வியாழன், 12 நவம்பர், 2015

மகேஸ்வர பூஜை என்றால் என்ன ?

நமது குருநாதர் ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவநாடியின் மூலமாக அருளிய மகேஸ்வர பூஜையின் சிறப்புகள்  பற்றி கௌமார பயண  வாசகர்கள் பயன்படும் வகையில் இந்த பதிவினை வெளியிடுகின்றோம் 

ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன்  சுவாமிகள் அவர்கள் 


மகேஸ்வர பூஜை  - பெயர் விளக்கம் :-

ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூஜை  மகேஸ்வர பூஜை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மகேஸ்வரர்  எனப்படுவர். அத்தகைய
பெருமை உடைய மகேஸ்வரர்களுக்கு செய்யும் பூஜை மகேஸ்வரபூஜை .

மகேஸ்வர பூஜையின் பெருமை 

புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த  சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மகேஸ்வர பூஜை.

மகேஸ்வர பூஜை எப்படி செய்யப்படுகிறது ?

மகேஸ்வர பூஜையாவது, மகேஸ்வரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மகேஸ்வரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை
ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும்.


சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 


குறிப்பு: பட்த்தில் நீங்கள் காண்பது 27.5.2014 அன்று ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் நடந்த மகேஸ்வர பூஜை, அந்த அற்புதமான பூஜையைச் செய்பவர் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் அவர்களாவார்.
ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு  மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.)

அவர்களை வசதியான இடத்தில் இருக்கையில் அமரச் செய்து, பூஜை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும். 

சிவதருமோத்தரம், 
"புலையரே யெனினுமீசன்
பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச -
மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." 

அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.

இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மகேஸ்வர பூஜை. இந்த மகேஸ்வர பூஜையை தினம்  தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து
சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மகேஸ்வர பூஜை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர் “புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரே” என்று சிவனை சிறிதும் நோகாமல் தொடர்ந்து மகேஸ்வர பூஜை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பரங்கருணையாளன் சிவபெருமான்..


செங்கமலத் தாளிணைகள் சேர வொட்டாத்
 திரிமலங்கள் அறுத்தீசன் நேச ரோடும் செறிந்திட்டு
அங்கவர்தம் திருவேடம் ஆலயங்கள் எல்லாம்
 அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி
என்குமியாம் ஒருவருக்கும் எளியோம் அல்லோம்
 யாவருக்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித்
திங்கள்முடி யாரடியார் அடியோம் என்று
  திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோரே

     சிவபெருமானது செந்தாமரை மலர்ப்பாதங்களை சேரவிடாமல் தடுக்கின்ற மும்மலங்களை(ஆணவம் கன்மம் மாயை )வலிகெடுத்து  சிவபக்திமான்களோடு கூடிக் கலந்து இவர்களின் சிவவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவனெனனவே கண்டு மகிழ்ந்து ஆடிப் பாடி (மல மயக்கம் நீங்காத) எவருக்கும் நாம் எளியர் அல்லோம் ,யாவரினும் மேலானவர் யாம் என்று பெருமிதமும் களிப்பும் உற்று,

திங்களைச் சடையில் தரித்த சிவபிரானின்  டியார்க்கெல்லாம் நாம் அடியோம் என்று கூறிச் சீவன் முக்தர்கள் வாழ்வர்.

              --சிவஞான சித்தியார்  

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

                         திருச்சிற்றம்பலம்

                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக