ஞாயிறு, 29 நவம்பர், 2015

சிரவை ஆதீனம் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்களைப் பற்றிய அபூர்வத் தகவல்கள்


  • தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் 6.8.1970 ல் திரு அவதாரம் செய்தார்கள்.
  • தற்போது சுவாமிகளுக்கு 46 வயது ஆகின்றது.
  • சுவாமிகளின் 46 வது நாண்மங்கல விழாவை ஒட்டி 06.08.2015 வியாழக்கிழமை அன்று ஒரு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
  • அந்த விழா மலரில் சிவ புராணம், கந்தர் கலி வெண்பா, மீனாட்சி அம்மன் கலிவெண்பா, தில்லை சிவகாமி அம்மை கலிவெண்பா, வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய முருகப் பெருமான் திருவிளையாடற் கலிவெண்பா மற்றும் கௌமாரத் தொகை ஆகிய அரும் துதிகளோடு தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் மீது எழுதப்பட்ட அருள் கவிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

  • அந்த மலரின் பதிப்பாசிரியர் சிரவை ஆதீனப் புலவர் கு.சிவலிங்கம் என்பாராகும். அன்னவர்தான் தவத்திரு இராமானந்தஅடிகளார் மேனிலைப்பள்ளியின் தலமை ஆசிரியர் ஆவார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகள்.
  • சுவாமிகளின் பூர்வாசிரம தந்தை பெயர் திரு. நடராசக் கவுண்டர் என்பதாகும். இவர் கஜபூஜை சுந்தர சுவாமிகளின் பூர்வாசிரம தம்பியாவார்.
  • சுவாமிகளின் பூர்வாசிரம தாயார் பெயர் திருமதி.வள்ளியம்மாள் என்பதாகும்.
  • சுவாமிகள் மேற்படியான தம்பதியர்களுக்கு மூன்றாவது மகவாக திரு அவதாரம் செய்தார்கள்.
  • சுவாமிகள் அவதாரம் செய்த தமிழ் வருடம் சாதரண ஆண்டாகும்.
  • சுவாமிகள் அவதாரம் செய்த தமிழ் மாதம் ஆடி மாதம்.
  • சுவாமிகளின் திரு அவதார நட்சத்திரம் உத்திரம், ராசி கன்னி  ஆகும்
  • சுவாமிகள் 10ம் வகுப்பு வரை கௌமார மடத்தின் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார்கள்.
  • 11, 12ம் வகுப்புகளை பீளமேடு சர்வஜனா மேல்னிலைப் பள்ளியில் பயின்றார்கள்.
  • அதன் பின்பு இளநிலை B.SC (MATHS) படிப்பை படித்து முடித்த சுவாமிகள் தனது ஞானாசிரியன் ஆகிய தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகளின் திரு அனுக்கத் தொண்டராக மடாலயத்தில் இருந்து பணி புரிந்தார்கள்.
  • எதிர்பாராத விதமாக தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகளின் வீடுபேறு 14.06.1994ல் நடந்தது.
  • அதே நாளான 14.06.1994 அன்றே  தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் கல்லாடை தரித்து துறவியாகி சிரவை ஆதீனத்தின் நான்காம் சந்நிதானமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
  • தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் அப்போதைய வயது 24 மட்டுமே ஆகும்.
  • அதன் பின்பு தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று சிரவை ஆதீனம் மூன்றாம் சந்நிதானமாக இருந்த தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள்.
  • சுவாமிகள் பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டும், ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் வருகின்றார்கள்.
  • கௌமார மடத்தில் இருந்து வெளிவருகின்ற கௌமார அமுதம் எனும் இதழுக்கு சிறப்பாசிரியராகவும் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் இருக்கின்றார்கள்
  • கௌமார அமுதம் இதழில் மறை மொழி எனும் தலையங்கக் கட்டுரையும் எழுதி வருகின்றார்கள் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்.
  • 28.11.1997 ல் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகளின் நினைவு நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.அந்த நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன. தமிழை ஆய்வு செய்பவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இந்த நூலகத்தில் இருக்கின்ற நூல்கள் திகழ்ந்து வருகின்றன.
  • 2009ம் வருடம் சிரவை ஆதீனம் தனது நூறு ஆண்டுகள் கண்டதை ஒட்டி ஒரு பெரும் விழா கொண்டாடப்பட்டது.

  • 08,09-12-2001ல் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு பழனியில் அருளாட்சி ஏற்கும் விழா சிறப்பாக நட்த்தப்பட்டது.
  • தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் சிரவணபுரம் கௌமார சபைக்கு தலைவராக இருக்கின்றார்கள்.
  • சிரவணபுரம் தண்டபாணிக்கடவுள் வளாக திருக்கோவில்களுக்கு சுவாமிகள் தலைவராக இருக்கின்றார்கள்
  • கோவை, கீரணம் தண்டபாணித் திருக்கோவிலுக்குத்  சுவாமிகள் தலைவராக இருக்கின்றார்கள்
  • கோவை சவுரிபாளையம் தண்டபாணித் திருக்கோவிலுக்கும்  சுவாமிகள் தலைவராக இருக்கின்றார்கள்
  • பழநி பட்டணம் மாரிமுத்து திருமடத்திற்கும் சுவாமிகள் தலைவராக இருக்கின்றார்கள்
  • மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளைக்கும் சுவாமிகள் தலைவராக இருக்கின்றார்கள்
  • கரூர் வெஞ்சமாங்கூடல் கோவிலுக்கும் சுவாமிகள் பரிபாலணக்குழுத் தலைவராக இருக்கின்றார்கள்
  • கவை காளியம்மன் கோவிலுக்கும் சுவாமிகள் பரிபாலணக்குழுத் தலைவராக இருக்கின்றார்கள்
  • சிரவை ரத்தினகிரிக்கும் சுவாமிகள் பரிபாலணக்குழுத் தலைவராக இருக்கின்றார்கள்
  • சுவாமிகள் அறவழி காட்டும் ஆன்றோர் துறவியர் பேரவை உறுப்பினராக இருக்கின்றார்கள்
  • சுவாமிகள் தமிழகத் துறவியர் பேரவைச் செயலாளராக இருக்கின்றார்கள்
  • சுவாமிகள் அகில இந்திய அமைப்பான இந்து ஆச்சார்ய சபாவில் உறுப்பினராக இருக்கின்றார்கள்
  • அகில இந்திய துறவியர் பேரவையின் மஹா மண்டலேசுவரராக சுவாமிகள் இருக்கின்றார்கள்
  • தவத்திரு ராமான்ந்த அடிகளார் கல்விக் கழகத்தின் செயலாலர் நம் சுவாமிகள்தான்
  • தவத்திரு ராமானந்த அடிகளார் கல்வி அறக்கட்டளைச் செயலாளரும் நம் சுவாமிகள்தான்
  • கௌமாரம் சுசீலா கல்வி அறக்கட்டளைத் தலைவர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களே
  • தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தவத்திரு ராமானந்த அடிகளார் மேல் நிலைப்பள்ளியின் செயலாளர் ஆவார்
  • தவத்திரு கந்தசாமி அடிகள் மேல் நிலைப் பள்ளியின் செயலாளரும் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்தான்

  • கௌமாரம் சுசீலா பண்ணாட்டு உறைவிடப் பள்ளிக்கும் சுவாமிகள் தலைவராக இருக்கின்றார்கள்
  • கௌமாரம் அன்பு இல்லத்தின் புரவலராகவும் சுவாமிகள் இருக்கின்றார்கள்
  • தென்னகச் சைவப் பேரவையின் தலைவரும் நம் சுவாமிகள்தான்
  • கௌமார சிறப்புப் பள்ளியின் தலைவரும் நன் சுவாமிகள்தான்
  • தவத்திரு கஜ பூஜை சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையத்தின் தலைவராகவும் சுவாமிகள் இருக்கின்றார்கள்
  • அதுமட்டுமல்ல கோவையில் பிரபலமாக இருந்து வருகின்ற குமரகுரு பொறியியல் கல்லூரியின் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினரும் நம் சுவாமிகளே
  • குமரகுரு பொறியியல் கல்லூரி ஆரம்பித்ததும் அந்த கல்லூரிக்கு 75 ஏக்கர் அப்போதே வழங்கியதும் கௌமார மடாலயம்தான். ஆரம்ப காலத் தலைவர் மற்றும்  நிறுவனர் தவத்திரு கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்தான்.
  • முருகப் பெருமானின் குரு பரம்பரையில் இருந்து வந்த மற்றைய மஹான்கள் தற்போது பெரும்பாலும் இல்லை. அதே போல் முருக வழிபாட்டுக்குறிய கௌமார மடமும் வேறங்கும் பெரிய அளவில் இல்லை.
  • நமக்கெல்லாம் கிடைத்த பெரும்பேறு தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். இவரைத் தரிசனம் செய்தாலே முருகனைத் தரிசனம் செய்வது போல்தான். காரணம் குரு பரம்பரையின் சிறப்பு.
  • சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் கல்வி சேவை செய்வதோடு பல்வேறு ஆலயங்களுக்கு குடமுழுக்கு செய்து பெரும் ஆன்மீக சேவை ஆற்றி வருகின்றார்கள்.
  • தெய்வத்தை வழிபட மொழி ஒரு தடை இல்லை என்றும், அதேசமயம் உண்மையான அன்பைக் கடவுளிடம் செலுத்த மொழி தேவையில்லை என்றும் உபதேசம் செய்கிறார் சிரவை ஆதீனம் அவர்கள்.
  • அதேபோல் வட மொழியும் ஒரு சிறந்த மொழிதான் என்றாலும் நமது தாய் மொழியில் தமிழில் மந்திரம் சொல்லி பூஜை செய்யும் போது நமது மக்கள் அதை எளிமையாகப் புரிந்து கொண்டு இன்னும் பக்தியில் திளைக்கும் வாய்ப்புண்டு எனவும் உபதேசம் செய்கின்றார் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்.
  • இந்தக் கொள்கைகளை மையாமாக வைத்தும் எளிமையான பூஜை முறைகள் வேண்டும் என்ற நோக்கத்திலுமே திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி பூஜைகள் செய்யும் முறைகள் வகுக்கப்பட்டது.
  • பூஜைகளில் தேவை இல்லாத ஆடம்பரங்களைத் தவிர்த்து மிக எளிய முறையில் அதே சமயம் குறைந்த செலவில் ஒரு குடமுழுக்கு செய்யமுடியும்.
  •  குடமுழுக்கு செய்வதற்கு பல லட்சம் செலவு செய்யும் பல ஆலயங்கள் அதன் பின்பு அதை நிர்வாகம் செய்ய வசதி இல்லாமல் தடுமாறுகின்றன. வருடம் ஒரு முறை ஆண்டு விழா என்று நடத்தப்படும் நிகழ்வுகளுக்கே ஒரு குடமுழுக்குக்கு இணையான செலவுகள் ஏற்பட்டு விடுகின்றன.
  •  ஆனால் திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி செய்யும் போது அதிக செலவினங்கள் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. எனவே எல்லா சிறப்பு வழிபடுபாடுகளும் மிக அருமையான முறையில் நடத்தப்படுகின்றது.
  •  நமது கௌமார மடாலயம் இத்தகைய திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் முறைப்படி செய்யும் குடமுழுக்கு, புது மனை புகு விழா, மணி விழா, கடை திறப்பு விழா, திருமண விழா எனப் பல்வேறு விழாக்களை நடத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
  • மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார் பாரதி ஆனால் நமது சிரவை ஆதீனம் தமிழை நிமிடத்திற்கு நிமிடம் போற்றி இறை பக்தியோடு இணைத்து வளர்த்து வருகின்றார்கள்.
  • தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள்தான் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு ஞானகுரு, ஞான ஆசிரியன், உபதேச குரு, தீட்சை குரு எல்லாமே.
  • தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள் காட்டிய அதே வழியில் குளிர்ச்சி பொருந்திய முகத்தோடு, கருணையான உள்ளத்தோடு ஒரு உற்சவர் சிலை போலவே தினமும் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கௌமார நெறியைப் போதித்துக் கண்ணியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்.
  • இது நாள்வரை அடியேன் பழகிய பல மஹான்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்.
  • அதேபோல் எனக்கு தீட்சை குருவும், உபதேச குருவும் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்தான்.
  • கௌமார பயண வாசகர்கள் தனது வாழ் நாளில் ஒரு முறையேனும் கௌமார மடாலய தரிசனம் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று காலை 10 மணி முதல் தண்டபாணிக் கடவுளுக்கு அபிடேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு ஆகிய பூசைகள் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நட்த்தப்படுகின்றது.
  • நமது கௌமாரப் பயண வாசகர்கள் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
  •  அதற்காகவே இறைவன் உங்களுக்கு இதைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்பது எனது கருத்து.
  • இந்த அரிய தகவல்கள் எல்லாம் சீர்மிகு சிரவை ஆதீனம் (சிரவணபுரம் கௌமார மடாலய வரலாறு) எனும் நூலில் இருப்பவையாகும்
  • அந்த நூலின் ஆசிரியர் சிரவை ஆதீனப் பெரும் புலவர் ப.வெ. நாகராஜன் என்பாராகும். அவருக்கு இந்த நேரத்தில் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  • கஜ பூஜை வெள்ளி விழா அன்று இந்த சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் இந்த நூல் மடாலயத்தில் இருந்து 22.03.2012 அன்று வெளியிடப்பட்டது.
  • இந்த நூலை அழகுற அச்சிட்டு அருள் பணி செய்தவர்கள் சிரவை சௌமி அச்சகத்தார். அதன் உரிமையாளர் திரு.தே.திருஞானசம்பந்தன் அவர்கள். அவர் நமது கௌமாரபயணத்திற்காக சுவாமிகளின் வண்ணப்படங்களைக் கொடுத்து உதவியவர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  • தமது 24ம் வயதில் சிரவை ஆதீனமாகி தனது 46ம் வயதான இந்த 22 ஆண்டுகளில் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்களின் கல்வி,ஆன்மீக, சமய, இலக்கிய, சுற்றுப்பயண, புத்தக வெளியீடு அகிய அளப்பெரும் பணிகள் மிகவும் போற்றுதலுக்குரியவையாகும்.
  • இந்த நேரத்தில் எனது ஞானாசிரியன் ஆகிய சிரவை ஆதீனம் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்களைப் போற்றி வணங்கி எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  நன்றி: தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

         என்றென்றும் குருநாதர் சேவையில் இந்த கட்டுரை எழுதியவர்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

1 கருத்து:

  1. எங்கிருந்தேனும் எப்படியேனும்
    பாரம்பரியம் காக்கப்படுகிறது மகிழ்ச்சி. வணக்கம்.

    பதிலளிநீக்கு