சனி, 13 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-31

                                         
 ஏதேனும் பயணம் செய்யும்போது அவசர உணவிற்காக அவலை எடுத்துச் செல்வார்கள் அதுபோல நமது வாழ்க்கை எனும் பயணத்திற்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை  ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்தெறியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்ற, 
                          
இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும், அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும், எதுகை மோனையுடன் கூடிய ஆசு  , இனிமை வாய்ந்த மதுரம் , கற்பனையும் அழகும் மிக்க சித்திரம் , வர்ணனை மிக்க வித்தாரம் எனும்  நால்வகைக் கவிகளையும்  உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல், தங்கள் மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும் சாமர்த்தியசாலிகளான பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ?  கரும்பு வில்லினை வளைத்து அதில் அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து, மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து செலுத்திய மன்மதனை, தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி தன் நெற்றிக் கண்ணால் எரித்தவரும், கயிலை மலையிலே வீற்றிருப்பவரும்
                         
பர்வத குமாரி உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன் பெற்ற மகனே
                              
மேகங்கள் தங்கும் சோலைகளும், வயல்களும் சூழ்ந்த ஊராகிய இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் விருப்பம் கொள்ளும் பெருமாளே. 
                       
என்று திருத்தணித்திருப்புகழில் பாடி இருக்கின்றார் நம் கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள்.
இந்தக் காலத்தில் குரு சேவை என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மற்றய செய்திகள் அதிகமாக பரவிவிட்டன. காமம் மட்டுமல்ல ஒரு நடிகனுக்கு சங்கம் ஆரம்பித்து மாதம் தோறும் விழா எடுக்கின்றார்கள். இன்னும் ஒரு நடிகனுக்கு பெரிய படம் வைத்து பாலால் அபிடேகம் செய்கின்றார்கள். ஆனால் நமக்காகவே நாள் தொறும் தனது சுய வாழ்க்கையைப் பற்றிக்கூட சிந்திக்காமல் மக்கள் நல்வழிப்பட வேண்டும் எனும் நல்ல நோக்கத்தோடு எத்தனையோ குருமார்கள் நாளும் உழைத்து வருகின்றார்கள். அவர்களுக்கு என ஒரு விழா கூட எடுக்க யாரும் முன்வருவதில்லை. அவ்வளவு ஏன் அவர்கள் யார் என்று கூட தெரிந்து கொள்ள நேரம் இல்லை. ஆன்மீக பூமி நம் தமிழகம். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று போற்றுவது நம் தமிழகம். நம் தமிழகத்தில்தான் இறைவன் நடத்திய திருவிளையாடல்கள அதிகம். இறைவனே வந்து ஆட்கொண்ட அடியார்கள் நமது தமிழகத்தில்தான் அதிகம். 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் தமிழர்களே. தமிழ் நாட்டில் இப்போது இதையெல்லாம் மறந்துவிட்டு மேல் நாட்டுக் காரனுக்கு அடிமையாகி வருகின்றோம். கொல்லாமை, புலால் உண்ணாமை போன்ற உயரிய நெறிகளைக் கடைபிடித்தவர்கள் நம் தமிழர்களே. வள்ளுவரும் ஔவையாரும், தண்டபாணி சுவாமிகளும், கௌமார மடாலய சிரவை ஆதீனங்கள் அனைவரும் போதிக்கின்ற நெறி இன்று நேற்று யாராலேயே ஏற்படுத்தப்பட்டவையல்ல. அவை முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பரம்பரை பரம்பரையாக ஓதி உணர்ந்ததாகும். ஓதுவதுமட்டுமல்ல அப்படியே வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள். இப்படி இருக்கும் குரு நாதர்களுக்கு நாம் விழா எடுக்காமல் விட்டால்கூட பரவாயில்லை அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் சிறு முயற்சியாவது எடுக்க வேண்டும். குருவை அறியாமல் ஒரு போதும் கடவுளை அடையமுடியாது. அப்படியே நேரடியாகக் கடவுளை அறிந்தவராக இருந்தாலும் அந்தக் கடவுளே குருவாக வந்துதான் போதித்து தன்னை உணர்த்தும். இந்த திருப்புகழில் அருணகிரி நாத சுவாமிகள் பாடியது போல் காம நெறியாகிய சினிமா போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடும் அளவு ஆர்வம் நமது குரு நாதர்களைப் போற்றவோ குருமார்களை வணங்கவோ, குரு நெறியில் வாழவோ இருப்பதில்லை என்பது வேதனையான விஷயம். சினிமா பாருங்கள். தவறில்லை. அதில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் மறுமையாகிய அருள் உலகிற்கு அவை எவ்வளவு தூரம் பயன்படும் என்று சிந்தித்துப் பாருங்கள். நாடு முழுவதும் அருணகிரிநாத சுவாமிகளுக்கும் எமது ஞானதேசிகர் தவத்திரு.குமர குருபர சுவாமிகளுக்கும், அனைத்து கௌமார குருநாதர்களுக்கும் விழா எடுத்து நமது கௌமார நெறியை முருகனின் திருவிளையாடல்களை அனைவரும் அறியச்செய்ய வேண்டும். 

தண்டபாணி சுவாமிகள்
நமது கௌமார குரு நாதர்களான அருணகிரிநாத சுவாமிகளின் பாடல்கள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பாடல்கள், தவத்திரு.கந்தசாமி சுவாமிகளின் பாடல்கள், தவத்திரு.சுந்தர சுவாமிகளின் பாடல்கள், தவத்திரு.குமர குருபர சுவாமிகளின் உபதேசங்கள் ஆகியவற்றை உலகம் முழுவதும் மிக எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுத வேண்டும் எனும் ஆர்வம் கொழுந்துவிட்டு எரிகின்றது, எப்படி நடக்கும் எப்படிச் செய்வது எம் ஞானதேசிகர் திருவடி ஆசியும், அருள்மிகு ஞானந்தப்பெருமானின் திருவருளும் கூட்ட வேண்டும். ஒரு பெரிய அளவில் ஒரு குழு இயங்கி அதைச் செய்ய வேண்டும். உலகத்தில் பல லட்சம் மக்கள் தங்களது கைகளில் கௌமாரக் காப்பு அணிந்திருப்பதை அடியேன் கண்குளிரக் காணவேண்டும். எல்லா இடங்களிலும் கௌமார சமயம் போற்றப்பட வேண்டும். குறிப்பாக தமிழக மக்கள் தமிழ்க்கடவுளை நன்றி உணர்ச்சியோடு நாள்தோறும் வழிபட வேண்டும். பாரதிதாசன் சொன்னது போல் இதற்கெல்லாம் தினையளவு நலமேனும் கிடக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்குத் திரு நாள் ஆகும்.  நன்றி!!!
இதோ அந்தத் திருத்தணித் திருப்புகழ்
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
     இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
 இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
     னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
 தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
     தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
 தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
     சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
 கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
     களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
 கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
     கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
 பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
     புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
 புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
     பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,அந்தியூர்.


ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக