சனி, 20 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-37

                           
பழமுதிர்ச்சோலை திருப்புகழ்
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி  அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி  வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி  வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம  முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.
                                                                


எங்கு எரிந்த கல்லும் வந்து இந்தப் பூமியில் எப்படி விழுந்திடுமோ அப்படி அவரவர் எப்படி எத்தன்மையில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவர்களுக்குச் சென்று அருள்வது ஒரே பரம்பொருள்தான் என்பது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார கூற்றாகும். அதேபோல் ஆரம்ப நிலையில் எந்த தெய்வத்தை ஒருவன் வழிபடுகின்றானோ அதே தெய்வமே அனைத்து தெய்வமாக அவதாரம் செய்து அருள்கின்றது என்று அந்த பக்தன் எண்ணுவதே சமய, சமரசக் கொள்கை என்பதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார கூற்றாகும். அந்த சமய, சமரச உணர்வில் நின்று அருணகிரிநாத சுவாமிகள் இந்தத் திருப்புகழைப் பாடியுள்ளார்.அதனால்தான் அனைத்துமாக நின்று அருள்வது முருகனேதான் என்று பாடுகின்றார். தொடர்ந்து படியுங்கள் இந்தத் தத்துவங்கள் புரியும்.
   எழுத்துக்களில்
எனும் எழுத்து முதலில் இருப்பது. வள்ளுவரும் அகர முதல எழுத்தெல்லாம் என்கிறார். அந்த எழுத்து போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி  யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைக்கும் கடவுளாகி  திருமால் என்னும் காக்கும் கடவுளாகி சிவன் என்னும் அழிக்கும் கடவுளாகி அந்த மும்மூர்த்திகளுக்கும் மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் அனைத்துமாகி  எங்கெங்கும் உள்ள பொருட்களுமாகி இனிமை தரும் பொருளாகி வருகின்ற முருகப்பெருமானே!
                             
    மிகவும் பிரமாண்டமான இந்த பெரிய  நிலத்தில்  எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும், யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் வலாசுரப் பகைவனாகிய இந்திரன் மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே, 
                           
முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காமத்தில் உள்ள முருகப்பெருமானை கிருத்திகை விரதம் இருந்து வழிபட்டு வணங்கி, அருள் பெற்ற காட்டில் வசித்த வேடன் அந்திமான் செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் உடையோனே 
                                
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே செல்வங்கள் அனைத்தும் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
                                  
என்று பழமுதிர்சோலை முருகன் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயணத் திருப்புகழ். இந்த திருப்புகழை சதா காலமும் ஓதுகின்றவர்கள் நாவிற்கு அடிக்கடி அறுசுவை உணவு கிட்டும் என்றும் எப்போதுமே அவர்கள் கையில் பணம் புரளும் என்றும் அந்த அளவு லட்சுமி கடாட்சத்தைத் தரவல்லது இந்தத் திருப்புகழ் என்று சொல்லப்படுவதால் வாசகர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இது போன்ற திருப்புகழை மனப்பாடம் செய்து கொண்டு மனதில் ஜபித்து வர முயற்சி எடுக்கலாம். ஒரு சில நல்ல நிகழ்ச்சிகள் நடக்கத் துவங்கியவுடன் நீங்களே இதன் மகிமையை அறிந்து கொண்டு செயல் புரியத் துவங்குவீர்கள்.
நன்றி:சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                              
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
    சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக