புதன், 10 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-28

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கண்ட கௌமார தரிசனம் பற்றி இதுவரை நாம் பல இடங்களில் பார்த்து வந்தோம். அதாவது சமய, சமரச, சமயாதீத தத்துவமே அது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதைப்பற்றிய கூடுதல் மெய்ஞானத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷமான புத்தகங்கள் கோவை கௌமார மடாலயத்தில் இருக்கின்றது. தண்டபாணி சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் அடங்கிய ஓலைச்சுவடிகள் கௌமார மடாலயத்தில் இருக்கின்றது. அந்தப் பாடல்களை சுவடியில் இருந்து எடுத்து எழுதி அதைப் பொருளோடு எமது ஞானதேசிகர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்களின் ஆசியோடு புத்தகவடிவில் எழுதிவருகின்றார் பழுத்த தமிழ் ஞானியான சிரவைஆதீனப் பெரும் புலவர் திரு. ப.வெ.நாகராஜன் ஐயா அவர்கள். 
                                                
            படம்:சிரவையாதீனப் பெரும்புலவர் ப.வெ. நாகராஜன் அவர்கள்
புலவர் அவர்கள்  நம் சுவாமிகளின் குருநாதர் தவத்திரு.கஜ பூஜை சுந்தர சுவாமிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்து பல்வேறு தமிழ்ச்சேவைகளைச் செய்தவர்.  வாசகர்கள் அனைவரும் கௌமார மடாலயத்தில் வெளியிடப்படும் அனைத்து நூல்களையும் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன். தமிழை ஆய்வு செய்பவர்களுக்கு என ஒரு பெரிய நூலகமே கௌமார மடாலயத்தில் இயங்கி வருகின்றது. தண்டமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழையே போற்றி பெரும் சேவை செய்து வருகின்றார் எமது ஞானதேசிகர் அவர்கள். புலவர் அவர்கள் எழுதிய சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் கௌமார மடாலய வரலாற்று நூலே அன்னை மீனாட்சி நாடியில் உரைத்த எனது முன் ஜென்ம தொடர்பிற்கு பெரும் விளக்கத்தை எனக்கு அளித்தது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது திருவண்ணாமலை மீனாட்சி நாடி எனும் ஓலைச்சுவடி. அதில் காடை குலத்தில் வேளாளர் வம்சத்தில் கொங்கு நாட்டில் இவன் ஒரு மடம் சமைத்து கௌமார சேவை செய்வான் என்றும் அதே காடை குலத்தில் வேளாளர் வம்சத்தில் கொங்கு நாட்டில் தோன்றிய கௌமார மடாலயத்தில் முன் ஜென்ம தொடர்புடையவன் இன்னவன் என்பதால் அங்கு உபதேசம் பெறுவான் என்று அடியேனைப் பற்றி எழுதப்பட்ட குறிப்பு அன்னை மீனாட்சி நாடியில் இருக்கின்றது. அந்தியூர் எனும் பெயர்கூட இருந்தது ஆச்சரியம். இதை என்னிடம் நெருக்கமாக இருக்கின்ற சில அடியார்கள் மட்டுமே அறிவார்கள். நீண்ட காலமாக ஒரு விடை கிடைக்காமல் அலைந்து வரும்போது கௌமார மடாலய வரலாற்று நூலான சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் நூலைப் படிக்க நேரிட்டது. அந்த நூலில் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை கௌமார மடலாயம் கொங்கு வெள்ளாளர் வம்சத்தில் காடை குலத்தில் அவதாரம் செய்து கௌமார மடாலயம் ஸ்தாபித்த வரலாற்றையும் காண நேர்ந்தது. நாடியில் எழுதப்பட்டது 100% மிகச்சரியாக இருப்பது கண்டு ஏற்கனவே 13 வயதில் முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை தவத்திரு. வேலுச்சாமி அடிகளார் அவர்களிடம் பெற்று கடந்த 20 ஆண்டுகளாக முருக உபாசனை செய்து வந்தாலும் மீனாட்சி நாடி உரைத்த முன் ஜென்ம குரு பீடமாகிய கௌமார மடாலயத்தில் மஹா சந்நிதானம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்களிடம் உபதேசம் பெற்றேன். உபதேசம் கொடுத்த உடனேயே ஒரு ஆச்சரியம் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்ன அது? 20 ஆண்டுகளுக்கு முன்பு தவத்திரு. வேலுச்சாமி அடிகளார் என்ன மந்திரத்தை உபதேசம் செய்தார்களோ அதே மந்திரத்தை எமது ஞான தேசிகர் எனக்கு உபதேசம் செய்ததுதான் அந்த ஆச்சரியம். இது பூர்வஜென்மத்தை உறுதி செய்வதற்கு ஆதாரமாக அமைந்தது.இதையெல்லாம் எதற்காக எழுதுகின்றேன் என்றால் தெய்வ நம்மிக்கையும் குருபக்தியும் இருந்தால் எல்லாமே நம்மைத் தேடி வரும் என்பதற்குத்தான் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்கே.       மற்ற படி இது சுய விளம்பரமாகாது என்பதும் கண்கூடு. நமது முன்னோர்கள் பலர் தாம் கண்ட தெய்வீகக் காட்சிகளை அவர்களுக்குள்ளேயே மறைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். எனவே இளைஞர்கள் அந்த இறையருள் சுவையை உணராமல் நாத்திகவாததில் சிக்கி வயது போன பின்பு சங்கரா...சங்கரா... என்கின்றனர். எனவே என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுவது வழக்கம். இது ஒரு மனிதனையாவது குருபக்தியில் ஆழ்த்திவிட பயன்பட்டால் போதும். மற்றவை தானாக நடக்கும். இப்படி எனது முன் ஜென்ம கண்ணைத் திறந்தது மீனாட்சி நாடிதான் என்றாலும் அதற்கு வழிகாட்டியது பெரும்புலவர்.ப.வெ.நா ஐயா அவர்கள் எழுதிய சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் புத்தகமே. முதன் முதலாக எமது ஞானதேசிகரைச் சந்தித்த போது  நமது பாரம்பரிய முருக பக்தியைக் கைவிட்டுச் செல்லும் மக்களை மீண்டும் முருக வழிபாட்டின் அமுதத்தைத் சுவைக்க வைக்க வேண்டும் என்று உபதேசம் செய்தார்கள். அப்போதே நாம் அந்த வழியில்தான் இருக்கின்றோம் எனும் ஒரு பெருமிதம் ஏற்பட்டது. அதன்பின்பு நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைத்து மூன்று ஆண்டுகள் கழித்த பின்பே எமது ஞானதேசிகர் அவர்கள் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு திருக்கல்யாண உற்சவத்திற்கு எழுந்தருளினார்கள். 
                                         
படம்:ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு திருக்கல்யாண உற்சவத்திற்கு எழுந்தருளிய எம் ஞானதேசிகர் அவர்களுடன் அடியேன்
திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்கள் பழனியில் உபதேசம் பெற்று கோவையில் கௌமார மடம் சமைத்த்து போல் அடியேன் கோவை கௌமார மடாலயத்தில் இருந்து உபதேசம் பெற்று நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தைச் சமைக்கும்படி திருவருள் கூட்டியுள்ளது அடியேனின் பாக்கியம். இந்தத் தகவல் மீனாட்சி நாடியில் இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எனவே நமது  ஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு குரு பீடமாகத் திகழ்வது கோவை சிரவை ஆதீனமாகிய கௌமார மடாலயம்.
                                       
சரி திருப்புகழ் விளக்கத்தைப் பார்போம்.முருகப்பெருமானே அருணகிரிநாத சுவாமிகளுக்கு குருவாகின்றார். குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். அதன்படி சிவபெருமானுக்கும் முருகப்பெருமானே குருவாக இருந்து அது விளையாட்டாக இருந்தாலும் கூட உபதேசம் செய்தது உண்மைதானே. எனவே தனது குருவாகிய முருகப்பெருமானே சமரசக் கொள்கையின்படி அருணகிரிநாத சுவாமிகளுக்கு அந்த சிவபெருமானாகவே தெரிகின்றார். சிவன் பார்வதியிடம் கூறுவதாக கந்த புராணத்தில் வருகின்றது இந்தச் செய்தி. பார்வதி... இந்த பாலகன் சாட்சாத் என் ரூபமே என்று உபதேசம் செய்கின்றார் சிவபெருமான். சிவனின் ஆறுமுகம்தானே முருகப்பெருமான். எனவே சிவனுக்கும் முருகனுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. அதை சமரச உணர்வில் திளைத்துக் கொண்டு திருச்சிற்றம்பலமாகிய தில்லை எனப்படும் சிதம்பரம் நடராஜரை அருணகிரிநாதசுவாமிகள் தரிசனம் செய்கின்றார். அப்போது அம்பலத்தே ஆடும் ஐயன் அவருக்கு சமரச உணர்வில் முருகப்பெருமானாகவே காட்சி தந்திருக்கின்றார். உடனே பின்வரும் பொருளில் ஒரு திருப்புகழ் பாடுகின்றார் அருணகிரிநாத சுவாமிகள் அவர்கள்.

பரமசிவனுக்கும் குருநாதனே,கருணையுடன் உபதேசிப்பவனே,அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான்.  முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். மண்ணும், விண்ணும்,அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான். ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான் பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். பொன்னம்பலத்தில் சிதம்பரத்தில் பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே. என்பதே இந்தத் திருப்புகழின் பொருளாகும். இதோ அந்த சமர உணர்வுத் திருப்புகழ்.
சிதம்பரம் திருப்புகழ்
பரமகுரு நாத கருணையுப தேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
 பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
     பகருமதி காரப் ...... பெருமாள்காண்
 திருவளரு நீதி தினமனொக ராதி
     செகபதியை யாளப் ...... பெருமாள்காண்
 செகதலமும் வானு மருவையவை பூத
     தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்
 ஒருபொருள தாகி அருவிடையை யூரு
     முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்
 உகமுடிவு கால மிறுதிகளி லாத
     உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்
 கருவுதனி லூறு மருவினைகள் மாய
     கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்
 கனகசபை மேவி அனவரத மாடு
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.
  நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம். அந்தியூர்.
                                      

2 கருத்துகள்:

  1. எல்லாம் நம் அப்பன் முருகன் அருளன்றி வேறென்ன? முருகன் திருவடி சரணம்

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் நம் அப்பன் முருகன் அருளன்றி வேறென்ன? முருகன் திருவடி சரணம்

    பதிலளிநீக்கு