வெள்ளி, 13 நவம்பர், 2015

கௌமார சமயம் எனும் முருக வழிபாடு !

                                                    
1.ஆதி குருமுதல்வர் தவத்திரு ராமானந்த சுவாமிகள்,2.இரண்டாம் குருமகா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்,3.மூன்றாம் குருமகா சந்நிதானம் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள்,4.நான்காம் குருமகா சந்நிதானம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள்.

சங்கரர் கண்ட சண்மதங்களுள் கௌமாரம் என்னும் முருக வழிபாடு தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்துக்குரிய ஒன்றாகும். கௌமாரம் என்பது குமார என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. குமார என்பது இளமை, மகன் என்னும் பொருளடையது. மாறா இளமை உடையவனாவும், சிவபெருமானின் மகனாகவும் கருதப் பெறுகிற முருகனை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயநெறியே கௌமாரம் ஆகும். தமிழகத்தில் முருக வழிபாடு மிகப் பழங்காலத்திலேயே - அதாவது கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்தது என்பதற்குத் தமிழில் இன்று கிடைத்துள்ள நூல்களிலெல்லாம் பழைமையானதாகக் கருதப்பெறும் தொல்காப்பியத்திலேயே சான்று உள்ளது. 

 குறிஞ்சி நிலமாகிய மலைப் பகுதிக்குரிய தெய்வமாக முருகனைக் குறிப்பிடுகிறது அந்நூல்.  அது முருகனைச் சேயோன் ( செம்மை நிறத்தவன், மகன்) என அழைக்கிறது.  சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை என்னும் நக்கீரர் இயற்றிய நூல் முருகப் பெருமான் பெருமையைத் தனியே எடுத்துப் பேசும் முதல் சங்க நூலாகும். மேலும் பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை முதலிய சங்க நூல்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் முருகனுக்குரிய வழிபாட்டுத் தலங்கள் பல உள்ளன.  அவற்றுள் ஆறுபடை வீடு எனப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி(பழனி), ஏரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல் ( திருத்தணி), பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை.  தமிழகத்தில் தோன்றிய முருக வழிபாட்டினைத் தமிழர் தரணியெங்கும் பரப்பத் தலைப்பட்டனர்.  

வட இந்திய நகரங்களில் முருகன், சுப்பிரமணியன் என்னும் பேரில் தேவர்களின் படைத் தலைவனாக (தேவ சேனாபதியாக)வழிபட்டு வந்த நிலையைக் காணமுடிகிறது.  இலங்கையில் கதிர்காமம் முதலிய முருக வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளாகிய மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், பர்மா முதலிய இடங்களுக்கு முருக வழிபாட்டினைக் கொண்டு சென்ற பெருமை நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைச் சாரும்.  மொரீஷியஸ், பியுஜித்தீவுகளிலும் முருக வழிபாடு உள்ளது.  மேலும் வாஷிங்டன், சான்பிரான்ஸிஸ்கோ, லண்டன், சிட்னி, டொராண்டோ முதலிய நகரங்களிலும் முருகனுக்குரிய கோவில்கள் இன்று உள்ளன.                

முருக வழிபாட்டினை விளக்கும் நூல்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளன.  சமஸ்கிருதத்தில் உள்ள வேதமும், குமாரதந்திரம் என்ற ஆகமமும் , ஸ்கந்த புராணம், குமாரசம்பவம் முதலிய நூல்களும் முருகனின் பெருமை பேசும்.  தமிழில் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அருணகிரியாரின் திருப்புகழ் முதலிய நூல்கள் , குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா முதலிய நூல்கள் முருக வழிபாட்டின் சிறப்பைக் கூறும்.  கச்சியப்பரின் கந்தபுராணம் முருகன் சூரபன்மனை வென்ற வரலாற்றைச் சொல்லும். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய கௌமாரவிநோதம், கௌமாரமுறைமை, கௌமாரநூல் ஆகியவை கௌமார சமய தத்துவத்தைக் கூறும் தமிழ் நூல்களாகும்.  முருக வழிபாட்டினைக் கூறும் நூல்கள் ஆங்கிலத்திலும் இன்று வெளியாகியுள்ளன.
         
    முருகன் என்னும் சொல்லுக்கு மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும், நிறைந்த இறைமைத் தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் காண்பர் தமிழ் அறிஞர்.  தமிழில் உள்ள மெல்லின (ம்), இடையின (ர்), வல்லின (க்)            மெய்யெழுத்துக்களுடன் உ என்ற உயிர் எழுத்து இணைந்து முருகு எனபதாயிற்று என்பர் இலக்கண அறிஞர்.  செவ்வேள், சேயோன், வேலன், கந்தன், கார்த்திகேயன், குகன், குமரன், தண்டாயுதபாணி, ஆறுமுகன், சரவணபவன், சுப்பிரமணியன் எனப் பல பெயர்கள் முருகனுக்கு உண்டு.
          
  முருகப்பெருமான் வடிவம் ஒரு திருமுகமும் நான்கு கைகளுடனும் இருப்பதுண்டு.  ஆறுமுகமும் பன்னிரு கையும் கொண்டு விளங்கும் வடிவமும் உண்டு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ் என்னும் திசைகளே ஆறுமுகங்கள்.  இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன் என்பதன் அடையாளமே இது,  இறைமைக் குணங்களாகிய முற்றுணர்வு, எல்லையற்ற இன்பம், இயற்கையறிவு, தன்வயமுடைமை, பேரருள், பேராற்றல் என்பவற்றின் அறிகுறியே ஆறுமுகம் என்பாரும் உண்டு.  

அகச்சமயங்கள் ஆறும்  புறச் சமயங்கள் ஆறுமே பன்னிரு கைகள்.  முருகனுக்குரிய ஆயுதம் வேல். இது பரந்து, விரிந்து, ஆழ்ந்து, அகன்று இருக்கும் ஞானத்தின் அடையாளம். முருகனுக்கு இருமனைவியர்.  தெய்வயானை, வள்ளி இவர்களில் வள்ளி ஆர்வம் (இச்சை) என்பதன் அடையாளம்.  தெய்வயானை, செயலின் (கிரியையின்) அடையாளம்.  எனவே, ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான அறிவு(knowledge), ஆர்வம்( interest), செயல் ( action) என்பதன் அடையாளமே  வேல்.  வள்ளி, தெய்வயானையுடன் இருக்கும் முருகத் திருவுருவம் .முருகனுக்குரிய கொடி கோழிக்கொடி.  இது நாத தத்துவத்தைக் குறிக்கும்.  அவனது வாகனம் மயில்.  இது விந்து தத்துவத்தை விளம்பும்.  “நாத விந்து கலாதி நமோ நம “ என்பார் அருணகிரியார்.
       
       முருகன் சூரபன்மனாகிய அரக்கனை அழிப்பதற்காகச் சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதாகக் கந்தபுராணம் கூறும். எனவே முருகனைச் சிவனாகவே அறுமுகச் சிவனாகவே கருதி வழிபடுவர் சைவர்.  தேவர்க்குத் துன்பம் விளைவித்த சூரபன்மன், அவன் தம்பியராகிய சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும்  உயிர்கள், இறைவனை அடைய விடாது தடை செய்யும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் அறிகுறி என்றும், இவர்களை முருகன் வென்றது இத்தடைகளை ஞானாசிரியனாகிய கடவுள் வென்றதற்கு அடையாளம் என்றும் கூறுவர் அறிஞர்.
       
        முருகக் கடவுளுக்குரிய மூலமந்திரமாகச் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிப்பர்.  நாணற்புல் செறிந்து காடுபோல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்பது இதன் பொருள்.  நமக்குமாராய என்பதையும் , முருகா என்பதையும் அவனுக்குரிய மூலமந்திரங்களாகச் சொல்லுவதும் உண்டு.
       
       முருகனுக்குரிய விழாக்கள் தைப்பூசம், சித்திரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, கந்தர்சஷ்டி முதலியவை.  முருகனுக்கு அன்பர்கள் காவடி எடுத்துச் செல்வர். கௌமார சமயத்திற்குரிய மடமாகக் கௌமார மடாலயம் என்ற ஒரு நிறுவனம் தமிழகத்தில்கோயம்புத்தூரில்உள்ளது.                                                                                                                                     
விநாயகரை இடையூறுகளை நீக்கும் கடவுளாகக் கருதுவதுபோல் முருகக் கடவுளை மனக்குழப்பத்தை நீக்கி உணமைத் தெளிவைத் தரும் ஞானகுருவாகக் கருதுகின்றனர். முருகனை விநாயகரின் தம்பியாகவும் சிவன் சக்தியின் குழந்தையாகவும் திருமாலுக்கு மருமகனாகவும் கருதிச் சங்கரர் கண்ட  ஏனைய சமய நெறிகளுடன் கௌமாரத்தை இணைத்துப் பொதுமை காண்பதும் உண்டு.


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக