ஞாயிறு, 29 நவம்பர், 2015

பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்!


                                 ஒளி விளக்குகளில் ஜொலிக்கும் பழனி மலை.

* பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரு நகரங்களான மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து சமதூரத்தில் உள்ளது இக்கோவில்.

*  இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

* தமிழ்க்கடவுளான முருகனை வழிபட கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருகிலேயே பொள்ளாச்சி  அருகே கேரள எல்லை ஆரம்பிப்பதால் கேரளாவில் இருந்து விரதம் இருந்து அதிக அளவு வருகிறார்கள்.

*முதன் முதலில் நேமங்கோவில் குமரப்பன் என்பவர்தான் பழனிக்கு காவடி எடுக்கும் வழிபாட்டை அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து காவடி தூக்கி செல்லும் பாதயாத்திரை முறையை ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திவருவது காரைக்குடி  நகரத்தார்கள்தான் என்பது மறுக்க முடியாதது.

* இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த முறையால் இன்று தென் தமிழகம் முழுவதும் பழனிக்கு காவடி எடுத்து சென்று வணங்கும்  பக்தர்களை அதிகப்படுத்தியது.

* பாரம்பரியமிக்க, தெய்வீகமான இந்த பழநி பாதயாத்திரையை முருக பக்தர்கள் யாரும், சாதாரணமான விசயமாக, விளையாட்டாக எண்ணிவிடாமல் உண்மையான பக்தியோடு, உண்மையான கட்டுப்பாட்டோடு மாலையணிந்து, விரதமிருந்து கந்தனை உள்ளன்போடு நினைத்து பழநிக்கு பாதயாத்திரை வந்தால், எம்பெருமான் முருகன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு நல்வழி காட்டுவான் என்பது நம்பிக்கை.

* இங்குள்ள முருகனது சிலை 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில், குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

* முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

          சித்தர் போகர் நவபாசனத்தால் முருகன் சிலையை உருவாக்குதல் 

* பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திரு ஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

*  பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார்.

* பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த 38 - உப கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கீழ்கண்ட கோயில்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1. அருள்மிகு திரு ஆவினன் குடி கோயில்
2. அருள்மிகு பெரிய ஆவுடையார் கோயில்
3. அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயில்
4. அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் - ஒட்டன்சத்திரம்
5. அருள்மிகு குறிஞ்சியாண்டவர் கோயில் - கொடைக்கானல்
6. அருள்மிகு இடும்பன் மலைக் கோயில் - பழனி

* 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* திருவண்ணாமலை போன்றே எண்ணற்ற மகான்கள் இந்த பழனியில் வாழ்ந்திருக்கின்றனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

                                                                                         
நன்றி: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்.


                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக