திருவாசகத்தலங்கள் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் !
படம்: தவத்திரு.கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
திருவாசகத் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 A.e. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர் காரைக்குடி அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். மக்கள் வழக்கில் இன்று இத்தலம் ஆவுடையார்கோயில் என்று வழங்குகிறது. ஊர் - பெருந்துறை. கோயில் - ஆவுடையார் கோயில். கோயிற் பெயரான ஆவுடையார் கோயில் என்பதே ஊருக்குப் பெயராக வழங்ககிறது. சிறிய ஊர். அருகில் செல்லும் போதே கோபுரம் காட்சியளிக்கிறது.
அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணி பூமி. அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சி தந்த பதி. இத்திருக்கோயில், இறைவனின் கட்டைள்பபடி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால் ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்ற எழுதும் வழக்கம் இருந்ததாம். பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள இக்கலைத் திறனைப் பார்க்குங்கால் நம் அறிவுக்கும் எட்டாத அபூர்வ ஆற்றலை அறிந்தின்புறலாம்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட கோயில். ஆதினக் கட்டளைத் தம்பிரான் ஒருவர் இங்கிருந்து கோயிலைக் கவனித்து வருகிறார்.
இறைவன் - ஆம்நாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்.
இறைவி - யோகாம்பாள்.
தலமரம் - குருந்த மரம்.
தீர்த்தம் - அக்கினித் தீர்த்தம் (திருத்தமரம் பொய்கை)
உலகவுயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தளம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது. வெள்ளாறு (சுவதேநதி) பாய்கின்ற வயற்பரப்புக்கள் நிறைந்த பகுதி. "தெள்ளுநீர் வெள்ளாறுபாய், திருமிழலை நாட்டுப் பெருந்துறை" என்பது சிவலோக நாயகி பொன்னூசலில் வருந்தொடர்.
திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில் 20 பகுதிகள் (சிவபுராணம்) , திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.
இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் - அனாதிமூர்த்தத்தலம், ஆதிகயிலாயம், உபதேசத்தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், சதுர்வேதமங்கலம், ஞானபுரம், சிவபுரம், திருமூர்த்திபுரம், தட்சிண கயிலாயம், யோகவனம் முதலியன.
ஆத்மநாதருக்கு 18 பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை 1) ஆத்மநாதர் 2)
பரமசுவாமி 3) திருமூர்த்திதேசிகர் 4) சதுர்வேதபுரீசர் 5) சிவயோகவனத்தீ §சர் 6) குந்தகவனேசர் 7) சிவக்ஷேத்ரநாதர் 8) சன்னவனேசர் 9) சன்னவநாதர் 10) மாயபுரநாயகர் 11) விப்பிரதேசிகர் 12) சப்தநாதர் 13) பிரகத்தீசர் 14) திருதசதேசிகர் 15) அசுவநாதர் 16) சிவபுரநாயகர் 17) மகாதேவர் 18) திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.
சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார். ஆறாதாரங்களை நினைவூட்டும் வகையில் கனகசபை முதலான ஆறு சபைகளும் இக்கோயிலில் உள்ளன. திருப்பரங்குன்றத் திருப்புகழில் "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில் "வழியடியர் திருக்குருந்தடி அருள் பெற அருளிய குருநாதர்" என்று ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.
ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை
"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்
பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்
பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது
பரம ரகசியம் என்று கொள்ளே" - என்று மாணிக்கவாசகர் விலாசம் என்னும் பழைய நூல் புகழ்கிறது.
இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது 1) வனம் - குருந்தவனம் 2) தலம் - தீர்த்தத்தலம் 3) புரம் - சிவபுரம் 4) தீர்த்தம் - திருத்தமாம் பொய்கை 5) மூர்த்தி - ஆத்மநாதர் 6) தொண்டர் - மாணிக்கவாசகர்.
கோயிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது - பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையிலிருந்து கோயிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.
பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு) , ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இஃது உள்ளது.
அடுத்துள்ளது மண்டபம் பெரியது - ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும், ரணவீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில். பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம்.
இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சந்நிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ணஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று.'அண்ட ரண்ட பட்சி'யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒருசேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையுள்ள திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்க யோக வளர்ச்சிச் சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியைவகளையும் காணலாம்.
மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.
அடுத்துள்ளது ராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி எழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27 -6- 1990 அன்று நடைபெற்றது நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வரூபத்தின் ஸ்தூல அடையாளம்.
ராஜகோபுரத்தின் வழியே உட்செல்லும்போது வாயிலின் இடப்பக்கத்தில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு-ஆவுடையார்க்கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது-
இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட சாயர¬க்ஷ கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம வரிசரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப் பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது இ §முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. ஷ மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கி7த்தில் வைக்கப்பட்டிருக்கின்றது ஷ தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் ஷ சபையாரவர்களுக்குத் தெரியபடுத்த வேண்டியது."
உள்கோபுரத்தையும் தாண்டுகிறோம். அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம். உட்புகுமுன் நம் நினைவுக்கு ஒரு குறிப்பு.
இக்கோயிலில் கலாத்வா, தத்துவாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, பதாத்வா, மந்திராத்வா முதலிய ஆறு ஆத்வாக்களைக் குறிக்கும் வகையில் ஆறுவாயில்கள் - ஆறுசபைகள் உள்ளன. அவை 1) கனகசபை 2) நடனசபை 3) தேவசபை 4) சத்சபை 5) சித்சபை 6) ஆநந்த சபை என்றழைக்கப்படுகின்றன.
(கனகசபை - 81 தீபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நர்த்தனசபை (நடன நிருத்தசபை) - பதஞ்சலி வியாக்ரபாதர்கள் பெருமானிடம் கருணையை வேண்டிப் பெற்ற இடம் 224 புவன தீபங்களையுடையது. சூரனிடம் பயந்த தேவர்கள் தவஞ்செய்த இடமாகச் சொல்லப்படுவது தேவசபை - சுந்தரபாண்டிய மண்டபம் என்பர். இங்க ஏகாதச மந்திரங்கள் 11 தீபங்களாக உள்ளன. சத்சபையில் 36 எண்ணுடைய தத்துவத் தீபங்கள் பிரகாசிக்கின்றன. சித்சபையில் அகரமுதலான 51 எண்ணுடைய தீபம் திகழ்கிறது. ஆநந்தசபையில் (கருவறையில்) பஞ்சகலைகள் என்னும் சுடர், பிரகாசிக்கிறது. இவ்வாறு இத்திருக்கோயிலில் தத்துவம் அனைத்தம் தீபவடிவங்களாகவே வைத்துக் காட்டப்பட்டுள்ளன. இக்கருத்தை மனத்துக் கொண்டு உட்செல்வோம்)
நன்றி : சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள்.
நன்றி : சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள்.
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக