொண்டிருக்கின்றோம். நாம் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. இருந்தாலும் தமிழர்களின் வழிபடு கடவுள் தண்டமிழ்க்கடவுள் முருகப்பெருமான் என்பதை நாமெல்லாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
                     படம்:பழனி மலையின் எழில் தோற்றம்
  • வெளி நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் பலர் பழனிமலைக்கு வந்து வழிபட்டுச்செல்கின்றார்கள். எந்த ஒரு புது செயல் தொடங்கினாலும்  சரி அல்லது எந்த ஒரு புது சபதம் ஏற்பதாக இருந்தாலும் சரி பழனி மலை சென்று முருகப்பெருமான் முன்பு வழிபட்டு அந்த செயலைத் தொடங்குவதை தமது மரபாக வைத்துள்ளனர் பலர்.
  • நாத்திகவாதம் பேசுபவர்கள் கூட தமிழ்க்கடவுள் முருகன் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதை பொம்மபுர ஆதீனம் அவர்கள் பேசும்போது கூட குறிப்பிட்டார்கள்.
  • நாம் நேற்று திண்டுக்கல்லில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தோம். அந்தக்  கல்லூரியில் முனைவர் பட்டம் பெற வேண்டி தமிழை ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும்படி நேர்ந்தது. முருகனைப் பற்றி ஏராளமான செய்திகளை அவர் கூறினார். பலர் இதுவரை இதுபோல் பல செய்திகளை மறைத்து வந்துள்ளனர் என்று எனது ஆய்வில் கண்டறிந்தேன் என்றும் இனிமேலும் அதுபோன்று நடக்காமல் தாங்கள்தான் அதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் பல காலம் நாத்திகராக இருந்தவர். இப்போது தமிழ் மீதும் முருகன் மீதும் மிகுந்த ஈடுபாட்டோடு இருக்கின்றார்.
  • சங்க காலத்தில் இருந்தே முருகன் வெறியாடி குறி சொல்லி மக்கள் குறைகளைத் தீர்த்துள்ள செய்திகள் பல தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
                         படம்:வெறியாடி குறி சொல்லுதல்
  • இயற்கையோடு இணைந்த வழிபாடு முருகன் வழிபாடு. இயற்கைக்கு உரிய கடவுள் முருகப்பெருமான். நதி அருகிலோ, மலை போன்ற இயற்கையை ஒட்டி இருக்கின்ற இடங்களில் முருகனைக் கண்டு நம் தமிழர்கள் வழிபட்டுள்ளார்கள். இன்று இயற்கைக்கு எதிராக தமது வாழ்வை அமைத்துக் கொண்டதால்தான் மனிதன் இன்று பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றான். சென்னை வெள்ளப் பாதிப்புகள் கூட அப்படித்தான் ஏற்பட்டுள்ளது.
                   படம்: முருகன் இயற்கைக்குக் கடவுள்
  • மரம் வையுங்கள் அப்பதான் மழை வரும் என்று சொன்னால் யாரும் வைப்பதில்லை. மாணவர்களிடம் மரம் வையுங்கள் அப்பதான் மழை வரும் மழை வந்தால் விடுமுறை கிடைக்கும் என்று சொன்னால் உடனே மரம் வைக்கின்றார்கள். (கூட்டத்தில் சிரிப்பலை....) அப்படி சொன்னால்தான் கேட்கின்றார்கள். சிலர் இந்த நட்சத்திரத்திற்கு இந்த மரம் வையுங்கள் நல்லது நடக்கும் என்று சொன்னால்தான் மரம் நடுகின்றார்கள். இவர்கள் அப்படி. கொங்கு நாட்டில் மழை இல்லையே என மழைக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம். ஆனால் இங்கு தென் மாவட்டங்களில் நல்ல மழை உள்ளது. நேற்று மதுரை அருகே நல்ல மழை. வானிலை ஆய்வு மையம் இன்னும் மூன்று நாட்கள் மழை இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்த விழாவில் மழை வரும் என்று  நினைத்திருந்தோம். இதுவரை இல்லை. விழா நன்றாக நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி
  • விருது நகர் மாவட்ட முருக பக்தர் பேரவை கொன்றையாண்டி அவர்களிடம் எதற்காக இவ்வளவு செலவுகள் செய்கின்றீர்கள் சிறிய செலவில் இந்த மலர்க்காவடி விழாவை நடத்தலாமே, இவ்வளவு பெரிய அழைப்பிதழ் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கின்றது என்று நாம் சொன்னோம். அதற்கு இந்த அழைப்பிதழை இந்தக் கழுகுமலை மக்கள் பூஜை அறையில் வைத்திருக்கின்றார்கள் என்பதால் புரவலர்கள் அனைவரும் செலவுகளைக் குறைக்க வேண்டாம் நன்றாகவே செய்யுங்கள் என்கிறார்கள் என்றார். மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
  • இந்த மலர்க்காவடி விழாவிற்கு வந்திருக்கின்ற அனைத்து முருக பக்தர்களுக்கும் இந்த முருகப்பெருமான் அருள் கிடக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் என்று சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள அவர்கள் தனது அருள் பொழிவை நிறைவு செய்தார்கள்.
  • அதன் பின்பு இரண்டு ஆதீனங்களும் மலர்க்காவடிகளைத் துவங்கி வைக்க மலர்க்காவடிகள் வரிசையாக பெரும் கூட்டத்துடன் கழுகுமலையை வலம் வரத்துவங்கியது.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                          
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,
அந்தியூர்.
படம்: கழுகுமலை மலர்க்காவடி விழாவில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக