வியாழன், 26 நவம்பர், 2015

"சைவ சமய கலைக் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழாவில் சிரவை ஆதீனம்

சைவ ஆகமங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்

சென்னை : "சைவ சமயத்தின் ஆதார நூல்களான சைவ ஆகமங்கள், மீண்டும் தொகுக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் கோவில் சடங்குகளை புரிதலோடு நிகழ்த்த முடியும்' என, கம்பவாரி இலங்கை ஜெயராஜ் பேசினார். தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், சைவ அறிஞர் இரா.செல்வக் கணபதி தொகுத்த, "சைவ சமய கலைக் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது. சைவ சமய வரலாற்றை, 220 அறிஞர்களின் துணையுடன், ஏழு ஆண்டுகளாக பெரிதும் முயன்று, 10 தொகுப்புகளாக, செல்வக்கணபதி உருவாக்கியுள்ளார். அதன், முதல் பிரதியை, தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி நடராஜன் பெற்று கொண்டார்.
படம்: நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கம்ப வாரிதி இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:
சைவ நெறி, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நெறி. உணர்வுக்கும், அறிவுக்கும் முரண்படாத நெறி. சைவ சமயத்தின் ஆதார நூல்களான ஆகமங்கள், 28 என, சொல்லப்படுகிறது. இன்று அவற்றை, தமிழிலோ, சமஸ்கிருதத்திலோ காண முடியவில்லை. ஒப்பற்ற செல்வங்களான அவற்றை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அவற்றை பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம், பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வைத்துள்ளது. 

இன்று சடங்குகள் அர்த்தமில்லாமல், வணிக ரீதியில் செய்யப்படுகின்றன. கோவில் நிர்வாகிகளுக்கும் அவற்றின் அர்த்தமும், தத்துவமும் புரிவதில்லை. அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும், சடங்குகளை புரிதலோடு செய்ய வேண்டுமானால், ஆகமங்களை நாம் மீண்டும் தொகுக்க வேண்டும். அதோடு நின்று விடாமல், அவற்றை தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டும். அதுதான், கோவில் நிர்வாகிகளுக்கு நல்வழி காட்ட, தொகுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சங்ககாலம் முதல், தமிழில் இந்த தொகுப்பு வேலை நடந்து கொண்டே இருக்கிறது. தொகுக்கப்படாத இலக்கியங்கள் காணாமல் போய்விட்டன. சைவ சமய கலைக்களஞ்சியத்தை அரும்பாடுபட்டு தொகுத்த பேரா., செல்வக்கணபதி, ஆகமங்களையும் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

விழாவில், கவர்னர் ரோசய்யா பேசியதாவது:

சைவ சமயம் தொடர்பான வரலாறு, பேரா., செல்வக்கணபதி மூலம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கொள்கைகளை கொண்டுள்ளது. தற்போது தொகுக்கப்பட்டுள்ள சைவ சமய வழிபாட்டு தலங்கள், யாத்ரிக மையங்கள், சைவ சமய வரலாறு, சைவ சமய பாடல்கள், இலக்கியம், சித்தாந்தம் ஆகியன, சமூகத்திற்கு பெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. இவ்வாறு, ரோசய்யா பேசினார்.


நிகழ்ச்சியில், ஆந்திர மாநில ஐகோர்ட் நீதிபதி ராஜ.இளங்கோ, முன்னாள் அரசு செயலர், ஆளுடைய பிள்ளை, திருவாவடு துறை ஆதீனகர்த்தா அம்பலவாண தேசிகர், வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தா சத்தியஞான மகாதேவ தேசிகர், குன்றக்குடி ஆதீனகர்த்தா பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசி மடத்து இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
                                                              என்றும் குரு சேவையில்
                                                 ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்,                                                               ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக