புதன், 9 டிசம்பர், 2015

இன்று கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவதார நாள்

                               தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்

கார்த்திகை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை அன்று கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவதரித்தார்கள்.  நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் குரு நாதர் தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆவார்கள். அந்த வகையில் சுவாமிகள் அடியேனுக்கு பரம குரு நாதர் ஆவார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் விசாகம் அன்று கௌமார மடத்தில் சுவாமிகள் அவதார விழா பூசை   நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. சுவாமிகள் செய்த கஜ பூஜை அனைவராலும் இன்றும் மெய் சிலிர்க்கும் வகையில் போற்றப்பட்டு வருகின்றது.

இது போல் ஒரு பூஜையை இது வரையில் யாருமே செய்ததில்லை. இனி எவரும் செய்ய இயலாது. அப்போதே உரிய படி பதிவு செய்திருந்தால் இந்த கஜ பூஜை கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கும். இந்த கஜ பூஜை நடத்தி 25 ஆண்டுகளாகி அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு 108 கோ பூஜை, கஜபூஜை, 1008 திருவிளக்கு பூஜை கஜ பூஜை சுந்தர சுவாமிகள் திரு உருவம் திறப்பு, சீர் மிகு சிரவை ஆதீனம் எனும் நூல் வெளியீடு, அறுபத்து மூவர் நீராட்டு என தனது ஞானாதேசிகரைப் போற்றும் விதமாக எனது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கஜ பூஜை வெள்ளி விழாவைக் கொண்டாடினார்கள். நமது கௌமார பயண வாசகர்களும், என்னிடம் தொடர்பில் இருப்பவர்களும், நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் அடியார்களும் இந்த நிகழ்வையெல்லாம் நினைத்து இன்று ஒரு நாள் முழுவதும் தவத்திரு சுந்தர சுவாமிகளின் பெருமைகளைப் போற்றிப் பேசியும் அவரது புகைப்படத்தின் முன்பு அமர்ந்து ஒரு அரை நிமிடமாவது பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


கொங்கு நாடு செய்த தவப் பயணாய் அவதரித்தவர் நம் சுந்தர சுவாமிகள். அவருக்கு நாம் என்ன கொடுத்தாலும் ஈடு இணை ஆகாது எனவே தூய்மையான பக்தியைச் செலுத்தலாம். தமிழ்ப்பற்று இருப்பவர்கள் நம் சுந்தர சுவாமிகள் இயற்றிய சுந்தரர் சொற்றமிழை படித்து ஆய்வு செய்து இன்புறலாம். ஆலய வழிபாட்டில் விருப்பமுடையவர்கள் சுந்தர சுவாமிகள் திருப்பணிகள் செய்த கௌமார மடாலயம், அவினாசி, திருச்செங்கோடு, திருப்பெருந்துறை, வெஞ்சமாக்கூடல் போன்ற தலங்களை இன்று தரிசனம் செய்யலாம். வழிபாடு செய்பவர்கள் தமிழ் முறையில் வழிபாடு செய்து சுவாமிகளின் செயல்களைப் போற்றலாம். இப்படி ஏதேனும் ஒரு வகையில் நமது சுவாமிகளைப் போற்றி வழிபட்டு குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறியில் இணைந்து குருவருளால் அந்த தண்டபாணிக்கடவுள், ஞானஸ்கந்தப் பெருமானின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கஜ பூஜை வெள்ளி விழா நிகழ்வின் படங்கள் நம் கௌமார பயண வாசகர்களுக்காக,
                                                                 108 கோ பூஜை


கஜ பூஜை


அறுபத்து மூவர் நீராட்டு

கஜ பூஜை சுவாமிகள் திருவுருவச்சிலை திறப்பு
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

ன்றும் எம் ஞானதேசிகர் பணியில்
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்  

                                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக