வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-39


தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும் அகலாத இளமையுடய பரம்பொருள்..தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின் தோள்கள் பன்னிரெண்டு. முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம் பதினெட்டுக் கண்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. முருகனின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு. மந்திர எழுத்து ஆறு தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள். முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை ஆயுதமாகும். வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை என்பது பழமொழி.தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து இருக்கும்.இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை. முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றாலும் அழகுதான். 
                                               
எனவே, முருகப்பெருமான் வேறு, தமிழ் வேறு அல்ல, முருகனே தமிழ், தமிழே முருகன்.. எனவேதான் முத்தமிழால் வைதாரையும் வாழவைப்போன் என்றார் அருணகிரிநாத சுவாமிகள். அப்படி தமிழே முருகனாகவும், முருகனே தமிழாகவும் இருப்பதால் நமது கௌமார குரு அருணகிரிநாத சுவாமிகள் இரவு பகல் மட்டுமில்லாமல் எல்லா காலங்களிலும் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ்கூறி முருகா உன்னை வழிபடும் திறனைத்தந்தருள்வாயாக! பரம கருணாநிதியாகியவரே, பரசிவ தத்துவ ஞான சிவபெருமானின் புதல்வனே அருணகிரியாகிய அண்ணாமலையில் அருளும் பெருமாளே என்று தமிழ் பாட அருள்தர வேண்டி அருணகிரிநாத சுவாமிகள் அருணகிரி முருகப்பெருமானிடம் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழ்.
திருவண்ணாமலை திருப்புகழ்
இரவுபகல் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்
திறமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞான
அரனருள்சத் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே!

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

                             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                       சிரவையதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக