பழநி திருப்புகழ்
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ
நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே
பிறவியற
நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
இப்படிப் பொருள்படும்படி பழனி மலையைப் பற்றி திருப்புகழ் பாடி இருக்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். திருஞானசம்பந்தர் முருகனின் அம்சமாக வந்தவர் என்பதும் அவர் பாடிய பாடல்களையே இந்தத திருப்புகழில் விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே என்று பாடி இருக்கிறார் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
அருணகிரிநாதரின் அம்சமாகிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பழனியில் மடம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள அவர்கள் இயற்றிய தியானானுபூதி எனும் நூலை அடிக்கடி படித்து இன்புற்று அந்த நூலை இயற்றிய சுவாமிகளையே தமது குருவாகக் கொள்ள வேண்டும் என்று கருதி வந்தார்கள். அந்த சமயத்தில் சண்முகமாலை எனும் நூலை சுவாமிகள் இயற்றி வந்தார்கள் அந்த நூலில் ஒரு பாடலில் குருவாக வந்து என்னை எப்போது ஆட்கொள்வாய் முருகா எனும் பொருளில் பாடல் இயற்றும் நேரத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பழனியில் இருக்கின்ற செய்தி ஒருவர் மூலம் கிட்டுகின்றது. உடனே சென்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்து அவரிடம் ஆறெழுத்து மந்திரத்தையும் ஒரு ஆறு முகருத்திராட்சமும் விபூதிப்பையும் பெற்று கோவைக்கு வந்து கௌமார மடாலயத்தை ஸ்தாபித்தார்கள். இப்போது 100 ஆண்டுகள் கடந்து மிகவும் பாரம்பரியமான் முறையில் கௌமார மடாலயம் திகழ்ந்து வருகின்றது. முதல் சந்நிதானம் அவர்கள் பழனியில் உபதேசம் பெற்றதால் அடுத்த சந்நிதானம் முதல் பழநி சென்று அருளாட்சி ஏற்கின்ற ஒரு முறை கௌமார மடாலயத்தில் கடைபிடிக்கப்படுகின்றது. எமது ஞானதேசிகரும் தான் பீடமேற்ற ஏழாவது ஆண்டில் பழனி சென்று முறைப்படி அருளாட்சி ஏற்றார்கள்.
பழனியில் இருக்கின்ற பட்டணம் சுவாமிகள் மடமும் தற்போது கௌமார மடாலயத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.
எமது ஞானதேசிகர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பழனியில் பட்டணம் சுவாமிகளுக்கு குரு பூஜை நடத்தி வருகின்றார்கள். இப்படி பழனிக்கும் கௌமார மடாலயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அப்படிப்பட்ட பழனியை அருணகிரிநாத சுவாமிகள் உனது பழனிமலை எனும் ஊரைச் சேவித்து அறியேனே என்று பாடுகின்றார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளை ஒரு பொய் உரைத்ததற்காக தனது வாழ்நாளில் கடைசிவரை பழனி செல்ல முடியாதபடி விளையாட்டுக் காட்டியவர் முருகப்பெருமான்.
எனது முதல் உபதேச குரு நாதர் தவத்திரு.வேலுச்சாமி அடிகளார் அவர்கள் 45 ஆண்டுகளாகத் தவறாமல் தைப்பூசக் காவடியை பழனிக்கு எடுத்துச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதிசயம் அனேகமுற்ற பழனி என்று சுவாமிமலைத் திருப்புகழில் பாடி இருக்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். அதேபோல் படிக்கின்றிலை பழனித்திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை என்றும் பாடுகின்றார். இப்படி மகிமை வாய்ந்த இந்த பழனிமலைத் திருப்புகழைப் பாராயாணம் செய்பவர்களுக்கு இந்த உலகில் பெரும் செல்வந்தனாக வாழும் வாழ்வை அந்தப் பழனி மலை முருகப்பெருமான் அருள்வார் என்பது திண்ணம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக