சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் கல்வி சேவை செய்வதோடு பல்வேறு ஆலயங்களுக்கு குடமுழுக்கு செய்து பெரும் ஆன்மீக சேவை ஆற்றி வருகின்றார்கள். தெய்வத்தை வழிபட மொழி ஒரு தடை இல்லை என்றும், அதேசமயம் உண்மையான அன்பைக் கடவுளிடம் செலுத்த மொழி தேவையில்லை என்றும் உபதேசம் செய்கிறார் சிரவை ஆதீனம் அவர்கள். அதேபோல் வட மொழியும் ஒரு சிறந்த மொழிதான் என்றாலும் நமது தாய் மொழியில் தமிழில் மந்திரம் சொல்லி பூஜை செய்யும் போது நமது மக்கள் அதை எளிமையாகப் புரிந்து கொண்டு இன்னும் பக்தியில் திளைக்கும் வாய்ப்புண்டு எனவும் உபதேசம் செய்கின்றார் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள். இந்தக் கொள்கைகளை மையாமாக வைத்தும் எளிமையான பூஜை முறைகள் வேண்டும் என்ற நோக்கத்திலுமே திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி பூஜைகள் செய்யும் முறைகள் வகுக்கப்பட்டது.
பூஜைகளில் தேவை இல்லாத ஆடம்பரங்களைத் தவிர்த்து மிக எளிய முறையில் அதே சமயம் குறைந்த செலவில் ஒரு குடமுழுக்கு செய்யமுடியும். குடமுழுக்கு செய்வதற்கு பல லட்சம் செலவு செய்யும் பல ஆலயங்கள் அதன் பின்பு அதை நிர்வாகம் செய்ய வசதி இல்லாமல் தடுமாறுகின்றன. வருடம் ஒரு முறை ஆண்டு விழா என்று நடத்தப்படும் நிகழ்வுகளுக்கே ஒரு குடமுழுக்குக்கு இணையான செலவுகள் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி செய்யும் போது அதிக செலவினங்கள் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. எனவே எல்லா சிறப்பு வழிபடுபாடுகளும் மிக அருமையான முறையில் நடத்தப்படுகின்றது.
நமது கௌமார மடாலயம் இத்தகைய திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி செய்யும் குடமுழுக்கு, புது மனை புகு விழா, மணி விழா, கடை திறப்பு விழா, திருமண விழா எனப் பல்வேறு விழாக்களை நடத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார் பாரதி ஆனால் நமது சிரவை ஆதீனம் தமிழை நிமிடத்திற்கு நிமிடம் போற்றி இறை பக்தியோடு இணைத்து வளர்த்து வருகின்றார்கள். இன்னும் நல்ல முறையில் தமிழை வளர்க்க அதில் நுன்னறிவு பெற வேண்டும் என்றெண்ணி நமது சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பாடல்களை ஆய்வு செய்து பி.எச்.டி எனும் முனைவர் பட்டம் தமிழில் பெற்றிருக்கின்றார்கள். அடிக்கடி கருத்தரங்கம், ஆய்வரங்கம் என கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயத்தில் நடத்தப் பட்டு அவை நூல் வடிவம் பெற்று வெளி வந்து கொண்டிருக்கின்றது. தற்போது தமிழில் ஆர்வம் உடையவர்கள், தமிழை ஆய்வு செய்பவர்களுக்காக பல்லாயிரக் கணக்கான நூல்கள் கொண்ட நூலகம் ஒன்று கௌமார மடாலயத்தில் செயல்பட்டு வருகின்றது.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர், ஜீவ நாடி நல்லுரைஞர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள், அந்தியூர்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக