வியாழன், 11 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-29


                                                  
                                                            ஈச்சனாரி விநாயகர்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான். அருணதள பாத பத்ம அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா என்று சுவாமிமலைத் திருப்புகழில் முருகன் தமிழை அளித்த செய்தி வருகின்றது. தமிழை அகத்தியருக்குப் போதித்து தமிழகத்தை ஆட்கொண்டவர் முருகப்பெருமான். ""சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே'' என்பது திருப்புகழ். முருகனிடம் இருந்து கற்ற தமிழை அகத்தியர் பாண்டிய மன்னனுக்கு கற்றுக்கொடுத்து பாண்டிய மன்னன் சங்கம் வைத்து தமிழை வளரச் செய்ததாக வராலாறு கூறுகின்றது.முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகப்பெருமான் என்று அருணகிரிநாத சுவாமிகள் கந்தர் அலங்காரத்தில் பாடி இருக்கின்றார்.அதுபோல்   அருணகிரிநாதர் அருளிய குருப்புகழ் மேவும் திருப்புகழில் "தமிழ்' பற்றிய பெருமைக்குரிய கருத்துகள் பல இடங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன.
""இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறி'' என்று திருவண்ணாமலை திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியிருக்கின்றார்.
"அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியிருக்கின்றார்.
""தன் தமிழின் மிகுநேய முருகேசா'' என்று சிறுவாபுரி திருப்புகழிலும் ""தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே'' என்று பழனி திருப்புகழிலும் அருணகிரிநாதர் பாடியிருக்கின்றார்.
""வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதமம் அருள்வாயே'' நிம்பபுரம் திருப்புகழ்
""தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே'' என்று சிதம்பரம் திருப்புகழில் வருகின்றது.
 "தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே'' என்று அருணகிரிநாதர் பொதுத் திருப்புகழில் கூறுகிறார்.
""முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி'' என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.
""செஞ்சொல் சேர் சித்ரத்தமிழில் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ?'' என்பது குடந்தைத் திருப்புகழ்.
இப்படி தமிழோடு இணைத்து முருகப்பெருமானைத் தமிழாகவே காண்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். 
                                                      
கோவை கௌமார மடாலயத்தில் மூன்றாம் குரு மஹா சந்நிதானமாக அலங்கரித்த தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள் தமிழ் மீது கொண்ட பக்தியால் தமிழ் முறைப்படி ஆலயங்களில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனும் எண்ணம் கொண்டவராகி பேரூர் ஆதீனம் பெரிய சுவாமிகளுடன் இணைந்து பேரூர் கோவிலில் தமிழ் அர்ச்சனை ஈச்சனாரி வினாயகர் கோவிலில் தமிழ் முறையில் குடமுழுக்கு முதன்முதலில் கண்டு தமிழுக்கு வழிபாடு இயற்றி தமிழையே வழிபாட்டின் மொழியாக அமைத்தார்கள். இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் முறைப்படி திருமணம், குட முழுக்கு என நிகழ்வதற்கு அச்சாரம் இட்டவர் நம் கஜ பூஜை சுவாமிகள். சுவாமிகளின் சீடராக வழி வழி வந்த வள்ளல் எம் ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள். நம் சுவாமிகளும் நாளும் பொழுதும் தமிழைப் போற்றி வளர்த்து வருவதோடு அல்லாமல் தமிழை ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கின்றார்கள். தமிழ் முறையில் தமிழை தமது குரு நாதர் காட்டிய வழியில் வெற்றி நடை போட்டு வீதி தோறும் தமிழை முழங்க வைக்கின்றார்கள். நாம் தினசரி பேசும் தமிழ் முருகப்பெருமான் அருளியது. மொழிக்கடவுள் முருகப்பெருமான். தமிழர் தம் சொந்தக் கடவுள் கந்தக் கடவுளாகிய முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானைப் பரம்பொருளாகக் கொண்டது கௌமார சமயமாகும். அப்படிப் பார்க்கும்போது தமிழ் பேசும் ஒவ்வொருவருமே கௌமாரர்கள்தான். நம் தமிழகமே கௌமார பூமிதான். நம் தமி நாடே கௌமார நாடு. இப்படி சாப்பிடுவது நம்ம வீட்டில் விசுவாசம் என்னவோ பக்கத்து வீட்டில் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். பேசுவது தமிழ் ஆனால் நாம் நமது தமிழ்க்கடவுள் வழிபாட்டு நெறியில் கௌமார நெறியில் எவ்வளவு தூரம் இருக்கின்றோம் என்பதை ஒரே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். உலகம் முழுவதும் சேர்த்து பல லட்சம் மடங்கள் இருக்கின்றன. ஆனால் நமது முருகப்பெருமானைப் பரம்பொருளாகக் கொண்டாடும் கௌமார மடம் கோவையில் உள்ள சிரவை ஆதீனம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 
                                   
சரி தெரிந்தவர்கள் எத்தனைபேர் கௌமார மடம் சென்றிருக்கின்றோம். பெரிய திருப்பணிகள் செய்ய வேண்டாம். சும்மா ஒரு முறை கௌமார மடம் சென்று கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண்குளிர என்றன் முன் சந்தியாவோ எனும் அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் போல் எமது ஞான தேசிகர் கௌமார குரு நாதர் சிரவை ஆதீனம் அவர்களின் கண்களையும் முகத்தையும் சந்திர நிறத்தையும் கண்குளிர எப்போது சென்று காணப்போகின்றீர்கள். இப்போதே முடிவு செய்யுங்கள் தெளிவு குருவின் திருமேனி காண்டல் என்கின்றது  திருமந்திரம். எப்போது நாம் குருவின் திருமேனியைத் தரிசனம் செய்கின்றோமே அப்போதே குருவின் திரு நாமத்தைச் சொல்லத் தொடங்குவோம். தெளிவு குருவின் திரு நாமம் செப்பல் என்கிறது திருமந்திரத்தின் அடுத்தவரி.(சிரவை ஆதீன மரபுப்படி சந்நிதானங்களை அடிக்கடி பெயரைச் சொல்லக்கூடாது ஆனாலும் மனதில் ஒராயிரம் முறை கூடச் சொல்ல்லாம் தவறில்லை). அதற்கு அடுத்தபடியாக தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல் அதற்கு அடுத்து தெளிவு குருவின் திரு உரு சிந்தித்தல்தானே. இது திரு மந்திரம். காரணம் திருப்புகழ் பாடிய அருணகிரி நாத சுவாமிகளின் வம்சாவளி திருமடமே கோவை கௌமார மடமாகும். அருணகிரிநாத சுவாமிகள் அவரின் குரு நாதரைப் போற்றுகின்றார். கௌமாரத்தின் மூல குரு  நாதர் முருகப்பெருமான். நாம் நமது குருவைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் கௌமார சேவை. அப்படி எழுந்ததே இந்த தினம் ஒரு திருப்புகழ் தொடராகும். சரி. இன்றைய திருப்புகழின் சிறு விளக்கத்தைக் காண்போம்.
ஐந்து கரங்களை உடைய விநாயகரைப் போன்ற மனமும்  ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை அருள்வாயே. இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மனம் அருள்வாயே நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக் கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக.
பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை எண்டிசை மதிக்க ... எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக மாதர்கள்தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக
                                                 
நாட்டுக் காவலர்கள் இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி  என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் திருப்புக்கொளியூரில் அவிநாசி என்னும் சிவபெருமான் அருள்பெற்று  முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.
                                                             

யானைமுகப் பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே என்று  கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ள கொங்கணகிரி எனும் தலத்தில் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய திருப்புகழ்.
கொங்கணகிரித் திருப்புகழ்
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள அவர்கள்
                                          
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக