ஞாயிறு, 22 நவம்பர், 2015

2014-இல் அல்ப்ஸ் மலையின் சாரலில் அழகு தமிழ் முருகனுக்கு ஆராட்டு விழாவில் சிரவை ஆதினம் ! ! !


 

                    

2வது அனைத்துலக முருக பக்தி மாநாடு  சுவிட்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சென் மாக்கிறதன் அருள்மிகு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் சார்பில் நடைபெற்ற இம் மாநாட்டில், உலகெங்கிலுமிருந்து வந்திருக்கக் கூடிய  300 பேராளர்களும், ஆன்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
02ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விழா ஆரம்பநாள் நிகழ்வுகள் நடைபெற்றன. புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் நிரம்பிய கலசங்கள் பூஜிக்கப்பெற்று, கதிர்வேலாயுத சுவாமிக்கு அபிஷேகித்தைத் தொடர்ந்து, ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சார்யார் சிவஶ்ரீ. பா. ஜோதிநாதக்குருக்கள், விஷேட ஆராதனைகளை நிகழ்ந்தினார். தொடர்ந்து சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் என்பவற்றுடன், முருகப்பெருமானின் நல்லருள் வேண்டுதலினைத் தொடர்ந்து, அருளாளர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

2ம் நாள் நிகழ்வுகள் 3ந் திகதி சனிக்கிழமை, Mehrzweck & Sportanlagen, Amtacker Strasse, 9437 Marbach .SG எனும் முகவரியில், காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகின. முருக பக்தி மாநாட்டின் தலைமை ஏற்பாட்டாளரும், மலேசிய திருமுருகன் திருவாக்குப் பீடத்தின் அருட் தலைவருமாகிய, தவத்திரு பாலயோகி சுவாமிகளினால், 2வது மநாட்டினை சுவிட்சர்லாந்தில்  நடத்த வெண்டுமென்ற விருப்போடு, சென் மாக்கிறதன் கதிர்வேலாயுத சுவாமி கோவில் தலைவர் திரு. கணேஸ் குமார் வேலுப்பிள்ளை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாநாட்டடின் செங்கோல், அலங்கரிக்கபட்டு பக்திபூர்வமாகவும், இளைய தலைமுறையினரின் காவடி, கோலட்டம், போன்ற கலைவெளிப்பாடுகளுடனும், மங்கள வாத்திய சகிதமுமாக,  "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா " எனும் கோஷமதிர, மாநாட்டு மண்டபத்திற்கு, ஆன்றோர்களும், அருளாளர்களும் புடை சூழ, மாநாட்டின் திருஞான சபைக்கு எழுந்தருளச் செய்தார்கள்.

திருஞான சபையில் செங்கோல் ஸ்தாபிக்கபட்டு, ஆராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, உலக அமைதி வேண்டி, அனைவரும் எழுந்து நின்று  ஒரு நிமிட அக வணக்கத்தினை அமைதியாகப் பிரார்த்தித்தார்கள். அமைதிப் பிரார்த்தனையைத் தொடர்ந்து, கலைமாமணி ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் இன்குரலில் இறைபுகழ்பாடும் நாத வேள்வி இடம்பெற்றது.

நாத வேள்வியினைத் தொடர்ந்து, அனைத்துலக முருக பக்தி மாநாட்டு ஏற்பாட்டுக்குழு (2014) கௌரவ செயலாளர்,  உயர்திரு. ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த, ஆன்றோர்களையும், பேராளர்களையும், பங்காளர்களையும், அன்பு கலந்தும், அழகு தமிழ் சேர்த்தும், வரவேற்று உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, மாநாட்டு ஏற்பாட்டுக்குழு 2014, மற்றும், அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் தலைவர், உயர்திரு. கணேசகுமார் வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனதுரையின் போது,  " இம் மாநாட்டினை நடத்தும் வாய்ப்பு,  தமக்கும், தமது ஆலய உறுப்பினர்களுக்கும் கிடைத்த அருட்பேறு " எனக் குறிப்பிட்டார்.


தொடர்ந்து அருளாளர்கள்,  தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (இணைஅதிபர், திருப்பனந்தாள் காசி திருமடம்)
தவத்திரு குமரகுருபர சுவாமிகள் (மடாதிபதி, கௌமார மடாலயம் கோவை.) தவத்திரு யோகானந்த அடிகள் (தலைவர், உலக சைவப் பேரவை)  ஆசியுரை வழங்கினார்கள்.  திரு. கந்தவனம் (கவிஞர், கனடா), திருமதி. சாந்தி நாவுக்கரசன், பணிப்பாளர் (இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இலங்கை), உயர்திரு. வயி. நாராயணசாமி(முன்னாள் செயலர் சட்டத்துறை அமைச்சு, புதுச்சேரி), ஆகிய சான்றோர்களின்
வாழ்த்துரையைத் தொடர்ந்து,  டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா (அறங்காவலர், நிர்வாக வாரியத் தலைவர், உலகப்புகழ் மலேசிய பத்துமலைத் திருத்தலம்) சிறப்புரை ஆற்றினார்கள். அவர் தனது சிறப்புரையில், பத்துமலைத் திரு முருகனின் பெரும்புகழையும், அவனருளாலே அமையப்பெற்ற உலகின் அதி உயர் முருகன் சிலை குறித்தும், அந்த அழகுச் சிலை உலக முருக வழிபாட்டின் அடையாளமாக மாறியிருப்பதையும், அழகுற எடுத்தியம்பினார்.

மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் அருட் தலைவர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அனைத்துலக முருகபக்தி மாநாட்டினை ஆரம்பித்தருளும் வகையில், அருட்தலைமையுரை ஆற்றினார்கள். அவர் தனதுரையில் 2வது மாநாட்டினை மிகுந்த சிரத்தையுடன் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள கதிர்வேலாயுத சுவாமி கோவில் தலைவருள்ளிட்ட சபையினருக்குப் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு, முருகனின் திருவருளையும் போற்றிக் கொண்டாடினார்கள்.

                      

மாநாட்டு மலர், மற்றும் சிறப்பு மலர்களை தவத்திரு பாலயோகி சுவாமிகளும், தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளும்,
தவத்திரு குமரகுருபர சுவாமிகளும், இணைந்து வெளியிட, இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிர்வாக இயக்குனருமான உயர்திரு. ஈ. சரவணபவன் அவர்கள் முதற் பிரதியினைப் பெற்றுக் கொண்டார்கள். 


மதிய போசன இடைவேளையினைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆய்வரங்கின் முதல் அமர்விற்கு சிவஸ்ரீ. த. சரஹனபவானந்த குருக்கள்  (ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம், சுவிஸ்) முன்னிலை வகிக்க, தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (இணைஅதிபர், திருப்பனந்தாள் காசி திருமடம்), தலைமையேற்க, ஆய்வாளர்கள் பேராசிரியர். மு. ராசேந்திரன் (மலேசியா), ஓய்வுநிலை பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜா (தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக் கழகம்), பேராசிரியர். மா. வேதநாதன் ( தலைவர், இந்து நாகரிகத் துறை, யாழ். பல்கலைக் கழகம்), பேராசிரியர். க. திலகவதி (கோலாலம்பூர், மலேசியா), திருமதி. சாந்தி நாவுக்கரசன் ( பணிப்பாளர் - இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இலங்கை),     பேராசிரியர். வே. சபாபதி (பல்கலைக்கழகம், மலேசியா), திருமதி. உமாதேவி அழகிரி (மொரீசியஸ்), ஆகியோர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றினார்கள்.

சிற்றுண்டி இடைவேளையைத் தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது  ஆய்வரங்கு அமர்வுக்கு, சகலாகம சங்கரர் சிவபிரம்மஸ்ரீ து. உமாசங்கரக் குருக்கள், (ஜெனீவா) முன்னிலை வகிக்க, இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த வருகை விரிவுரையாளர் திரு சிவாப்பிள்ளை அவர்கள் தலைமையேற்றார். இவ் ஆய்வரங்கில், பேராசிரியர். செ. யோகராசா (மொழித்துறை, கிழக்கிலங்கை பல்கலைக்கழகம்), திருமதி. நீலா நகுலேசபிள்ளை (செயலாளர், உலக சைவப் பேரவை, கனடா), திருமதி. எஸ். கேசவன் (சிரேஷ்ட விரிவுரையாளர், இந்து நாகரீக கற்கைகள்புலம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம்), உயர்திரு. இராசையா மகேஸ்வரன், (முதுநிலை துணை நூலகர், நூலக தகவல் தொழில்நுட்ப துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்), முனைவர். கிங்க்ஸ்டன் பால் தம்புராஜ், 
(மலேசியா), உயர்திரு. சி. திருசெந்தூரன் (விரிவுரையாளர், அரசறிவியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்), செல்வி. சியாமளாங்கி கருணாகரன் (விரிவுரையாளர், பல்கலைக்கழகம், இலங்கை) திருமதி. சுகன்யா அரவிந்தன் (விரிவுரையாளர், இசைத்துறை, யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோர் தமது ஆய்வுகளைச் சமர்ப்பித்தார்கள்.

                       

இதனைத் தொடர்ந்து,  சூரிச் மாநில திருக்கோணேஸ்வர நடனாலய ஆசிரியர்  திருமதி. சந்திரவதனியின் மாணவிகளது     ஆறுபடை வீடு நாட்டிய நடனம் முருகனின் ஆறுபடைவீட்டின் உட்பொருள் உணர்த்தும் கலைசிறப்பாக நிகழ்ந்தது. இந் நடனதாரகைகளுக்கான கௌரவிப்பினைத் தொடர்ந்து, மலேசியா டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா, அவர்களின் தயாரிப்பில் உருவான,   "பக்தி மலையும் பத்துமலையும்"  பல்லூடகக் காட்சி இடம்பெற்றது. 

                       

மாலை நிகழ்வுகள், டத்தோ தனேந்திரன் (தலைவர் – சக்தி அறவாரியம், மலேசியா) தலைமையில், இடம்பெற்றன. அவரது உரையினைத் தொடர்ந்து.பின்னர், மாநாட்டின் சிறப்புக்கு அனுசரனையாகவிருந்த ஊடகவியலாளர்கள் உட்பட்ட பலர் அரங்கில் கௌரவிக்கப்பட்டார்கள். யாழ் உதயன் பத்திரிகைக்கான கௌரவத்தினை, அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  திரு. ஈ. சரவணபவன் அவர்கள் பெற்றக் கொண்டார். ஊடகவியலாளர்கள் இரா.துரைரத்தினம், தர்ஷன், ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த செந்தமிழரசு கி. சிவக்குமார் M.E, அவர்களின் சிறப்புரை அழகு தமிழும், அன்பு கசியும் பக்தியும் நிறைந்ததாக அமைந்திருந்தது. மலேசிய பத்மநிருத்தியாலையா ஆர்ட்சின் ஆசிரியர் திருமதி. விநோஸ்ரீ சங்கர், மாணவி ஸ்ரீ வர்ஷிணி உமாசங்கர் அவர்களின் நாட்டியார்ப்பணத்துடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

இந் நிகழ்வுகள் அனைத்தையும், முன்னாள் இலங்கை வானொலி அறிவிப்பாளரும், பிபிசி தமிழ்ச்சேவைச் செய்தியாளருமாகிய திரு விமல் சொக்கநாதன் அவர்கள் நிகழ்வுகளைச் சுவைபடச் சுந்தரத்தமிழில் தொகுத்து வழங்கினார்கள்.

இன்று காலை 8.00 மணி முதல் மாநாட்டின் 3ம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன. இன்று மாலை நிறைவு நிகழ்வின்போது, மூன்றாவது மாநாட்டின் ஏற்பாட்டாளகளிடம், மாநாட்டின் செங்கோல் ஒப்படைக்கப்படும். 3வது மாநாடு தென்னாபிர்க்காவில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
                                     நன்றி : சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள்

                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                               சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!
                                                                                                                                                      நன்றி : தமில்மீடியா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக