வெள்ளி, 13 நவம்பர், 2015

அவிநாசியில் கஜபூஜை சுந்தர சுவாமிகளின் திருப்பணிகள் !

சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் மற்றும் புகைபடத்தில் கஜபூஜை தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள் 

திருப்பெருந்துறை கோவிலில் தவத்திரு. சுந்தர சுவாமிகள் செய்த திருப்பணிகளை முன்பு ஒரு பதிவில் எழுதியிருந்தோம். அதேபோல் அவிநாசியில் உள்ள அவிநாசியப்பர் கோவிலில் கோவை, சிரவை ஆதினம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம், தவத்திரு. சுந்தர சுவாமிகள் தலைமையில்
கட்டப்பட்ட ஏழு நிலை இராஜ கோபுரத் திருப்பணி நிறைவடைந்து 28.11.1980ல் மகா கும்பாபிஷேகம் பெரிய அளவில் நடைபெற்றது.

தலை நிமிர வைக்கின்ற இந்த இராஜகோபுரம் கொங்கு நாட்டிலுள்ள பெரிய கோபுரங்களில் ஒன்று .சுமார் 100 அடி உயரம் உடையது. பழைய கோபுரம் கொங்குப் பாண்டியன் - சுந்தர பாண்டியன் (1285 - 1300) காலத்தில் கட்டப்பட்டது .இடைக் காலத்தில் மொட்டை கோபுரமாகி விட்ட இதை மைசூர் உடையார் பிரதிநிதி சங்கரய்யன் என்பவர் கட்டினார். பின்னர் இக் கோபுரம் கி.பி.1860ல் இடி தாக்கி பழுதாகி இடிக்கப் பட்டு விட்டது. மீண்டும் இக் கோபுரம் கௌமார மடாலயம் தவத் திரு.சுந்தர சுவாமிகள் முயற்சியால் கட்டப்பட்டு கி.பி.1980 ல் திருக் குட நீராட்டல் நடைபெற்றது.

கொங்கு நாட்டின் பெருஞ் சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் தேர்கள் 23.11.1990 ல் நள்ளிரவில் தீக்கிரையாயின தவத்திரு. சுந்தர சுவாமிகள் தலைமையில் சுமார் 50 இலட்ச ரூபாய் செலவில் பழைய தேரின் அதே பரிணாமங்களுடன் மரச் சக்கரங்களுக்கு திருச்சி பெல் நிறுவனத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது

                       
புதிய தேரின் வெள்ளோட்டம் 28.1.1993 ம் தேதி நடைபெற்றது. இது போல் பல ஆலயங்களில் திருப்பணிகள் செய்த்தால் தவத்திரு. சுந்தர சுவாமிகள் அவர்களை திருப்பணிச்செம்மல் என்று அழைத்து மகிழ்ந்தது கொங்கு மண்டலம். தவத்திரு. சுந்தர சுவாமிகள் அவர்கள் காட்டிய அதே வழியில் நமது சிரவை ஆதீனம் நான்காம் சந்நிதானம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் ஆலயப் பணிகளோடு கல்விப்பணியையும், தமிழ் இலக்கிய வளர்ச்சிப்பணிகளையும் செவ்வனே செய்து வருகின்றார்கள்.

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                     சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக