செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-33

                       
சுவாமிமலை திருப்புகழ்
குமர குருபர முருக சரவண
     குகசண் முககரி ...... பிறகான
குழக சிவசுத சிவய நமவென
     குரவ னருள்குரு மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
     லதென அநுதின  முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
     மபய மிடுகுர லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
     திசைகள் பொடிபட  வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
     திறைகொ டமர்பொரு மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
     நதிகொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
     நவிலு மறைபுகழ் பெருமாளே.

குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா, யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த இளையோய், சிவ குமாரனே, சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன் அருளிய குருமணியே என்றெல்லாம், அமிர்தத்தை தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல், நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள் தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக அபயம் என்று ஓலமிடும் குரலொலி உனக்குக் கேட்கவில்லையோ
                          
இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிய, எட்டுத்திசைகளும் பொடிபட, போருக்கு வந்த சூரர்களின் குடுமியும் உடலும் விழ, அவர்களின் உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா
                             
யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்  கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா, 
                                  
தாமரை நிறைந்த சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே, ஓதும் வேதங்கள் புகழும் பெருமாளே.
                             
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                 
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
                               ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                       சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக