மகா மக குளம்
காட்சி 3
காட்சி 4
சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர
சுவாமிகள் அவர்கள் கும்பகோணம் மகாமக விழாவிற்குச் சென்றுள்ளார்கள். அவர் நீராடச்
சென்றிருப்பதை நினைத்த உடனேயே அவர் நீராடும் காட்சி ஸ்ரீஸ்கந்தஉபாசகரின்
மனக்கண்ணில் தெரிகின்றது. உடனே பின்வரும் கவிதை பிறந்தது. எந்த ஒரு சம்பவத்தையும்
நினைத்த உடனேயே ஒரு கவிதை சொல்லும் பழக்கம் நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு
உண்டு. தனது குரு நீராடுகின்ற
காட்சி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் மனக்கண் முன் தெரிகின்றது. அதன் பின் ஒரு
நிமிடத்திற்கு ஒரு கவிதையாய் ஐந்து கவிதைகள் ஐந்து நிமிடத்தில் பிறக்கின்றது. அதை
அப்படியே அவர் அனுபவித்த அற்புதத்தை அவரின் அபிமானிகள் அனைவரும் அனுபவிக்க
வேண்டுமென்று நமது கௌமார பயணத்தில் வெளியிடுகின்றோம்.
கும்பகோணம் துறவியர் மாநாட்டில் சிரவையாதீனம் அவர்கள்
காட்சி 1
முதலிலே தனது ஞானதேசிகரின் பாதத்தை சிரமேல் வைத்து தமது ஞானதேசிகரை மனதிலே
நினைக்கின்றார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். உடனே நீராடியபோது குருவின் பாதங்களில்
உள்ள நீர் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் சிரத்தை ஈரமாக்குகின்றது. குருவிற்கு உடல்
முழுதும் நீர் பட்ட உடனேயே ஸ்ரீஸ்கந்த உபாசகரின் உள்ளத்தில் குருவின் உருவம்
எப்போதும் இருப்பதால் அவரது உள்ளம் குளிர்கின்றது. அதை விளக்கும் கவிதை இதோ:
கவிதை 1
மகத்து தினத்தில் குளத்து நீரில்
குளிக்க நினைத்து திருவடி பதிந்தனை
என் சிரம் நனைந்து என் உள்ளம் குளிர்ந்ததே
உம் திருவடி எம் சிரத்திலும்
உம் உருவம் என் உள்ளத்திலும்
உள்ளதால் அன்றோ!
காட்சி 2
குடந்தை குளத்தில் தனது குருநாதர் குளிக்க வருகின்றார் என்று செய்தியைக்
கேள்விப்பட்டு காவிரி, கோதாவரி, சிந்து எனும் பல நதிகள் குளித்து மகிழ குளத்தை
நோக்கி வருகின்றதாம். என் குரு குளிக்கும் செய்தியை அந்த நதிகளுக்குச் சொன்னது
யார்? என நினைத்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் எழுதிய கவிதை இதோ
கவிதை 2
காவிரியும் கோதாவரியும் சிந்துவென பல நதிகளும்
குடந்தைக் குளத்தில் குளிக்க வருமாம்
சேதி சொன்னதாரடி.....
எம் ஞானதேசிகர் குளத்தில் குளிக்கும்
சேதி சொன்னதாரடி.....ஞானப்பெண்ணே
சேதி சொன்னதாரடி......
மாசி மாதம் மகம் நட்சத்திரம்
பௌர்ணமியை ஒட்டி அமையும் என்பதால் வானத்தில் முழு நிலவு பிரகாசித்துக்
கொண்டிருக்கின்றது. தனது குருவின் முகமும் அந்த முழு நிலவு போல் குளத்தில்
பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இரு நிலவு உள்ளதே என்று மக்கள் அனைவரும் குழப்பம் அடைகின்றார்கள். அந்த எண்ணத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசக்ருக்கு
பிறந்த கவிதை இதோ...
கவிதை 3
மகத்து நாளில் முழு நிலாக் காட்சியது ஞானப்பெண்ணே
முழு நிலாக் காட்சியது....
எம் ஞான ஆசான் முகத்தைப்பார்த்து
குழப்பமடைவர் இரு நிலா காட்சியென்று
ஞானப்பெண்ணே இரு நிலாக் காட்சியென்று
மாசி மகா மகத்தில் குடந்தைக் குளத்தில் நீராடினால் மக்கள் பாவம் போய்விடும்
என்று அனைவரும் நீராட வருகின்றார்கள். அந்தக் குளத்தின் பாவத்தைப் போக்குவது யார்?
தனது குருவின் திருவடி பதிவதால் பாவம் போய்விடும் என்று கருதும் ஸ்ரீஸ்கந்த
உபாசகருக்குப் பிறந்த கவிதை இதோ....
கவிதை 4
மகத்து குளத்தில் மக்கள் கூட்டம் பாவம்
தீரவே
ஞானப்பெண்ணே..... தங்கள் பாவம் தீரவே
குளத்தின் பாவம் தீர ........என்ன செய்வதோ
ஞானப்பெண்ணே என்ன செய்வதோ
எம்ஞானதேசிகர் பாதம் பட்டால்
பாவம் தீருமே......... ஞானப்பெண்ணே பாவம் தீருமே!
காட்சி 5
குளத்தில் தமது ஞானதேசிகர் குளிக்கின்ற இடத்தை நோக்கி தண்ணீரானது முந்திக்
கொண்டு நாம் போய் அவர் குளிக்கும் நீராவோம் எனக்கருதி போட்டி போட்டுக்கொண்டு
செல்வதால் அலை அடிக்கும் காட்சி ஸ்ரீஸ்கந்த உபாசகருக்குத் தெரிகின்றது. அதோ அந்த
கவிதை....
கவிதை 5
குளத்து நீரில் குளிக்கும்போது அலை அடித்ததடி
ஞானப்பெண்ணே அலை அடித்ததடி
என் ஞான ஆசான் பாதம் தொடவே அலை அடித்ததடி
ஞானப்பெண்ணே நீர் அலை அடித்ததடி
ஒரு நிமிடம்
குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். குருவே சிவன் எனக்கூறினான் நந்தி என்பது திருமந்திரம். அந்த வகையில் குருவை
இறைவனாகவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பாவித்து இந்தக் கவிதையை
எழுதியிருக்கின்றார் என்று சொல்வதை விட இறைவன் மொழியை இவருக்குள் வந்த வார்த்தைகளை
அப்படியே கவிதையாக்கியுள்ளார்கள் என்பதே பொருந்தும்.
மகாமகக் குளம் சென்று நீராட முடியாதவர்கள் இந்த
கவிதையையும் காட்சிகளையும் சிரவையாதீன குருவையும் ஒரு முறை நினைத்தாலே போதும் நமது
பாவமெல்லாம் சூரியன் கண்ட பனிபோல் நீங்கிவிடும் என்கிறார் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
அவர்கள்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக