திங்கள், 22 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-38


கல்லுதல் என்ற சொல்லுக்குத் தோண்டுதல் என்று பொருள். ஒருவன் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள சிறந்த கல்வி தேவைப்படுகின்றது. ஆனால் கல்வி கற்ற பின்பு பலரை எதிர்த்துப் பேசியும், தேவையில்லாமல் தாக்கியும், வாதம் விவாதம் செய்யவல்ல நூல்களைக் கற்று எப்போதுமே தர்க்கத்தில் ஈடுபடுகின்றவர்களும் ,
                                                
  இந்த உலகில் வாழ நிச்சயம் பொருள் வேண்டும், பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஆனால் அந்தப் பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடுக்காமல் வாழ்க்கை நடத்துபவர்களும்
                              
மாதொருபாகன் சிவபெருமானின் செல்வமே என்று முருகா உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும்
                               
தர்மநெறி மாறாத பெரும் யமன் இருக்கும் ஊரில் புகுந்து பிறந்து அலைச்சல் உறுவார்களாக இருப்பார்கள்.  நாத ரூபமாகிய இசையின் ஒட்டுமொத்த உருவமாக இருப்பவனே, மகாதேவராகிய சிவபெருமானின் திருவுள்ளத்தில் வீற்றிருப்போனே, சுவர்க்க லோகம் முதலிய பதினான்கு உலகங்களுக்கும் உரிமைக்காரனாக விளங்குவோனே, தீமையே செய்யாத வேல் வீரனே, சேவலைக் கொடியாக உடையவனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாக இருப்பவனே என்று நம் கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள் இந்தத் திருப்புகழில் பாடியுள்ளார். இதோ அந்த பொது திருப்புகழ்.
திருப்புகழ் பொதுப்பாடல்
காதி மோதி வாதாடு நூல்கற்   றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப்  பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக்  குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் கலைவாரே
நாத ரூப மாநாத ராகத்       துறைவோனே
நாக லோக மீரேழு பாருக்  குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற்      கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப்  பெருமாளே.

எனவே கல்வி அறிவு உடையவர்கள் தேவையில்லாமல் வீண் வாதங்களில் ஈடுபடாது குரு சொல்லும் மொழிகளைக் காதால் அடிக்கடி கேட்டு உள்வாங்கி உள் மனதில் அதை நிலை நிறுத்திக் கடைபிடித்து வரவேண்டும். அதேபோல் நல்ல செல்வ வளம் உடையவர்கள் தங்களது செல்வத்தின் ஒரு பகுதியை கௌமார நெறியாகிய குரு சேவைக்கு என ஒதுக்கி குரு புகழ் பாடியும், முருகப்பெருமானின் ஆலயங்களுக்கும், முருகனை பரம்பொருளாகக் கொண்டாடும் கௌமார சமயத்தார்களுக்கும் தேவையான சேவைகளைச் செய்து நல்ல நிலையை அடையலாம். சிவபெருமானே தனது செல்வமென நினைப்பவர் முருகப்பெருமான். எனவே எந்த நேரமும் முருகா...முருகா..எனும் இறை நாமத்தை ஓதி ஓதி உள்ளம் குழைந்து நெக்குறுகி முருகனை மனதால் வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எவர் ஒருவர் குருவை வழிபடுகின்றாரோ அவர் குகனாகிய முருகனை வழிபடுகின்றார் என்கின்றது சாத்திரம். 
                                 
எனவே தங்கள் குருவிற்கு உற்ற சேவைகளைச் செய்கின்ற வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.இப்படி இருப்பவர்கள் எமன் ஊர் புகமாட்டார்கள். மாறாக கந்தன் ஊர் புகுவார்கள் என்பது திண்ணம். முருகப்பெருமான ஈரேழு பதினான்கு உலகங்களும் புகழும் தெய்வம் என்பதால் நிச்சயம் இகபர சௌபாக்யம் அடைவது உறுதி.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக