சைவ சமய கலைக்களஞ்சியம் - தலைமை பதிப்பாசிரியர்: இரா. செல்வக்கணபதி; பத்து தொகுதிகள்; பக்.7200; ரூ.15,000 (வெளிநாடுகளில் 500 அமெரிக்கன் டாலர்); தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, சென்னை-90; )044- 2491 6888.
சங்க காலத்திலிருந்து சைவ சமயம் பற்றிய முழுமையான செய்திகளை அறிய தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய நூல்கள் பெருந்துணை புரிகின்றன. பல்லவர் காலத்தில்தான் சைவ சமயம் தமிழ்நாடு முழுவதும் தேவாரம் பாடிய மூவர் பெருமக்களால் பரப்பப்பட்டது. பிறகு சேக்கிழார் பெருமான் திருமுறை நாயன்மார்களை வரிசைப்படுத்தி சைவத்தை வளர்த்தார். ஐந்தெழுத்தைச் செபித்தல், அகத்திலேயே இறைவனை வழிபடல், அர்ச்சனை புரிந்து அமுது படைத்து வழிபடல், பாடல்களைப் பாடி ஆடி வழிபடுதல் போன்ற வழிபாட்டு முறைகள் சைவ சமயத்துக்கே உரிய தொன்மை நெறியாகும்.
இத்தகைய தொன்மையான, சிறப்பான, உயர்வான, சைவ சமயத்தில் பண்டைய நிகழ்வுகள், பிரமாணங்கள், நூலாசிரியர்கள், திருத்தலங்கள், திருமுறை, சித்தாந்தம், வரலாற்றுப் பதிவுகள் போன்ற தகவல்கள் நாளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஞான பொக்கிஷம். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்குப் பயன்படக்கூடிய சைவ சமயக் களஞ்சியம் ஒன்று தேவை என்பதனை உணர்ந்ததன் வெளிப்பாடே இச் சைவ சமயக் கலைக்களஞ்சியமாகும்.
வேத காலத்திற்கு முற்பட்டு இன்று வரை ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகால காலப் பெருவெளியில் சைவ சமய வரலாற்று நிகழ்வுகளை தொய்வில்லாது சரியான ஆதார மேற்கோள்களோடு துல்லியமாய், ஆய்ந்து பல ஆண்டுகள் கண் அயராது, கடிது உழைத்து, சிற்பி சிலை வடிப்பதுபோல் செய்திகளைச் செறிவாய் தந்துள்ளார் நூலாசிரியர். சைவ சமயம் தமிழகம், சைவம் சமயம் உலகம், சைவ திருமுறைகள்,
திருமுறைத் தலங்கள், பிற்காலத் தலங்கள், சைவ சமய அருளாளர்கள், சைவ சமய அருள் நூல்கள், சைவ சித்தாந்தம், சைவ சமய அமைப்புகள், தோரணவாயில் என பத்துத் தலைப்புகளில் பத்துத் தொகுதிகளாக முத்து முத்தாகத் தந்துள்ளார். 22,000 தலைமைப் பதிவுகளாகவும், 50,000 துணைப் பதிவுகளாகவும் உள்ளடக்கி 7200 பக்கங்களோடு பத்து தொகுதிகளும் நிறைவடைகின்றன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட செவ்வகக் கட்டங்களில் ஆய்வுச் செய்திகளும், 5100 தகவல்களும் நிறைந்துள்ள ஞானக் கருவூலம்.
பல்துறை சார்ந்த சைவப் பேரறிஞர்கள் 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவோடு 220 மூத்த சைவத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவோடு தலைமை பதிப்பாளராக பேராசிரியர் இரா. செல்வக்கணபதி இத் தொகுதிகளை உருவாக்கியுள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஆசியுரை, வாழ்த்துரை, அணிந்துரை, ஆங்கில முகவுரை, ஆசிரியர் முன்னுரை, ஆசிரியர் குழுவினர் விவரம், பொருளடக்கம், நூற்பகுதி, பின் இணைப்புகள், பொருளடைவு அகர வரிசையில் என எழுத்துப் பிழையே இல்லாது, உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்போடு இச்சைவ சமயக் கலைக்களஞ்சியத்தினை உருவாக்கி உள்ளார்.
ஓர் அரசோ ஒரு பல்கலைக்கழகமோ பல ஆண்டுகள் கடிது உழைத்து வெளிக் கொணர வேண்டிய இத் திருப்பணியினை தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை என்ற ஒரு தனி அமைப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும்.
நன்றி: சிரவை ஆதீனம்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
என்றும் குருவின் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக